இலங்கை முஸ்லிம்களுக்கு தனிக் கட்சி அவசியமில்லை: காத்தான்குடியைச் சேர்ந்த டொக்டர் அமீர் அலி

0
147

(அஸ்லம் எஸ்.மௌலானா)

8377b83c-a5dc-4292-9053-e51f547d4b16இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இன ரீதியாக தனியான கட்சிகள் அவசியமில்லை. அவ்வாறான கட்சிகளின் தோற்றத்தினால்தான் இன்று முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியரான காத்தான்குடியைச் சேர்ந்த டொக்டர் அமீர் அலி தெரிவித்தார்.

மர்ஹூம் சேர் ராசிக் பரீத் தேசியக் கட்சியில் அங்கம் வகித்து கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்காக ஆற்றிய சேவைகளை விட வேறு எந்த முஸ்லிம் அரசியல் தலைமையும் தனிக் கட்சிகளினால் எதையும் சாதித்து விடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா தலைமையில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் பேசுகையில் மேலும் கூறியதாவது;

“முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம் என்று கூறுகின்றார்களே. அப்படி இந்த நாட்டில் மாற்று இனங்கள் அனுபவித்துக் கொண்டு, எமக்கு மறுதலிக்கப்பட்டிருக்கின்ற உரிமைகள் எவை என்பதை யாராவது பட்டியலிட்டு சொல்ல முடியுமா? நிச்சயமாக ஒன்றும் இல்லை. அவரவர் அரசியலுக்கான கோஷங்கள்தான் அவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள தயாரில்லை. அதனால் இந்த இழிநிலை தொடர்கின்றது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். எதையும் நேர்மையாக சிந்திப்பதற்கு தயாரில்லை. எமது பெறுமதியான இளைஞர்கள் வைராக்கியமிக்கவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர். எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் பிரிந்து நின்று கோஷமிடவே பழக்கப்பட்டிருக்கின்றோம். இவைதான் முஸ்லிம் கட்சிகளினால் எமது சமூகத்திற்கு ஆற்றப்பட்டுள்ள சாதனைகளாகும்.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் பூர்வீக குடிமக்கள் என்கின்றோம். நூற்றாண்டு கால பழைமையை சொல்கின்றோம். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டா? எமது வரலாறு எழுதப்பட்டிருக்கிறதா? புராணக் கதைகள், சட்டத்தின் முன் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எமது சமூகம், எமது பிரதேசங்கள் தொடர்பில் முக்கிய விடயங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் எம்மிடம் கிடையாது. ஆவணங்கள் இல்லை. அவற்றை சேகரிப்பதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் கோஷம் மட்டும் எழும்பிக் கொண்டிருக்கின்றோம்.

பிரச்சினைகள் எழுகின்றபோது நாம் இனத்தை முன்னிறுத்துகின்றோம். அது பிரச்சனைகளை இன்னும் ஊதி பெருப்பித்து பூதாகரமாக மாற்றி விடுகின்றன. நாமும் இந்த நாட்டு பிரஜைகள் என்றே எமது தேவைகளைக் கேட்க வேண்டும். எமது பிரச்சனைகளை நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் அணுகினால் நீதிமன்றம் கூட எமக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுத்தரும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் அவ்வாறுதான் தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு, மாற்று இனத்தவருடன் பகைமை பாராட்டுவதனால் நாம் எதனையும் சாதித்து விட முடியாது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில், அதுவும் நாம் சிறுபான்மையினராக வாழ்கின்ற சூழ்நிலையில் அனைத்து விடயங்களிலும் மாற்று இனத்தவருடன் கைகோர்த்து செயற்படுவதன் மூலமே அவர்களது அரவணைப்பை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முடியும். அப்படி ஒரு நிலைமை தோன்றுமாயின் நமக்கு யார் அநியாயம் இழைக்கப்போகிறார்கள்?

சிந்திக்காமல் செயற்படுவதனால்தான் நாம் சாதாரண விடயங்களை கூட சாதித்துக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றோம். கசப்பாக இருந்தாலும் உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் எம்மிடம் வர வேண்டும்.

முஸ்லிம் தேசியம் பற்றி பேசுகின்றோம். ஆனால் நம்மிடம் போதுமான நிலம் இல்லை என்பதை நாம் அறியாமல் இருக்கின்றோம். நிலம் இல்லா விட்டால் தேசியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 30 வீதமாக வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கான நிலம் 03 (மூன்று) வீதம் மட்டுமே உள்ளது. இதனை அதிகரிப்பதற்கோ, இருப்பதை காப்பாற்றுவதற்கோ எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இது போன்று முஸ்லிம்களுடன் தொடர்புடைய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பக்கச்சார்பின்றி தொகுக்கப்பட வேண்டும். நிறுவன ரீதியாக இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த யதார்த்தங்களை புரிந்து கொண்டு சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஐம்பது இளைஞர்கள் முன்வருவார்கள் என்றால் அவர்களை வழி நடத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்” என்றார்.

அவரது உரையைத் தொடர்ந்து அவரால் சொல்லப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்தார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

LEAVE A REPLY