சிரியாவில் 3 லட்சம் பேர் உணவின்றி தவிப்பு

0
95

sirya_2955856fசிரியாவில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவின்றி பரிதவித்து வருகின்றனர்.

சிரியாவில் மிதவாத எதிர்க் கட்சிகளுக்கு அமெரிக்காவும் அதிபர் ஆசாத் துக்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன. சிரியாவின் 2-வது பெரிய நகரான அலெப்போ, அல்-காய்தா ஆதரவு தீவிரவாதிகளின் வசம் இருந்தது. அந்த நகரை அண்மையில் அதிபர் ஆசாத் படைகள் கைப்பற்றின.

இந்தப் பின்னணியில் அல்-காய்தாவில் இருந்து ஒரு தரப்பினர் கடந்த வாரம் பிரிந்து ஜபாத் பத்தா அல்-ஷாம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கினர். அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த சில நாட்களாக அலெப்போ நகரை முற்றுகையிட்டு தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். நகரின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வேகமாக முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த நகரில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவு, மருந்து பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். நகரை சுற்றி தீவிரவாதிகள் முற்றுகையிட்டிருப்பதால் அலெப்போ நகருக்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என்று செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் உணவு, மருந்து பொருட்களுடன் நேற்று அலெப்போ நகருக்கு சென்றது. அந்த ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் விமானி உட்பட 5 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY