இஸ்லாமிய சகோதரனுக்கு வை.எல்.எஸ்.ஹமீட் எழுதும் தொடர் மடல் (மடல்-01)

0
205

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம், அன்பின் சோதரா!

புதிய பயணம்

பலத்த மனப்போராட்டத்தின் பின் இம்மடலை உனக்கு வரைகின்றேன்.

YLS Hameedஒரு காலத்தில் முஸ்லிம் சமுதாயம் அரசியல் அறியாமை எனும் இருட்டில் சிக்கித் தவித்தது. வாயிருத்தும் பேசா மடந்தையாக , தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது, என்று தெரியாத, அச்சமும் மடைமையும் உச்சத்தில் கொண்ட ஊமைச் சமூகமாக வாழ்ந்தது.

அதன் விளைவு, அன்றைய இந்திய இணை அமைச்சர்களான சிதம்பரம் மற்றும் பண்டாரி ஆகியோர் , முஸ்லிம்களை ஒரு தனித்துவ சமூகமாக ஏற்றுக் கொள்ள முடியாதென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அன்றைய நமது ஐந்து பிரதிநிதிகளிடம் கூறியபோது பெட்டி பாம்பாக அதனைக் கேட்டுக்கொண்டு வரவேண்டியிருந்தது.

அதன் பின்னர் முஸ்லிம்களைக் கண்டுகொள்ளாத இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வட கிழக்கை இணைத்து முஸ்லிம்களை ஒரு செல்லாக் காசான சமூகமாக மாற்றியபோதும் மௌனமாக இருந்தோம். இவ்வாறு வரலாறுகளை அடுக்குகள் கொண்டே போகலாம் .

இந்நிலையில்தான் கிழக்கில் ஓர் கலங்கரைவிளக்கம் தோன்றியது . அரசியல் அறியாமை எனும் காரிருளில் இருந்து முஸ்லிம் சமூகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை தொடங்கியது. அல்ஹம்துலில்லாஹ் , அதில் பாரிய வெற்றியும் கண்டது.

அந்த தலைமைத்துவம் மறைந்து ஆண்டுகள் 16 கடந்துவிட்டன. ஆனால் அவரது மறைவு முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் அரசியல் அறியாமைக்கும் அப்பால் அரசியல் சூன்ய நிலைக்குள் தள்ளி விட்டிருக்கின்றது; என்றால் அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்காது, என்பது எனது பணிவான கருத்தாகும் .

அன்பின் சோதரா!

இன்றைய நமது சமூகத்தின் நிலையை சற்று யோசித்துப் பார் . தேர்தல் ஒன்று வந்தால் நாம் வாக்களிக்கப் போகும் வேட்பாளரின் தகைமைகள் என்ன? அவர் பாராளுமன்றத்திலும் வெளியிலும் துணிச்சலாக அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவராக, நமக்காக குரல் கொடுப்பாரா? நமது பிரதேசத்தின் அபிவிருத்தியை, நமது மக்களின் முன்னேற்றத்தை சிரமேற்கொண்டு செயற்படுவாரா? என்றெல்லாம் எப்போதாவது பார்த்திருக்கிறாயா?

உன்னை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு வேறு எதை எதையோ அவரிடம் எதிர்பார்ப்பாய். அவருக்குத் தெரியும் உன்னுடைய எதிர்பார்ப்பு என்னவென்று. அதற்கு ஏற்ற விதத்தில் அவரும் நடந்து கொள்வார். நீயும் சந்தோசமாக , உன் உயிரையும் சில வேளை பணயம் வைத்து அவரைத் தெரிவு செய்வாய் .

அப்புறம் எப்படி சோதரா அவர் உனக்காக பாராளுமன்றத்தில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பது. அண்மையில் வெளியான பாராளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தலைப் பார்த்தாயா? நீ தெரிவு செய்த பிரதிநிதிகள் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தாயா? அவ்வாறு தரப்படுத்தியவர்கள் முக நூல்களில் பேசுகின்ற பிரதிந்திகளைத் தரப்படுத்தியிருந்தால் நம்மவர்கள்தான் இலங்கையிலே முதலிடத்தில் இருந்திருப்பார்கள்.

உனக்கு நினைவிருக்கின்றதா? கடந்த இரண்டு வருடங்களுக்கு முதல் நமது மொத்த சமூகமும் நமது சமூக பிரதிநிதிகளை திட்டித்தீர்தது, இனவாத கொடுக்கான்கள் நம்மைக் குத்தியபோது. எனக்கு நினைவிருக்கிருக்கின்றது, காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு சகோதரி, கவிதையினாலேயே இம்முஸ்லிம் பிரதிநிதிகளைத் திட்டி சாபமிட்டது. இதில் நம்மவர்களின் தவறு என்ன தெரியுமா? பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும் என்பதைச் சிந்திக்காததுதான்.

சோதரனே, சற்று சிந்தித்துப் பார். நீ ஒரு முறை தவறுவிடலாம். ஆகக் குறைந்தது அடுத்த தடவை வாக்களிக்கும் போதாவது கடந்த ஆறு ஆண்டுகள் இவர் செய்தது என்ன? என்றாவது சிந்திக்கின்றாயா? அடி விழும்போது அழுகின்றாய், கேட்கப் பார்க்க யாருமில்லையே! என்று. ஆனால் மீண்டும் அதே தவறைத்தானே செய்கின்றாய். இப்பொழுது மீண்டும் இனவாதப் பாம்பு மீண்டும் படமெடுத்தாடுகின்றது, ஆனால் பாராளுமன்றக் கதிரைகள் வீணே சூடேறிக் கொண்டிருக்கின்றன.

புதிய அரசியலமைப்பு சட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. அதில் உன் நிலை பற்றி நீ சிந்தித்திருக்கின்றாயா? அல்லது நீ தெரிவு செய்தவர்களிடமாவது கேட்டிருக்கின்றாயா? அல்லது நீ தெரிவு செய்தவர்கள் உனக்காக இதைத்தான் கேட்டிருக்கின்றோம்.

இவை கிடைக்காவிட்டால் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு உனக்காக போராடுவோம் என்றாவது கூறியிருக்கின்றார்களா? உன்னுடைய, உன் பிள்ளையுடைய, உன் பிள்ளையின் பிள்ளையுடைய எதிர்காலப் பாதுகாப்பிற்கு என்ன தேவை என்பதிலாவது உனக்கு தெளிவு இருக்கின்றதா? ஓ! அதற்கு உனக்கெங்கே நேரமிருக்கின்றது. உன் முழு நேரமும் முக நூல்களிலும் வட்ஸ்அப் களிலும் யாரையாவது புகழ் பாடுவதற்கும் அல்லது இகழ்வதற்குமே போதவில்லையே!

கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்யாமல் இப்பொழுதே கண் விழிக்க மாட்டாயா?

சோதரனே! நீண்ட நாட்களாக என் மனதுக்குள் பெரும் போராட்டம். உன் நிலைமை ஒரு புறம் உள்ளத்தை நெருடுகிறது. மறுபுறம் அறியாமை இருளில் மூழ்கி இருட்டின் ஒத்த கருத்துத்தான் வெளிச்சம் என்று கடந்த 16 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிருக்கும் உன்னை வெளிச்சத்திற்கு அவ்வளவு இலகுவில் கொண்டுவந்துவிட முடியுமா? என்ற சந்தேகம் மறுபுறம்.

‘ஒரு சமூகம் தன் தலைவிதியை தாமாக மாற்றிக்கொள்ளாதவரை அச்சமூகத்தின் தலைவிதியை நாம் மாற்றமாட்டோம்’ என்று இறைவன் கூறுகின்றான். எனவே, உன் தலைவிதியை மாற்றிக் கொள்ள நீ ஆயத்தமாக இருக்கின்றாயா? என்ற சிந்தனை இன்னொரு புறம் .

இந்நிலையில் இந்த அரசியலைத் தொடரத்தான் வேண்டுமா? என்கின்ற கேள்வி என் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு முஸ்லிம் தினமும் தன் சமூகத்தைப் பற்றி சிந்திக்கக் கடைமைப் பட்டவன்.

அந்த அடிப்படையில் ஒரு புதிய பயணத்திற்கு உனை அழைக்க முயற்சித்துப் பார்த்தால் என்ன? எப்படியாவது உனக்கு மீண்டும் ஒரு தடவை தலைவரின் மறைவிற்குப் பின் இன்ஷா அல்லாஹ் வெளிச்சத்தை காட்டிவிட முடியாதா? என்ற ஓர் ஆசைதான் இந்த தொடர்மடலை என்னை எழுதத் தூண்டியது.

அன்று மறைந்த தலைவரின் நம் சமூக விடுதலைப் பயணத்தில் உன்னோடு அல்லது உன் தந்தையோடு இணைந்து பயணித்தவன் நான். அந்த உரிமையில் இந்த புதிய பயணத்திற்கு உனை அழைக்க விழைகிறேன்.

என் உள்ளத்தில் இருப்பவற்றையெல்லாம் ஒரே மடலில் எழுதி முடிக்க முடியாது.

எனவே, அடுத்த மடலில் மீண்டும் இன்ஷா அல்லாஹ் சந்திக்கும் வரை,

உன் அன்பின்
வை.எல். எஸ் ஹமீட்

LEAVE A REPLY