பாக்தாத் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 323 ஆக உயர்வு

0
139

201608012007272622_Death-toll-from-July-Baghdad-blast-rises-to-323-minister_SECVPFஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜூலை 3-ம் தேதி அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் கொண்டாடப்படும் நிலையில், பொருட்கள் வாங்க மக்கள் கூடிய மார்க்கெட் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவர்களில் மேலும் பலர் உயிரிழந்த நிலையில், தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 323-ஆக உயர்ந்துள்ளதாக ஈராக் சுகாதார துறை மந்திரி அதிலா ஹமவுட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹமவுட் மேலும் கூறுகையில், ‘வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு உறவினர்களால் 115 பேரின் சடலங்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டது. ஆனால், 208 பேருக்கும் அதிகமானோர் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிறைய சடலங்கள் அடையாளம் கண்டறியப்படாமலே அரசின் அங்கீகாரம் பெற்று எரிக்கப்பட்டது’ என்றார்.

இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் டி.என்.ஏ சோதனை அடையாளம் காண்பதற்கு தேவைப்படுகிறது. தடயவியல் நிபுணர்களின் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

முன்னதாக, ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 292 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 177 பேர் அடையாளம் காணப்படவில்லை என்றும் மந்திரி அதிலா தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY