(அவசியம் வாசியுங்கள்) ஓட்டை வீட்டுக்குள் நின்று கொண்டு மழையில் ஒதுங்குவதற்கு பிரார்த்தனை!

0
358

(முஹம்மது ராஜி)

Muslim Salahஉம்மா ஏன் இப்படி உலகம் முழுவதும் அழுகின்றது…?

பலஸ்தீனம், சிரியா, ஈராக், காஷ்மீர், லிபியா, பர்மா என்று இரத்த ஆறும், கண்ணீரும் தினம் தினம் பார்த்து உலகத்துக்கு மரத்துப்போய் விட்டது.

நமது துஆக்களுக்கு என்ன ஆகி விட்டது?

நோன்பிலும், தஹஜ்ஜத்திலும், உம்ராக்களிலும், ஹஜ்ஜுக்களிலும் கண்ணீர் வடித்து கேட்கப்படும் நமது துஆக்கள் பதில் அளிக்கப்படாமல் ஆகி விட்டனவா?

இரு வருடங்களுக்கு முன் நோன்பு காலத்தில் உம்ராவுக்காக சென்றிருந்த போது இமாம் சுதேசி பலஸ்தீனத்துக்காக அழுது அழுது துஆ கேட்டுக்கொண்டிருந்தார்.

இவ்வாறு கடந்த பத்து ஆண்டுகளில், தான் அறிந்த காலம் முதல் துஆ கேட்கப்படுவதாகவும் ஏன் இவ்வாறு அந்த இடத்தில், அந்த பொழுதில் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படவில்லை என எனது குரூப்பில் வந்த வர்த்தகர் ஒருவர் கேள்வி கேட்ட போது அந்த குரூப்பில் வந்த மெளலவி, அல் குர் ஆண் வசனத்தை ஓதிக்காட்டி சொன்ன பதில்,

“….எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை….” (அல்குர்ஆன் 13:11)

நமது துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படாமல் உள்ளன என்பற்கு ஓரே சுருக்கமான பதில் அந்த குர்ஆன் வசனத்தில் உள்ளது.

இலங்கைக்குள் முஸ்லீம்களில் அநேகர் என்ன செய்கிறார்கள் என்பது நான் கூறி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. வியாபாரத்தில் பொய், ஏமாற்று, நாட்டின் வரிச்சட்டங்களில் குளறுபடி செய்தல், வட்டி கொடுக்கல் வாங்கல்கள், தொழில் முறையான வட்டி எழுதுதல், லஞ்சம், இசை, திரைப்படம், ஏட்டிக்கு போட்டி நிறைந்த பொருளாதார நிலை, முக்கியத்துவம் இல்லாத விடயங்களில் குரூப் சண்டை, ஜமாஅத் அடிதடி என்பன அன்றாட வாழ்க்கையாகி போய் விட்டன.

வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை ஐக்கிய இராச்சியத்தில் நான் கண்ட பெரும்பாலான முஸ்லிம்களின் உழைப்பு ஹராமானதே.

ஹராமான உழைப்பில் வாழ்ந்து கொண்டு உம்மாவுக்காக துஆ கேட்கும் போது எப்படி பலஸ்தீனம் மீள கிடைக்கும்? எப்படி சிரியாவில், ஈராக்கில் அமைதி கிடைக்கும்?

ஹராமான பொருள் ஈட்டுதலால் வளர்த்த உடலை டிவிக்கு முன்னால் வைத்துக்கொண்டு அமெரிக்கவையும் இஸ்ரேலையும் திட்டித்தீர்த்து கேட்கும் துஆக்களுக்கு என்ன பெறுமதி இருக்கும்?

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் அநேக முஸ்லிம்கள், சில பவுன்சுகளுக்காக பொய்களை விற்கும் தயார் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் . எடுத்துக்காட்டாக வாழ வேண்டிய நாம், எட்டப்பன்களாக வாழ்ந்து கொண்டிருப்பதால் உம்மா என்ற ஒரே உடம்புக்கு தொற்று நோய் வந்துள்ள நிலையிலும் வலியை உணராத நிலையில் சுயநலமாக வாழ பழகி விட்டோம் .

சிரியாவில் இன்று நடப்பது நாளை நமக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அரசாங்கத்துக்கு பெய்யான கணக்கு காட்டி பொது நல நிதிகளை (பெனிபிட்) மோசடி செய்தல், அற்ப பவுன்சுகளுக்காக சொந்த மனைவியை சிங்கிள் மதர் ஆக்குவது, மதுபான தொடர்புடைய வேலைகளை செய்வது, பெய்யான கணக்கு காட்டுவதற்காக சுய தொழில் என்ற பேரில் சுத்துமாத்து நடத்துவது, நகமும் சதையும் போல வட்டியுடன் கலந்து விட்ட வாழ்க்கை முறை; தொழில் முறை, இதற்காக ரெடிமேட் பத்வாக்கள் வாங்கப்பட்டு செய்யும் பாவங்களை நியாயப்படுத்திக்கொண்டு இருக்கின்றமை என்று தொடர்ந்து கொண்டு போக முடியும் இந்த பட்டியலை ….

பெருமானாரின் சுன்னத்துக்களை பேணுவதாக பெருமை அடிக்கும் நாம், பெருமானாரின் அடிப்படை பண்புகளை, இஸ்லாத்தின் பர்ளுகளை கோட்டை விட்டு விடுகிறோம்.

சகோதர்களே! சகோதரிகளே!

வெறுப்பில் இதை எழுதவில்லை, உங்கள் மீது உள்ள விருப்பில்தான் இதை எழுதுகிறேன் .

பன்றி இறைச்சியும் மதுபானமும் மட்டும்தான் ஹராம் இல்லை, நமது பொருள் ஈட்டலும் ஹராமானதாக இருக்க கூடாது. உழைக்கும் உழைப்பும் பொய்யை விற்று பிழைக்கும் பணமும் ஹராமானதாக இருந்தால் எவ்வாறு ஹலாலான சந்ததிகளை உருவாக்க முடியும்?

கோடிக்கணக்கில் ஹராமான பணத்தை சந்ததிகளுக்கு விட்டுச்சென்று ஷைத்தானிடம் பாதுகாப்பு தேடுவதை விட எதுவுமே விட்டுச்செல்லாமல் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவது மிகவும் மேலானது. பொறுப்பேற்பவர்களில் அல்லாஹ் மிகவும் மேலானவன். சூரத்துல் கவுப் பில் வருகிற சம்பவம் இதற்கு சான்று பகர்கிறது.

அற்ப பவுன்சுகள் உங்களோடு ஆறடி மண்ணறையில் வரப்போவதில்லை. மரணம் எப்போது வரும் என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. ஹராமான உழைப்போடு உங்கள் மண்ணுலக மற்றும் மறுமை பயணத்தை ஆரம்பிக்கப்போகிறீர்களா?

சிந்தியுங்கள்!

சவுதி அரேபியாவையும் ஈரானையும் குறை சொல்லுவதை விடுத்து உம்மாவுக்கான மாற்றங்களை நம்மில் இருந்து ஆரம்பிப்போம்.

ஹலாலான வாழ்க்கை முறையை இன்றில் இருந்து ஆரம்பிப்போம். நாளை வறை நம் உடலில் உயிர் இருக்கும் எனபதற்கு என்ன உறுதி இருக்கின்றது?

மன்னிப்பை கேட்டு ஹலாலான வாழ்க்கைக்கு திரும்புவோம். அப்போது நமது துஆக்களுக்கு பதில் இருக்கும்; பவர் கூட இருக்கும்

அப்போது பலஸ்தீனம் என்ன..! உலகமே உம்மாவின் வசமாகும்.

மலிவு விலையில் இப்போது மடை திறந்து ஓடும் உம்மாவின் இரத்தத்துக்கும் பெறுமதி பிறக்கும்.

LEAVE A REPLY