மட்டக்களப்பு கொடூர முக்கொலை: காரணியும், பின்னணியும்; விரிவான பார்வை

0
27

(விசேட நிருபர்)

87ad1c47-92f1-490d-b11b-6be9fb157f88கடந்த சனிக்கிழமை (23) நள்ளிரவு மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டை கிராமத்தில் இடம் பெற்ற முக்கொலைச் சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கொலையை கேள்விப்படும் எவரும் கண் கலங்காமலில்லை. தனது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை மனைவியின் தந்தை ஆகியோரை கனவர் கொலை செய்த மிகவும் கொடூரமான சம்பவமே இந்த முக்கொலையாகும்.

கனவன் மனைவிக்குமிடையேயான பல நாள் தகராறும் கனவனுக்கு மனைவி மீது ஏற்பட்டட சந்தேகமும் கொலையில் முடிந்துள்ளது. காக்காச்சிவெட்டை 1ஆம் வட்டாரம், பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலேயே, இந்தத் துயரச்சம்பவம், சனிக்கிழமை (23) நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது

படுகொலை செய்யப்பட்டவர்களில், ஒரு வயதும் 6 மாதங்களுமுடைய பிரசாந்தன் சஸ்னிகாவும் அவருடைய தாயான பேரின்பம் விஜித்தா (வயது 24) என்பவரும், வீட்டு வாசல் கிணற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டனர்.

பேரின்பம் எனும் விஜித்தாவின் தந்தையான கந்தையா பேரின்பம் (வயது 56), கடும் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி குற்றுயிராய்க் கிடந்த நிலையில், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு எடுத்துச் செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தினால், வீட்டின் சமையலறை உள்ளிட்ட அறைகள் இரத்தினால் தோய்ந்து போய் இருந்தன. கிணற்றில் மேல் பகுதிகளில், ஆங்காங்கே இரத்தக்கறைகள் படிந்திருந்தன. குழந்தையினதும் குழந்தையின் தாயினதும் சடலங்கள், குப்புறக் கவிழ்ந்த நிலையில் கிணற்றுக்குள் மிதந்துகொண்டிருந்தன.

சம்பவத்தை அறிந்த வெல்லாவெளி பொலிசார் ஸ்த்தளத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். இதையடுத்து ஸ்தலத்துக்கு மோப்ப நாயுடன் சென்ற மட்டக்களப்பு குற்ற பொலிஸ் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளையும் தீவிரப்படுத்தியதுடன் சுமார் ஒன்றை மணிநேரத்துக்குள், கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது 34) என்பவரைக் கைதுசெய்தனர்.

தனது தந்தையின் வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்துக்கு அப்பால் வசித்துவந்த பிரசாந்தனைத் திருமணம் முடித்த விஜித்தா, தன்னுடைய தந்தையின் வீட்டிலேயே, பிரசாந்தனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இருவருக்கும் முதலாவது குழந்தையொன்று பிறந்து இறந்துள்ளது. இந்நிலையிலேயே இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு, பிரசாந்தன் சஸ்னிகா என்று பெயரிட்டனர். இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை போட்டுவிட்டு பிரசாந்தன் தலைமறைவாகிவிடுவதுடன், குடும்பத்துடன் சில நாட்களுக்கு தொடர்பைப் பேணுவதே இல்லை என்றும் அறியமுடிகின்றது.

இரண்டாவது குழந்தையின் பிறப்பில் சந்தேகம் கொண்டே, பிரசாந்தன் தன்னுடைய மனைவியுடன் ஒவ்வொருநாளும் சண்டையிட்டுள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு வரும் அவர், சில நாட்களில் மனைவியையும், குழந்தையும் கூட கண்மூடித்தனமாகத் தாக்கி வந்துள்ளார் என்றும் அறியமுடிகிறது.

கனவன் பிரசாந்தனை திருத்துவதற்கு பல முயற்சியகளை விஜிதா எடுத்த போதிலும் கணவனின் கட்டுக்கடங்காத செயற்பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாத விஜித்தா, இது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸில் முறையிட்டுமுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் இவ்விருவரையும் கடந்த 22ஆம் திகதியன்று அழைத்த பொலிஸார், விசாரணை நடத்தியுள்ளனர். பிரசாந்தனின் அட்டகாசமும் கொடுமைகளும் தாங்கிக்கொள்ள முடியாதவை என்பதனால், அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியாது என்றும் தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும், மனைவியான விஜித்தா,பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், விஜித்தாவுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு விருப்பம் என்று, பிரசாந்தன் அன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இவ்விருவரும் கலந்துபேசி, 28.7.2016ஆம் திகதியன்று அறிவிக்குமாறு சமரசம் செய்து, இவ்விருவரையும் அவரவரின் வீடுகளுக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.

கணவனின் அச்சுறுத்தல் காரணமாக, பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்களை பாதுகாப்புக்காக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து தங்க வைப்பதை விஜித்தா வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். சம்பவ தினமான சனிக்கிழமையும் (23) அவ்வாறே இரண்டொரு பெண்கள், விஜித்தாவின் வீட்டில் உறங்குவதற்காக வந்துள்ளனர்.

விஜிதாவின் தந்தையான பேரின்பம், அருகிலுள்ள மற்றொரு வீட்டில் உறங்குவதற்காகச் சென்றுவிட்டார். இந்நிலையில், இரவு 9 மணியளவில் விஜித்தாவின் கையடக்க தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்திய விஜிதாவின் கனவர் பிரசாந்தன், தான் இன்றிரவு வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதைக கேட்டு, பாதுகாப்புக்காக வந்திருந்த இரு பெண்களையும் அவர்களுடைய வீட்டுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு, விஜித்தா கனவரின் வருகைக்காக காத்திருந்துள்ளார். சுமார் 10 மணியளவில் போதையில் வந்த பிரசாந்தன், ‘நாமிருவரும் இணைவதா, இல்லையா என்பது தொடர்பில், இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தான் முடிவு தெரியும்’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவற்றையெல்லாம், அக்கம் பக்கத்து வீட்டார் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

சிறிது நேரத்தில், விஜிதாவின் வீட்டில் மயான அமைதி நிலவியுள்ளது. அப்படியாயின் கனவன் பிரசாந்தனும் மனைவி விஜிதாவும் சமாதானமாகி விட்டனர் என்று எண்ணி நித்திரைக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்து வீட்டார் தெரிவித்தனர்.

சுமார் 12 மணியளவில் விஜிதாவின் வீட்டுக்கிணற்றில், தொம்… தொம்… என்று ஏதோ விழுவது போன்ற சத்தம், பக்கத்து வீட்டில் படுத்திருந்த விஜிதாவின் தந்தையான கந்தையா பேரின்பத்திற்கு கேட்டுள்ளது.

அந்த சத்தத்தில் சந்தேகம் கொண்ட அவர், தன்னுடைய மகளின் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அங்கு கோடரியுடன் நின்றுகொண்டிருந்த மருமகனான பிரசாந்தன், அவரையும் கொத்து கொத்தென்று கொத்திவிட்டு கோடாரியுடன் தப்பியோடியுள்ளார்.

அவரின் அழு குரல் கேட்டு ஓடோடிவந்த அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள், இரத்தம் ஒழுக ஒழுக அவரை ஆட்டோவில் ஏற்றி, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
போகும்வழியிலேயே, அவர் தனக்கு நேர்ந்ததை மரண வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலிருந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவரை கொண்டு செல்லும் அவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் வெல்லாவெளி பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கிணற்றில் மிதந்துகொண்டிருந்த சடலங்கள் தொடர்பில் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

இக் கொலைகளைச் செய்தார் என்று சந்தேகிக்கப்படும் பிரசாந்தனும், தனக்கு எதுவுமே தெரியாதது போல கூட்டத்தோடு கூட்டமாக நின்று, நடப்பதை அவதானித்து கொண்டிருந்துள்ளார். பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர். அங்கிருந்த பெண்கள் அழுதழுது துவண்டுவிழுந்தனர். குற்றுயிராய்க் கிடந்த கந்தையா பேரின்பம், இறுதியாகக் கூறியதை முச்சக்கரவண்டியில் சென்றோர் பொலிஸாரின் காதுகளுக்குக் கொண்டுவந்தனர்.

இந்நிலையில், இரத்தம் தோய்ந்திருந்த தலையணையை நுகர்ந்த மோப்பநாய், பிரசாந்தன் நின்றுகொண்டிருந்த இடத்துக்குச் சென்று, அவர்மீது பாய்ந்தது. சந்தேகத்தின் பேரில் விஜிதாவின் கனவரான பிரசாந்தனை வெல்லாவெளிப் பொலிஸார் கைது செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ. றிஸ்வி முன்னிலையில் சடலங்கள் இரண்டும் மீட்கப்பட்டு, நீதவான் விசாரணைகளின் பின்னர் மரண பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த 3 சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை மடடக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை இடம்பெற்றது. இம் மூவரின் இறுதிக்கிரியை செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பலாச்சோலை இந்துமயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

உறவினர்கள் பொது மக்கள் என பலரும் கண்ணீர் மல்க இவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. சந்தேக நபரான எம்.பிரசாந்தன்(34) என்பவரை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.றிஸ்வி முன்னிலையில் திங்கட்கிழமை(25.7.2016) மாலை வெல்லாவெளி பொலிசார் ஆஜர்படுத்தியதுடன் சந்தேக நபரை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் புதன்கிழமை வரை(27.7.2016) பொலிசார் சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிபதியிடத் அனுமதி கோரினர். அதற்கு சந்தேக நபரை புதன்கிழமை வரை(27.7.2016) பொலிசார் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்
பின்னர் குறித்த சந்தேக நபரை கடந்த 27.7.2016 புதன்கிழமையன்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் வெல்லாவெளி பொலிசார் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக பல் வேறு கோனங்களில் வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். கொலைச் சம்பவம் இடம் பெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவினார்களிடமும் விசாரணைகளை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

4ab3fc3c-b0e5-443b-b678-5e61c977f997

847a5d6f-e558-4214-b800-e39215570207

902ca44d-c8f5-4471-a1ec-44cf5f96a962

cefe7119-73fe-45fd-8082-5979f36bd900

LEAVE A REPLY