முஸ்லிம் காங்கிரஸைப் பாதுகாத்து பலப்படுத்த வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் தார்மீகக் கடமையாகும்: எஸ்.எல்.எம். பழீல்

0
215
(பி. முஹாஜிரீன்)
SLM. Faleel‘கிழக்குக்கு தலைமைத்துவம் வேண்டும், கிழக்கின் எழுச்சி, பிரதிநிதித்துவ அரசியலை விட்டு மு.காவை சுத்தப்படுத்த வேண்டும், மு.கா வழிதவறிச் செல்கின்றது, சமகால தலைமையை உடன் மாற்ற வேண்டும்,’ என்ற அடிப்படையற்ற வெற்றுக் கோஷங்களும் தேவையற்ற புரளிகளும் தலைவர் அஷ்ரஃபின் பின்பு இக்கட்சியை உடைத்து அழிக்க நினைத்த அதே பின்னணி சக்திகளினால் இன்று மாறு வேஷத்தில் அரங்கேற்றப்படுகின்றன.’

‘கிழக்கின் எழுச்சி என்ற பிரதேசவாதம் அரசியல் வங்குரோத்தின் கடைசிப் புகலிடமாகப் பார்க்கப்படுகின்றது. விலாசமற்ற, சுயமாக தமக்குத்தாமே பதவிகளைச் சூட்டிக்கொண்டவர்கள் இப்பேரியக்கத்தை ஆளுவதற்கு கனவு காண்பது ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்ற முதுமொழியை நினைவுபடுத்துகின்றது.

இதற்கு இம்முறை எமது கட்சியின் செயலாளர் நாயகம், தவிசாளர் என்ற பெரிய பதவிகளை வகித்து கட்சியினால் சமகாலத் தலைவரைக் கொண்டு உச்சப் பதவிகள், நன்மைகளை அனுபவித்தவர்கள் இன்னும் கட்சிப்பதவிகளில் இருக்கத்தக்கதாக, இத்துரோகத்துக்கு துணைபோய்க் கொண்டிருப்பது இக்கட்சியை எம் சமுதாயச் சொத்தாக மதிக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் பாரிய வேதனையாக மாறியிருக்கின்றது.

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் பேரியக்கம் இந்நாட்டின் நாலாபாகமும் முஸ்லிம்கள் மத்தியில் ஆழ அகல வேரூன்றிய ஓரு பேரியக்கமாகும். கடந்த 27வருடங்களாக முஸ்லிம்களின் இதயங்களை வென்றெடுத்த எமது சமுதாயத்தின் உரிமை, விடுதலைப் போராட்டத்திற்கான பேரியக்கம் இது.

வடகிழக்கிற்கு வெளியே புத்தளம் ஜூம்ஆ பள்ளிவாசலினுள் எமது உடன்பிறப்புக்கள் வகைதொகையின்றி 1976களில் பொலிசாரினால் சுடப்பட்டபோது, கேட்பார் பார்ப்பாரற்ற எமது சமுதாயத்தின் ‘அநாதரவு அரசியல்’ வெற்றிடம் வெளிக் கிளம்பியது.

நடந்தேறிய இம்மிலேச்சத்தன அநியாயத்திற்கெதிரான எமது குரல் அப்போது நாடாளுமன்றத்திலே ஒலிக்கவில்லை. பேரினவாத கட்சிகளில் எம்மவர் ஒட்டி இருந்ததனால் நாம் அடங்கிப் போயிருந்தோம். அப்போது எமது இனத்திற்காக அனுதாபத்துடன் நாடாளுமன்றத்திலே உரிமைக் குரல்கொடுத்தவர் தமிழ்த்தந்தை எஸ்ஜேவி. செல்வநாயகமாகும். இது சம்பந்தமாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பும் கூட எமக்கு அப்போது சாதகமாக அமையவில்லை.

எமது சமுதாயத்தின் இந்த அநாதையான அரசியல் போக்கின் வெளிப்பாடுகள்தான் 20வயதில் சட்ட மாணவனாக இருந்த மாமனிதர் அஸ்ரபின் இதயத்தை கிளறியது. ஏனெனில் அவர் தனது குடும்பத்தை விட இச்சமுதாயத்தை வெகுவாக நேசித்தார். அதனால் கவலை கொண்டார்.

இந்நாட்டில் பூர்வீகக் குடிகளான, சுயநிர்ணய உரிமை கொண்ட எமது முஸ்லிம் சமுதாயம் ஏன் அரசியல் விலாசம், இறைமை, அதிகாரமற்ற ‘எடுப்பார் கைப்பிள்ளை’ச் சமூகமாக இன்னும் வாழ வேண்டும்? என்ற பெரிய போராட்டத்தில் இறங்கினார்.

இதனால் அவரது நியாயபூர்வ விவாதங்களினால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, தலைவர் அஷ்ரப்பினால் ஊட்டப்பட்ட அந்த சமுதாயக் கவலையும், கரிசனையும்தான் இந்த இயக்கத்தின் முழுநேரப் போராளியாக எம்மையெல்லாம் மாற்றியது.

வடகிழக்கிற்கு வெளியே பரந்து வாழ்ந்த எமது சமூகம் அடிக்கடி இனக் கலவரங்களினால் வஞ்சிக்கப்பட்டதென்பது வரலாறு. புத்தளம், பேருவலை, மஹியங்கனை, மாத்தறை, மாவனல்லை போன்ற இடங்களில் அடிக்கடி இத்துன்பியல் நிகழ்வுகள் நடந்தேறின.

இதையும் விட வடகிழக்கிலே சமாதானத்துடன் நிம்மதியாக வாழ்ந்த எமது சமுதாயத்தின் இருப்பும், அடிப்படை உரிமைகளும் திட்டமிட்ட பேரின குடியேற்றங்களாலும், விடுதலைப் புலிகளின் பயங்கரவாத எழுச்சிகளினாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

இச்சமூக பின்னணிகளின் உக்கிரமும், எமது சமுதாயப் பாதுகாப்பிற்கான கரிசனைகளும், சவால்களும்தான் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் பேரியக்கத்தின் தோற்றப்பாட்டிற்கான அடிப்படைகளாக அமைந்தன. சாத்வீக போராட்ட வடிவங்கள் தோல்வி கண்ட நிலையில் தமது உரிமைப் போராட்டத்திற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திய வேளையில் முஸ்லிம் இளைஞர்களை இந்த ஆயுதக்கலாசார உத்வேகத்திலிருந்தும் பாதுகாத்தது ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ்.

இஸ்லாமும் முஸ்லிம்களும் சமாதான சகவாழ்வுக்கும் நடுநிலை சமப்படத்தலுக்குமுரியவர்கள் என்ற எமது அடிப்படையை உலகுக்கு உணர்த்தும் ஒரு உபாயமாகவும்தான் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸை தலைவர் அஷ்ரஃப் ஸ்தாபித்தார். பல்லின சமுதாயத்தவர்களின் பின்னணிகளோடு நாடுமுழுவதிலும் பரந்துவாழும் முஸ்லிம்களின் நிலபுல காணி இருப்பு, சமூக சமய அடிப்படை சுதந்திர உரிமைகள், தனிமனித சுதந்திரம், கல்வி மொழி வேலை வாய்ப்புரிமை, பாதுகாப்பு, எமது சுயநிர்ணய உரிமை, என்று சமுதாயத்திற்கான பரந்துபட்ட அடிப்படைகள், ஒழுங்கபைபுகளைப் பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத காப்பீடாகவே இந்த அரசியல் இயக்கத்தை நாம் பார்க்கின்றோம்.

மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் இப்பேரியக்கத்தை நாட்டின் அரசியல் இலக்கணங்களுக்கேற்ப ஸ்தாபித்து அதை ஒரு சமுதாய ஸ்தாபனமாக இயங்கச்செய்வதில் பட்ட இன்னல்களும், போராட்டங்களும் எதிர்நோக்கிய சவால்களும் கொஞ்சமல்ல.

தனது சமுதாயம் ஏனையவர்களுக்கு சரிநிகராக தன்மானத்தோடும் சுதந்திர அடையாளத்தோடும் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்பதற்காக தனது முழுவாழ்வையும் தியாகம் செய்து, ஈற்றில் தன்னையே அர்ப்பணித்து ‘பீஷபீல்’ மரணத்தில் இறையடி சேர்ந்தார். சுமார் 10 வருடங்கள் சமுதாய அங்கீகாரத்தோடு தனக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டு முழுவீச்சுடன் முடியுமானவற்றை எல்லாம் செய்தார்.

இந்த சமுதாயத்துக்குரிய அரசியல் அடையாளம், ஆட்சியுரிமை பெற்றது மட்டுமின்றி தேசிய அரசாங்கங்களை மாற்றியமைத்து புதுப்புது வரலாற்றுப் பக்கங்களை ஏற்படுத்தினார். குறுகிய காலத்துக்குள் சமுதாயத்தின் தனித்துவம், உரிமைகளை விட்டுக் கொடுக்காத முறையில் உரிமைகளுடன்கூடிய அபிவிருத்தியை செயலுருப்படுத்திக் காட்டினார்.

இவை அத்தனைக்கும் அவர் கைக்கொண்ட அசைக்கமுடியாத தாரக மந்திரம் ‘சமுதாய ஒற்றுமை’ என்ற திருக்குர்ஆனின் போதனையாகும். ஒரு தசதாப்த காலத்தில் அவரது வேகப்படுத்தப்பட்ட ‘அரசியல் புரட்சியின் இரகசியம்’ அதுவாகத்தான் இருந்தது.

தனது சமுதாயத்தின் அரசியல் எழுச்சியோடு பிற்காலத்தில் ‘தேசிய ஐக்கிய முன்னணி’ (நுஆ) யையும்; தோற்றுவித்து முழுச் சமுதாயங்களையும் இணைக்கும் நல்லிணக்க ஏற்பாடாகத்தான் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 2000ம் ஆண்டில் புதிய அரசியலமைப்பினை முன்மொழிந்து மும்மொழிகளிலும் உரையாற்றி நாடாளுமன்ற வரலாறு படைத்தார். கட்சியின் உள்ளும் புறமும் பல சவால்களை எதிர்கொண்ட பெருந்தலைவர் அஷ்ரஃப் இறைநாட்டப்படி எம்மை விட்டும் பிரிந்தார்.

தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவோடு, சமகாலத் தலைவர் அப்துல் ரஊப் ஹக்கீம் இப்பேரியக்கத்தின் தலைவராக பாரமேற்ற கையோடு இதன் போக்கிலும் இயக்கப்பாட்டிலும் பாரிய மாற்றங்களையும், திருப்பங்களையும் கட்சி எதிர்கொண்டதனைப் பார்க்கின்றோம்.

பெருந்தலைவர் அஷ்ரஃப் எனும் ஆளுமையின் முன்னால் கைகட்டி, வாய்பொத்தி அடங்கிப்போயிருந்த எல்லோருமே புதிய தலைவரின் முன்னால் தனிமனித செல்வாக்கு, அரசியல் அதிகாரம், அதன் பங்கீடு, பிரதேசவாதம் போன்ற புதுப்புது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.

நம்மோடு ஒன்றாக ஒரேபாசறையில் வளர்ந்த ‘ரஊப் ஹக்கீமை’ கட்சியின் தலைமை ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பதற்கு பலர் பொறாமையுடன் அஞ்சினர். தலைவர் அஷ்ரஃப்பின் பாசறையில் நாமும் வளர்ந்தவர்கள் என்ற அறிமுகத்தோடு அத்தலைவரின் அடிப்படைகளான சமுதாய ஒற்றுமையை உடைத்தெறிந்துவிட்டு பேரினவாதிகளின் கைக்கூலிகளாக இவ்வியக்கத்தை அழிப்பதற்கு தலைப்பட்டனர்.

புதிய தலைமையின் இறுக்கமற்ற, மிதமான அனுசரித்த போக்கினை அவரின் இயலாமையாகப் பார்த்தனர். தமது பேராசைகளுக்கு, பதவி மோகங்களுக்கு அவரின் நளினப் போக்கை இரையாக்கினர். நாமும் கட்சியமைத்து தலைவராக வேண்டும். அப்போதுதான் ‘கபினட்’ அந்தஸ்துள்ள அமைச்சராகலாம் என்று கணக்குப்போட்டனர்.

இந்த முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியினைத் தடுத்து, இத்தனிமனித பேராசைகளுக்கு தீனிபோடுவதற்காக அதிகாரம் படைத்த பேரினவாதிகள் துணை நின்றனர். இந்த வரிசையில் இந்த சமுதாய இயக்கத்தை உடைத்து, அழித்துவிட நினைத்து வெளியேறியவர்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

ஸ்தாபக தலைவர் காலத்திலிருந்தே சேகு இஸ்ஸதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கைங்கரியம், ஹிஸ்புல்லா, பேரியல் அஷ்ரப், அதாவுல்லா, மர்ஹூம் அன்வர் இஸ்மாயில், றிஷாட் பதியுத்தீன், அமீர் அலி, நஜீப் ஏ மஜீட், பாயிஸ், ஹூசைன் பைலா, நிஜாமுடீன் என நீண்டு செல்கின்றது.

மு.காவை அழிக்கும் நோக்கோடு இரவோடிரவாக அதிகார அனுசரணைகளோடு அமைக்கப்பட்ட கட்சிகளில் அதாவுல்லாவின் ஊர் தழுவிய ‘தேசிய காங்கிரஸ்’,அமைச்சர் றிஸாட்டின் வடக்கை மையப்படுத்திய ‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ என்பன இன்று புதிய பரிமாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மு.காவுக்கு எதிரான இந்தப் போராட்ட வடிவங்களின் சமகால கோஷமாகத்தான் இன்று நாம் கிழக்கின் எழுச்சியினைப் பார்க்கின்றோம். மறைந்த தலைவர்கூட சந்தித்திராத சவால்கள், போட்டிகளையெல்லாம் சமகாலத் தலைவர் ரஊப் ஹக்கீம் கடந்த 16 வருடங்களில் உள்ளும் புறமும் சந்தித்திருக்கின்றார் என்பது நாமறிந்த உண்மை. கூடவேயிருந்து குழிபறித்தவர்களுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான நீதிமன்ற வழக்காடல்களை இத்தலைவர் சந்தித்து இவ்வியக்கத்தைப் பாதுகாத்தார்.

இதற்குமேல் அதிகாரம் படைத்த பேரினவாதிகள், விடுதலைப்புலிகள், இனவாதிகள், சர்வதேச கதையாடல்கள் என்று கட்சியைப் பாதுகாத்து கட்டிக் காப்பதற்கே பாரிய சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சமகாலத் தலைமையின் மனிதாபிமான, மிதமான நெகிழ்வுப் போக்கை மறைந்த தலைவரோடு ஒப்பிட்டு குறை காண்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் இந்த ஒப்பீடு சரியானதா? முறையானதா? என்பதில் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன.

மனித இயல்புகள் நாடி நாள உடற்கூறுகள், தலைவிதிகளுக்கேற்ப அவை மாறுபடுகின்றன. தனது மனிதாபிமான பக்குவமான, பொறுமையான அணுகுமுறைகள் இலங்கைபோன்ற பல்லின, பல்மொழி, கலாசாரங்களைக் கொண்ட நாட்டில் ஒரு சமுதாய இயக்கத்தின் தேசியத் தலைமைக்கு இன்றியமையாதவை என்ற பலமான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் வடகிழக்கு தமிழ்த் தலைமைகளோடு அவர் பேணிவருகின்ற இணக்கமான அரசியல் போக்கு வடகிழக்கிற்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் சமுதாயத்திற்கான சுயநிர்ணய அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுத்தரும் என்ற பின்புலமும் முக்கியமானது.

இரு தலைமைகளும் ஒன்றிணைந்து தேர்தல் மறுசீரமைப்பு, புதிய அரசியல் யாப்புக்கான பொதுவிடயங்களில் இணக்கப்பாடுகளுக்கு வந்திருப்பது இவற்றிற்கான முன்னோடி அணுகுமுறைகளாகும். கடந்த அரசாங்க காலத்தில் ‘அழுத்கமவில்’ பேரின தீவிரவாதிகளால் கலவரமும் அழிவுகளும் ஏற்படுத்தப்பட்டபோது எமது சமகாலத் தலைமை 15 சர்வதேச இஸ்லாமிய நாடுகளுடன் மேற்கொண்ட ராஜதந்திர அணுகுமுறைகள் பல சாதகமான விளைவுகளை உண்டுபண்ணி வருகின்றன. ஆகவே உள்ளக சவால்களோடு சமுதாயத்துக்கான வெளிக்கள சவால்களை சமகாலத் தலைமை கையாளும் விதம் பக்குவமானதும், பாராட்டுதற்குரியதுமாகும்.

ஆனால் மர்ஹூம் அஷ்ரஃப் பை காரணியாகக் கொண்டு சமுதாய முன்னேற்ற நலன் கருதி ஸ்தாபிக்கப்பட்ட இந்த இயக்கம் இறைவனின் காப்பீட்டை கொண்ட முஸ்லிம்களின் அசைக்க முடியாத முதுசமும், அமானித சொத்துமாகும். இவ்வியக்கத்தின் தோற்றமே சமுதாயக் கவலையோடும், அபல அப்பாவி மக்களின் நோன்பு மற்றும் இறைஞ்சுதல்களினாலும் தியாகங்களாலும் நூற்றுக்கணக்கான ‘பீஷபீல்’ உயிரிழப்புக்களாலும் உருவாக்கப் பட்டதாகும். இதன் மகோன்னத கருவூலமான ‘மரச்சின்னமே’ புனித திருக்குர்ஆனின் வசனத்தின் அடிப்படையில் மறைந்த தலைவரினால் தெரிவு செய்யப்பட்டதாகும்.

சூறா இப்றாகீமின் (14: 24- 26) வசனங்கள் ‘நல்ல வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக நல்ல ஆழப்பதிந்து, வேரூன்றிய கிளைகளைக் கொண்ட மரத்திற்கு இறைவன் ஒப்பிடுகின்றான். ஆகவே நல்ல நோக்கத்திற்காக, நல்ல வாக்கியங்களோடு இஸ்தாபகத் தலைவரினால் நடப்பட்ட மரமே இதுவாகும். இதனை தமது பேராசை, சுயநலங்களுக்காக யாரும் இலேசில் அழித்துவிட முடியாது.

எவ்வாறாயினும், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் எனும் சமுதாய இயக்கம் இந்நாட்டில் முஸ்லிம்கள் வாழுமளவும் பலப்படுத்தப்பட்டு பாதுகாக்கப் படல்வேண்டும். அது எமது சமுதாயத்திற்கான உரிமைக் குரலாகும். தனிமனித பேராசைகளுக்காக ஒரு சமுதாயத்திற்கான காப்பீடு அழிவதற்கு நாம் இடம் கொடுக்க முடியாது. இந்த பேரிஸ்தாபனம் எமது எதிர்கால பரம்பரை சந்ததிகளுக்கான விடுதலைக் குரலும் காப்பீடுமாகும். இதனை பாதுகாக்கும் நோக்கோடு அதன் தலைமைத்துவத்தின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் தார்மீகக் கடமையுமாகும்.

இறைவன் மனிதனை பிழைகள், பிரச்சினைகள், மறதிகள், பலவீனங்கள், குறைகள் உள்ளவனாகப் படைத்திருக்கின்றான். குறை இல்லாவிட்டால் அவன் மனிதனே இல்லை. மனிதன் பிழைவிடுதல் வேண்டும் பின்பு இறைவனிடம் இறைஞ்சுதல் வேண்டுமென்றுதான் இறைவன் விரும்புகின்றான். இக்கட்சியின் தலைமையும், மற்றவர்களும் பிழைவிடும் மனிதர்கள்தாம். எவரையும் நாங்கள் நிறைவாகக் காண முடியாது.

நீங்களும், நாமும் பின்பற்றும் புனித இஸ்லாம் எமக்கிடையே ஏற்படும் சமுதாயப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகின்றது? தீர்வுகளைக் காணச் சொல்கின்றது? திருக்குர்ஆனின் ‘சூறதுன் நிசா’ (4:59 ) 59வது வசனத்திலே அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

‘விசுவாசங் கொண்டோரே நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள் (அவனது)தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலை)வர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்.

ஆனால், யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பி (ஒப்படைத்து) விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால்;; இதுதான் நன்மையாகவும், மிக அழகான முடிவாகவும் இருக்கும்’

தலைமைத்துவக் கட்டுப்பாட்டையும் அதனைப் பேணும் ஒழுங்கு முறைமையினையும், பிணக்குகளின் போது அவற்றைத் தீர்ப்பதற்கான இலகு வழியினையும் எவ்வளவு நேர்த்தியாக இஸ்லாம் கூறியிருக்கின்றது. இதைவிடுத்து ஒரு முஸ்லிம் இன்னொரு சகோதர முஸ்லிமுடைய மானத்தை பகிரங்கப்படுத்தி அவமானப்படுத்துவதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

எவருடைய மானம் மரியாதைகளை பந்தியில் போட்டு உடைப்பதும் சமுதாயத்தைக் குழப்ப அநாமோதய பிரசுரங்கள் வெளியிடப்படுவதும் இஸ்லாமிய வழிகாட்டலல்ல. ‘ஒருவரின் தன்மானம் அந்தரங்கம், கௌரவம் என்பன பாதுகாக்கப்படல் வேண்டும். இவற்றைப் போட்டுடைத்து மானபங்கப்படுத்துவது கஃபதுல்லாவை உடைப்பதற்கு ஒப்பானதாகும்.

புறம்பேச வேண்டாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள். மறுபுறத்தில், அல்லாஹ் உங்களது குறைகளை வெளிப்படுத்த நினைத்தால், எந்த ரகசியமாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தி இழிவுபடுத்துவான் என்றும் நபி (ஸல்) அவர்கள் அழுத்திக்கூறினார்கள். கருத்து முரண்பாடுகளையும், பிணக்குகளையும் சமரசமாக பேசவேண்டிய இடத்திலே பேசி உள்ளக மட்டத்திலே முடிக்கலாம்.

சமகாலத்தில் நிலவும் கருத்துவேறுபாடுகள், முரண்பாடுகள் சீக்கிரத்தில் தேவையான நடவடிக்கைகள் மூலம் முடிவுறுத்தப்பட்டு கட்சியின் சமுதாயத்திற்கான செயற்பாடுகள் வேகப்படுத்தப்படல் வேண்டும் என்பதே இக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களின் உள்ளக்குமுறலாக மாறியிருக்கின்றது. இதை விடுத்து சமுதாயத்திலே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவது கொலை செய்வதிலும் பார்க்க கொடூரமானது இஸ்லாம் உணர்த்துகின்றது.

‘முஸ்லிம் காங்கிரஸைப் பாதுகாத்து பலப்படுத்த வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் தார்மீகக் கடமையாகும்.’
எஸ்.எல்.எம். பழீல் பீஏ
(முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்,
கல்வி, கலாசார செயலாளர்)

LEAVE A REPLY