பசுமைப்புரட்சி என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டுள்ள சாய்ந்தமருது பிரதேசமும், அங்கு பிறந்தவர்களுக்கு அரசியல் செய்ய முடியாத நிலைமையும்

0
494

iqbal sainthamaruthuவீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய நாடு முழுவதிலும் நேற்று திங்கள்கிழமை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. இது மாற்று கட்சியினர்களை பொறாமைப்பட வைத்ததுடன், பிற சமூகத்தினர்களை மூக்கில் விரல்வைத்து பேசும் அளவுக்கு அந்நிகழ்வுகள் அமைந்திருந்தது.

ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை தொடர்ந்து வழங்கிவரும் சாய்ந்தமருது பிரதேசத்தில் அவ்வாறான நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் சாய்ந்தமருதில் பசுமைப் புரட்சி நடைபெற்றதாக விளையாட்டுதுறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முகநூலில் பதிவு செய்யப்பட்டதோடு, சில இலத்திரனியல் ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் இவ்வாறான நிகழ்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்து வழிநடாத்தி இருக்கையில், சாய்ந்தமருதில் மட்டும் ஏதோ ஒரு அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியானால் சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் இல்லையா? சாய்ந்தமருதில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்டமைப்புகள் எங்கே? போராளிகள் எங்கே? தியாகிகள் எங்கே?

ஏனைய ஊர்களின் அரசியலுடன் ஒப்பிடுகையில் சாய்ந்தமருது அரசியல் ஒரு விசித்திரமானது. முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் சாய்ந்தமருதில் செயல்திறன் உள்ளவர்களும், துறைசார்ந்த நிபுணர்களும், மக்கள் செல்வாக்கு உள்ளவர்களும், பணம் படைத்தவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் நின்றுபிடிக்க முடியாது. வெட்டுக்குத்துக்களின் அகோரத்தினால் எப்படியும் விரட்டப்பட்டுவிடுவார்கள். அல்லது விரண்டுவிடுவார்கள். அல்லது விரக்தியின் உச்சநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.

அப்படியானால் சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யாரின் கையில் உள்ளது என்ற கேள்வி எழும்பக்கூடும். நிச்சயமாக சாய்ந்தமருதில் பிறந்து வளர்ந்த இவ்வூருக்கு சொந்தக்காரர்களின் கையில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் இல்லை என்பதுதான் அதற்கான தெளிவான பதிலாகும்.

எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் கட்சி செயல்பாடுகளுக்கு பணம் முக்கியமானதாகும். பணம் இல்லாவிட்டால் ஒரு கூட்டத்தைக்கூட நடாத்த முடியாது. எல்லாவற்றுக்கும் தலைவரிடம் பணம் கேற்பதும் நாகரீகம் அல்ல. ஆனால் சாய்ந்தமருது அரசியலில் தங்களது சொந்த பணத்தின் மூலம் கட்சிக்காக செலவழிக்க கூடியவர்கள் பலர் இருந்தும் அவர்கள் யாரும் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் இல்லை.

அவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு துரோகம் செய்தார்களா என்று ஆராய்வதனை விட, துரோகம் செய்ய தூண்டிவிடப்பட்டார்களா என்று ஆராய்வதன் மூலம் பலவிதமான உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்.

இன்று ஒன்றை நாங்கள் அவதானிக்க முடியும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கடந்த பொதுதேர்தலுக்கு பின்பு கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஊர்களிலும் பலவிதமான நிகழ்வுகளில் கலந்து கொண்டதனை எங்களால் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆனால் அப்படியான எந்தவொரு நிகழ்வுகளோ, பொதுக்கூட்டங்களோ சாய்ந்தமருதில் நடைபெறவில்லை. அப்படியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு தகுதியான பணம் படைத்த எவரும் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் இன்று இல்லை. பச்சத்தன்னியில் பலகாரம் சுடுகின்ற அரசியலை தொடர்ந்து நடாத்த முடியாது.

எனவே யாரோ ஒருவரின் வளவுக்குள் மரக்கன்று ஒன்றினை நாட்டிவிட்டு சாய்ந்தமருதில் பசுமைப் புரட்சி என்று ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிடுவதன் மூலம் சாய்ந்தமருது மக்களையும், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளையும் ஏமாற்றிவிட முடியாது.

முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது

LEAVE A REPLY