வடக்கிலும் கிழக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும்

0
171

-மாஞ்சோலை கிராமத்தில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி-

(நாச்சியாதீவு பர்வீன்)

ameer aவடக்கிலும் கிழக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான சமாதானம் மலரும். யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் உறவு ஆரோக்கியமானதாகவும், இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமாகவும் இருந்தது, ஆனால் அந்த நிலை மாறி கடந்த யுத்த காலம் இரண்டு சமூகத்தினுள்ளும் நம்பிக்கையற்ற தன்மையை விதைத்துள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எட்டு லட்சம் பெறுமதியான வீட்டுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்..

சிறுபான்மை இனங்களுக்கிடையிலான ஒற்றுமையே, பெரும்பான்மை சமூகத்திடத்திலிருந்து நியாயமான தீர்வினை இரண்டு சமூகமும் பெற்றுக்கொள்ள உதவும். மாறாக இரண்டு இனமும் முரண்பட்டுக்கொண்டும்,குற்றம் சாட்டிக்கொண்டும் இருக்குமேயானால் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகத்திற்காகவும் நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் காணிப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தலையாய கடமை இந்த நல்லாட்சிக்கு இருக்கிறது. அவ்வாறே இந்த விடயத்தை அரசாங்காங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து நடைமுறைப்படுத்த தூண்டுகின்ற செயற்பாட்டினை, தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொள்ளவேண்டும்.

ameer aaபாதிக்கப்பட்டவர்களின் காணி விவகாரம் தொடர்பில் முஸ்லிம்,தமிழ் தலைமைகள் இணைந்து அழுத்தம் கொடுக்காத வரையில் அல்லது இணைந்து செயற்படாத வரையில் தீர்வு என்பது, வெறுமனே பேச்சளவில் மட்டுமே ஆராதிக்கப்பட்டு வரும். இந்த விடயத்தை கடந்த காலங்களில் திரு சம்பந்தன் ஐயா அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். எனவே மக்களின் அபிவிருத்திக்கு முன்னர் இந்தக் காணிப்பிரச்சினையை தீர்த்து முன்னர் போலவே தமிழ்-முஸ்லிம் உறவு தழைக்க அரசியல் தலைமைகள் கைகோர்க்க வேண்டும். அதுதான் நம்மை நம்பி வாக்களித்த அந்த மக்களுக்கு செய்கின்ற பேருதவியாக இருக்கும். யுத்த காலத்தில் ஏற்பட்ட சிக்கலான நிலை இப்போது இல்லை, எனவே உரியவர்களுக்கு அவர்களது பூர்வீக பூமி கிடைக்கவேண்டும் என மேலும தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்த வீடமைப்பு திட்டத்திற்கு உதவிய மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் திரு சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் நெளபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கிராம சேவகர் திருமதி மதீனா , முகாமைத்துவ உதவியாளர் முபாரக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நஜீமா , வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் நளீர் , அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுக்கு கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY