தென் சூடான் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ரத்து

0
88

suda-MMAP-mdஇவ்வருட சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தென் சூடான் ரத்துச் செய்துள்ளது. சிவில் யுத்தத்தால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் அகதி களாக்கப்பட்டும் வருகின்றனர். பொருளாதாரம் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இந்நிலமையைக் கருத்திற் கொண்டு இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக தகவல் அமைச்சர் மைக்கல் மக்குவே தெரிவித்தார்.

சூடானிலிருந்து தென் பகுதி பிரிந்தது முதல் இதுவரை தென் சூடானில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை. கிறிஸ்தவ மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பின்பற்றும் கோத்திரங்களுக்கிடையில் எழுந்த மோதல்கள், கடந்த இரு ஆண்டுகளாக முழு அளவிலான சிவில் யுத்தமாக உக்கிரமடைந்துள்ளது. சூடானிலிருந்து தென் சூடான் பிளவுபட்டு 9 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம் சிம்பாவேயின் பொருளாதார நிலைமைகளுக்குச் சமாந்திரமாக மாறியுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுத்தத்தினாலும் எல்லை கடந்த ஊழலினாலும் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. எண்ணெய்க் கைத்தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் கட்டத்தில் உள்ளது. அதுவே, அரச வருமானத்தில் 98 விழுக்காட்டை வகிக்கின்றது.

தென் சூடானின் பணவீக்கம் 300 வீதமாக அதிகரித்துள்ளது. 90 வீதத்தால் நாணயப் பெறுமதி இறக்கம் ஏற்பட்டுள்ளது. 2013 டிசம்பரில் ஆரம்பித்த சிவில் யுத்தம் தொடர்வதனால் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து தடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

LEAVE A REPLY