கல்வி பற்றிய பாரதூராமான பிழையான மனப்பதிவுகள் நம் மத்தியில் காணப்படுகின்றன: அப்துர் ரஹ்மான்.

0
217

a09116c4-e478-4fb7-a956-4a352c8f548a‘கல்விபற்றிய பாரதூராமான பிழையான மனப்பதிவுகள் நம்மத்தியில் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே கல்வியின் முழுமையான விழைவுகளை நம்மால் இதுவரை அடைந்துகொள்ள முடியாதுள்ளது’ என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 27.07.2016 அன்று கல்முனை சாஹிறா கல்லூரி நடாத்திய தொழில் நுட்ப தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விசேட உரையாற்றும் போதே அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது.

“கல்விபற்றிய படுதவறான மனப் பதிவுகள் நம் மத்தியில் நிலவுகின்றன. இதன் காரணமாகவே கல்வி கொடுக்க வேண்டிய முழுமையான பிரயோசனத்தை நாம் பெற்றுக் கொள்ள தவறி வருகிறோம்.

நம் மத்தியில் இரண்டு வகையான பிழையான மனப்பதிவுகள் கல்வி பற்றி இருக்கின்றன. முதலாவது மனப்பதிவு கல்வி முறை பற்றியதாகும். இரண்டாவது கல்வியினுடைய நோக்கம் பற்றியதாகும்.

பாடப்புத்தகங்களிலுள்ளவற்றை மனப்பாடம் செய்தலும் அதனைப் பரீட்சைகள் என்ற பெயரில் ஒப்புவித்தலுமே கல்விமுறையென மிகப் பிழையான ஒரு புரிதல் நம் மத்தியில் இருக்கிறது. இதன் காரணமாகவே நமது கல்வி, புத்தகக் கல்வியாக மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை பிரயோக கல்வியாக மாற்றியமைக்கின்ற ஒரு புதிய கல்விக் கொள்கை மெல்ல மெல்ல நம் நாட்டில் உருவாகி வருகிறது என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமாகும்.

அதன் ஒரு முக்கிய கட்டமாகவே உயர் தரத்தில் தொழில் நுட்பப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு அமுல் படுத்தப்பட்டு வருகிறது. பரீட்சைப் பெறுபேறுகள், பல்கலைக் கழகம் அனுமதிகள் என்கின்ற வழமையான மதிப்பீடுகளுக்கப்பால் நல்ல ஆரேக்கியமான விளைவுகளை இந்தத் தொழில் நுட்பக் கல்வி இப்போது தரத் தொடங்கியிருக்கிறது. இந்த சாஹிறா கல்லூரி மாணவர்களின் பல புதிய கண்டு பிடிப்புக்கள் இதற்கு நல்லதொரு சான்றாகும்.

அதுபோலவேதான் கல்வியின் நோக்கம் பற்றி மற்றொரு படு மோசமான மனப்பதிவும் நம்மத்தியில் இருக்கிறது. சான்றிதழ்களும் தொழில் வாயப்புமே கல்வியின் நோக்கம் என தவறாக புரியப்பட்டிருக்கிறது. சான்றிதழ் என்பது கல்வியின் நோக்கமல்ல. கல்வி அடைவின் அத்தாட்சிப் பத்திரமே அதுவாகும். அது போலவேதான் தொழில் வாய்ப்பென்பதும் கல்வியினுடைய ஒட்டு மொத்த நோக்கமுமல்ல. கல்வி அடைவு ஏற்படுத்தும் ஒரு விழைவு மாத்திரமே அதுவாகும்.

விரிவான பார்வையில், கல்வியின் நோக்கம் என்பது அதைக் கற்கின்ற மனிதனுக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் அவனது மண்ணுக்கும் முழுமையான பிரயோசனத்தை வழங்குவதாகும் . முதலில், கல்வியென்பது ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் நடைமுறை அறிவுப் பின் புலத்தையும் ஆழுமையினையும் சுய மரியாதையினையும் தன்நம்பிக்கையினையும் சமூகப் பொறுப்புபினையும் ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அத்தோடு, அந்தக் கல்வி அதைக் கற்கின்ற மனிதனின் சொந்த வாழ்வுக்கும் அவனது வாழ்க்கையோடு நேரடியாகச் சார்ந்த ஏனைய விடயங்களுக்கும் முழுமையான தீர்வுகளை கொடுக்க வேண்டும். அது போலவே தான் சமூகத்தினதும் நாட்டினதும் பொருளாதார சமூக பிரச்சினைகள் அடங்கலாக அனைத்துக்குமான தீர்வும் கல்வியின் விழைவாக உருவாக வேண்டும்.

ஆனால் கல்வியின் இந்த விரிந்த நோக்கம் அடையப் பெறுவதில் பாரிய இடைவெளியொன்று தொடர்ச்சியாக இருந்தே வருகிறது. நம் நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளைப் பார்க்கின்ற போது பல்கலைக் கழகம் வரை படித்து பெற்றுக் கொண்ட கல்வி அவரது சொந்த வாழ்வாதாரத்துக்குரிய தீர்வைத்தானும் கொடுக்கத் தவறி விட்டதா..? என்ற கேள்வியும் எழுகிறது.

அது போலவேதான், நமது பொருளாதாரத்தை, நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் நமது கல்வி முறை செய்த நேரடியான பங்களிப்பு என்ன..? நம்மைச் சுற்றிவர கடல்வளத்தை வைத்துக் கொண்டு மீனை இறக்குமதி செய்யும் நாடாக நாம் இன்னும் இருக்கிறோம். விவசாயத்திற்குத் தேவையான அத்தனை வளங்களையும் நாம் நாட்டுக்குள் வைத்துக் கொண்டு நமது அடிப்படை உணவுகளைக் கூட இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.

அது போலவே நமது பிரதேச மக்களை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் நாளாந்த வர்த்தகத்தில் , ஏனைய பொருளாதார நடவடிக்கைகளில் அறிவியலும் தொழில் நுட்பமும, ஏற்படுத்தியுள்ள முன்னேற்றங்கள் என்ன..? என்ற கேள்வியும் இருக்கிறது.

நமது உயர் கல்வி நேரடியாக நம் நாட்டிற்குச் செய்யும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ரீதியான கண்டு பிடிப்புகளும் ஏனைய பங்களிப்புகளும் என்ன என்ற ஒரு ஆய்வு அவசியமாகிறது.

இந்தப் பின்னணியில்தான் தொழில் நுட்ப பாடநெறிகளுக்கூடாக நமது கல்வி முறை பிரயோகக் கல்வியை நோக்கி நகர்கின்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. தொழில் நுட்பக் கல்வியின் உண்மையான நோக்கத்தினை நிறைவு செய்யும் வகையில் இந்த சாஹிறாக் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள கண்டு பிடிப்புக்கள் மிகவும் பாராட்டுக்குரியது மாத்திரமில்லை ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமுமாகும்.”

LEAVE A REPLY