18ஆவது திருத்த சட்டத்தின்போது ரவூப் ஹக்கீம் பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும்!

0
158

(அஸ்லம் எஸ்.மௌலானா)

1d337fa6-4cf0-4c4f-a92b-9493d9910af618ஆவது திருத்த சட்டத்தின்போது ரவூப் ஹக்கீம் பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் சூளுரைத்தார்.

கிழக்கின் எழுச்சி என்பது முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பலத்தை மழுங்கடடிக்க செய்து, இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் இருந்து எமது சமூகத்தை தூரமாக்குவதற்கு எடுக்கப்படுகின்ற பாரிய சூழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏறாவூர் மாக்கான் மாகார் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைக் கூறினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது;

“மு.கா. செயலாளர் நாயகம் ஹசன் அலியின் மகனும் முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் மகனும் இணைந்து கிழக்கின் எழுச்சிக் கோஷத்தை முன்னெடுக்கின்றனர். ஹசன் அலியும் சேகு இஸ்ஸதீனும் சம்மந்தர்களாவர். அவர்களது இளவரசர்களே இன்று கிழக்கின் எழுச்சி என்று சொல்லிக் கொண்டு சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முனைந்துள்ளனர்.

18ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் பணம் பெற்றுக் கொண்டார் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது உண்மை என்றால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதில் தனக்கு சம்மந்தம் இருக்கவில்லை என்றால் அன்று ஏன் அவர் அதனை வெளியிடவில்லை. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு தமிழ், முஸ்லீம் சமூகங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஹசன் அலி கூறி வந்தார். ஆனால் இணைக்கப்படக் கூடாது என்று மகன் கூறுகின்றார்.

1991ஆம் ஆண்டு மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கருத்தொன்றுடன் முரண்பட்ட சேகு இஸ்ஸதீன் 24 மணித்தியாலங்களுக்குள் தலைவரினால் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, 48 மணித்தியாலங்களுக்குள் உயர்பீடம் கூட்டப்பட்டு, அதன் அங்கீகாரத்துடன் அவர் கட்சியில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தார்.

அவ்வாறு காலத்திற்கு காலம் கட்சியுடன் முரண்பட்ட நான்கு தவிசாளர்களும் செயலாளராக பதவியிலிருந்த பாரிஸ்டர் ஓஸ்மானும் கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர்.

இப்படி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோருக்கும் முரண்படுவோருக்குமே கிழக்கின் எழுச்சி தேவைப்படுகிறது. முஸ்லீம் காங்கிரஸ் எனும் எமது கட்சி கிழக்கை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை. அவ்வாறென்றால் மர்ஹூம் அஷ்ரப் கல்முனையிலோ, மட்டக்களப்பிலோ, திருமலையிலோ வைத்தே கட்சியை பிரகடனப்படுத்தியிருப்பார். ஆனால் அவர் கொழும்பு பாஸாவிலாவில் வைத்தே இதனை அரசியல் கட்சியாக பிரகடனம் செய்திருந்தார்.

இன்று நாடு ஒரு முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு மாற்றம், இனப்பிரச்சினைத் தீர்வு என்பன தொடர்பில் தீவிரமாக ஆராயப்படுகிறது. 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய அரசியல் சாசனங்களில் சிறுபான்மையினரின் அபிலாஷைகள் உத்தரவாதப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த நல்லாட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் யாப்பு மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் சிறுபான்மை சமூகங்களும் அரவணைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான ஒரு நல்ல சூழ்நிலையில் கிழக்கின் எழுச்சிக் கோஷம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதானது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. முஸ்லீம் சமூகத்திற்காக எங்கும் சென்று பேசத் தகுதியான ஒரே தலைமைத்துவமாக இருக்கின்ற ரவூப் ஹக்கீமை கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என கூச்சலிட்டு, சமூகத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் சதிகள் அரங்கேற்றப்படுகின்றன என்றால் அந்த சூழ்ச்சிகளின் பின்னணியில் இருக்கின்ற சக்திகள் எவை என்பது கட்டாயம் கண்டறியப்பட வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY