கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை இனவாதத்தை தூண்டும் விதத்தில் இருக்கின்றது. ஒரு இனம் மட்டும் வாழ வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே இந்த யாத்திரையானது இனவாதத்தையும் வன்முறையையும் மீண்டும் வலுப்படுத்துவதற்கான உபாய மார்க்கம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடென பிரதி அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, பாதயாத்திரையில் பங்கேற்பவர்களின் கட்சி உறுப்புரிமையும் தொகுதி அமைப்பாளர்கள் பதவியும் பறிக்கப்படும்.
அவை இரண்டும்தான் யாத்திரையின் பலன் என்றும் அவர் குறிபிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்று கிழமை எதிரணியின் பாதயாத்திரை தொடர்பிலாக அரசாங்கத்தின் நிலைப்பட்டினை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாம் எதிரணியின் பாதயாத்தரை குறித்து பேசவேண்டிய நிலைப்பாட்டில் உள்ளோம்.
ஆனால் அது ஒரு அர்த்தமற்ற போராட்டம் அதனால் எந்த பயனும் இல்லை. அது தொடர்பில் பேசுவதையும் அர்த்தமற்ற செயல் என்றே நினைக்கிறோம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் இடம்பெறும் ஒரு சில விடயங்கள் தொடர்பில் பேச வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அரசியலமைப்பு மரணப்பொறி , மீண்டும் ஒரு ராஜபக்ஷ ஆட்சி என்ற விடயங்களை முன்னிலை படுத்தியதாகவே இந்த பாதயாத்திரை அமைந்துள்ளது. இருப்பினும் தற்போது ஏன் மீண்டும் ஒரு மஹிந்த ஆட்சிக்கான அவசியம் இவர்களுக்கு வந்துள்ளது. ராஜபக்ஷக்களின் ஆட்சி வேண்டாம் என்பதாலேயே மக்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்பினர்.
அவர்கள் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர். அதில் நாமல் வினோத விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றார். அவரது தந்தையின் ஆட்சிக்காலத்தில் எமது நாட்டில் மனித கொலைகள் அதிகம் இடம்பெற்றன.
கட்டுநாயக்க பொருளாதார வலயத்தில் சேவையிலிருப்பவர்கள் தனது ஊழியர் சேமலாப நிதி விவகாரத்தில் உள்ள சிக்கல் தொடர்பில் வினவிய போதும் அவர்கள் தமது உரிமைகளை கேட்டு வீதியில் இறங்கிய போதும் கொலை செய்யப்பட்டனர்.
இவை அனைத்தும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவினை பக்கபலமாக வைத்துக்கொண்டு செய்யப்பட்ட செயற்பாடு என்பதனையும் மறுப்பதற்கில்லை. அவர்கள் காலத்தில் வெலிவேரிய தேவாலயத்தை சூழவும் இராணுவத்தினர் நிரப்பட்ட நாட்கள் இருந்தன.
அதன் பின்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தனர்.
முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அதிகாரத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்தனர். அவர் போன்ற உயர்பதவியில் இருப்பவர்களை அழைத்து விசாரணை செய்யும் குழுக்களில் விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல் வாதிகள் இருந்தனர்.
இது தான் அவர்களின் காலத்தில் எமது நாட்டின் நீதிக்கு கிடைத்த மரியாதை.
இந்த விடயங்களை மீண்டும் செய்யத்தான் அவர்களுக்கு ராஜபக்ச ஆட்சி ஒன்று தேவைப்படுகின்றது.
அதேபோல் கடந்த காலங்களில் மஹிந்த ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த எனது வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் தான் இன்று இவர்கள் அரசியல் பழிவாங்கல் குறித்து பேசுகின்றனர். அரசியல் பழிவாங்கல் மற்றும் இனவாத்தை வலுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் வரலாற்று சாதனை படைத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது சகலருக்கும் தெரிந்த விடயம்.
இதனை நாம் மாத்திரம் கூறவில்லை.
இது இனவாத செயற்பாடுகளின் உச்சகட்டம் என்பதனை அறிந்தே அவர்களின் தரப்பில் உள்ளிட்ட டியூ குணசேகர உள்ளிட்டவர்கள் ஆரப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அதனால் இது இனவாதம் வர்க்கவாதம் ஆகியவற்றை மீண்டும் வலுப்படுத்துவதற்கான உபாயமாகவே இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படுன்றது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.
அதேபோல் எமது நாட்டின் புகழ் தற்போது சர்வதேச மட்த்தில் மேம்பட்டு வருவதால் எமது நாட்டின் மீதான முதலீட்டாளர்கள் பார்வை அதிகரிக்கின்றது.
எனவே அதற்கு மாறாக எமது நாட்டில் நிலையான அரசியல் சூழல் இல்லை என்றும் குழப்பங்கள் உள்ளன என்றும் காண்பித்து வெளிநாடடு முதலீட்டாளர்கள் வருகையை குறைக்கவே மஹிந்த அணி முயற்சிக்கின்றது என்றார்.
#Vidivelli