(Poem) வாப்பா

0
23

(Mohamed Nizous)

கருவிலே உள்ள சிசு
காலமெல்லாம் மகிழ்ந்திருக்க
உருவாகி வெளியாகி
உலகுக்கு வரும் முன்னே
தெருவிலே வெயிலிலே
திணறடிக்கும் சிக்கலிலே
உருகி வடிந்து
உயிர் கொடுத்து உழைக்கின்ற
அருமையான ஆத்மாவுக்கே
அன்பான வாப்பா என்போம்.

நெஞ்சினுள் ஈரத்தை
நிரப்பி வைத்திருந்தும்
பிஞ்சின் ஒழுக்கங்கள்
பிறழாது இருப்பதற்காய்
கொஞ்சமும் இரக்கமற்ற
கொடுமையான மனிதர் போல்
நெஞ்சைக் கல்லாக்கி
நெருப்பாய் அடித்த பின்
பிஞ்சுக்கு நொந்திடிச்சோ
பிள்ளைக்கு வலிக்கிறதோ
முன் சாமம் எழுந்திருந்து
முத்தமிடும் மனிதர் பெயர் – வாப்பா

அவர் சிறிய வயதினிலே
அடிபட்ட காயங்கள்
மவராசி மகளுக்கோ
மவராசன் மகனுக்கோ
ஒரு போதும் வராதிருக்க
ஓடாகித் தேய்ந்தாலும்
பெரும்பார மனச் சுமையை
பிள்ளைக்குக் காட்டாது
இருக்கின்ற ஆத்மாவுக்கே
இங்கு நாம் வாப்பா என்போம்.

என்னை விட உயர்ந்தவனாய்
என் பிள்ளை ஆக வேண்டும்.
கண்மணியை எல்லோரும்
காலமெல்லாம் போற்ற வேண்டும்.
என்ற பெரு எண்ணத்தில்
இருப்பதெல்லாம் தாரை வார்த்து
நன்றி எதிர் பாராத
நல்ல அம் மனிதருக்கே
என்றும் கனிவுடனே
எம்மவர் வாப்பா என்பார்.

மனைவிமார் சில நேரம்
மாற்றமாய் நடந்தாலும்
துணை வேறு தேடி
தூரமாகிப் போகாது
எனை நம்பிப் பிள்ளைகள்
இருக்கிறார் என்பதற்காய்
கனமான மனதோடு
காலமெல்லாம் வாழுகின்ற
மணமான மனம் கொண்ட
மனிதருக்கே வாப்பா என்போம்

வாப்பா எனும் சொல்லுடைய
வரையறையைத் தாண்டியதால்
கேட்பார் யாருமற்று
கிடக்கின்றன குடும்பங்கள்.
ஈர்ப்போடு பிள்ளை மேல்
இரக்கத்தை காட்டாது
மூப்படைந்த பின்னால்
முடியாது போன பின்னால்
வாப்பா நான் என்று
வாயால சொன்னாலும்
ஏற்கார் பிள்ளைகள்
இதை வாப்பா புரிய வேண்டும்

LEAVE A REPLY