சுவாதி கொலை வழக்கில் மர்மம் விலகியது: கொலையாளி ராம்குமார் பிடிபட்டது எப்படி?

0
252

ramkumar_2918497fசென்னையில் பெண் இன்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் பிடிபட்டது எப்படி என்பது குறித்த பரபரப்புத் தகவல்கள் தெரியவந் துள்ளது. கொலை செய்த பின்னர் செங்கோட்டை அருகே உள்ள தனது சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமத் துக்குச் சென்று ஆடு மேய்த்துக் கொண்டு திரிந்துள்ளார். பிளேடால் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்ற அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், மேற்கொண்டு விசாரணை செய்ய முடியாமல் போலீஸார் காத்திருக்கின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி(24) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களில் கொலையாளி தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார், கொலையாளியைத் தேடி வந்தனர்.

அதில், கொலையாளியின் முகம் தெளிவாகத் தெரியாததால் அவரை அடை யாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது. கொலையாளியின் மேம் படுத்தப்பட்ட புகைப்படம் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தனிப்படை போலீஸாரால் அனுப்பப்பட்டது. ஊடகங் களிலும் பிரசுரமானது. அந்த நபர் குறித்து தகவல் தெரிந் தால் தகவல்தெரிவிக்குமாறும் காவல்துறை கேட்டுக் கொண்டது.

சுவாதியின் குடும்பத்தினர், தோழிகள், உறவினர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமும் தனிப் படை போலீஸார் விசாரணை நடத்தினர். சுவாதியின் வீடு அருகே உள்ள மேன்ஷனில் கொலை யாளி தங்கி இருந்தது தெரியவந்தது. போலீஸார் காட்டிய படத்தைப் பார்த்த காவலாளி, சில தகவல்களை போலீஸா ரிடம் தெரிவித்து இருக்கிறார். மேன்ஷன் பதிவேட்டில் இருந்த முகவரியின் அடிப் படையில், அந்த நபர் ராம்குமார் என்பதும், சுவாதி கொலையான நாளில் இருந்து, மேன்ஷனில் உள்ள தனது அறைக்கு அவர் வரவில்லை என்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது.

மேன்ஷனில் அவர் அளித்து இருந்த அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டையில் இருந்த முகவரியில், அவர், திருநெல்வேலி மாவட்டம், செங் கோட்டை அருகே மீனாட்சிபுரம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் என்பது, 2 நாட்களுக்கு முன் தெரியவந்தது. இந்தத் தகவல் உடனடியாக திருநெல்வேலி மாவட்ட போலீஸாருக்கு தெரிவிக் கப்பட்டது. தென்காசி போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். கொலை யாளி பதுங்கி இருந்த மீனாட்சிபுரத்தில், மாறுவேடத்தில் போலீஸார் நுழைந்தனர்.

ஆடு மேய்த்த ராம்குமார்

நேற்று முன்தினம் பகலில் கிராமத்துக்கு வெளியே தோட்டப் பகுதியில், தங்களுக்குச் சொந்த மான ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த ராம்குமாரை போலீஸார் கண்டறிந்தனர். தொலைவில் இருந்தபடி அவரது நடவடிக்கைகளை நோட்டமிட்டனர். கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, கிராமம் முழுவதும் போலீஸார் மாறுவேடத்தில் புகுந்தனர். மாலை வரை மிகவும் சாதுபோல் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த ராம்குமார், மாலையில் வீடு திரும்பினார். குறிப்பிட்ட இடைவெளியில் போலீஸாரும் பின் தொடர்ந்தனர்.

கிராமத்துக்கு அருகே உள்ள தோட்டங் களுக்குள் புகுந்து அவர் எளிதில் தப்பிவிட முடியும் என்பதால், இரவு வரை காத்திருக்க போலீஸார் முடிவு செய்தனர். வீட்டுக்கு வந்த ராம்குமார் இரவு 9 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு படுத்துள்ளார். அப்போதும் போலீஸார் தங்கள் கைது நடவடிக்கையைத் தொடங்கவில்லை.

நாய் குரைத்தது

இரவு 10 மணிக்குப் பின் கிராமம் முழுவதும் அடங்கியது. வீட்டின் பின்பகுதி யில் உள்ள ஓலைக்கூரை வேய்ந்த அறையில், ராம்குமார் படுத்திருந்தார். நள்ளிரவில் அவரது வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது நாய் குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும், வீட்டுக் கதவை திறந்து பார்த்த ராம்குமாரின் தந்தை பரமசிவன், அங்கு திரளாக நின்றிருந்த போலீஸாரைப் பார்த்துள்ளார். உடனே பயத்தில், ‘போலீஸ்’ என்று கூச்சலிட்டுள்ளார்.

தற்கொலை முயற்சி

தந்தையின் சத்தம் கேட்டு, பின்பக்கம் இருந்த ஓலையா லான கதவை திறந்துகொண்டு ராம்குமார் தப்ப முயன்றார். வீட்டின் பின்பகுதியிலும், தெரு விலும் போலீஸார் சுற்றி வளைத் திருப்பதை பார்த்த ராம்குமார், மீண்டும் தான் தங்கியிருந்த ஓலைக் கூரை அறைக்கு திரும்பி ஓடினார். அங்குமிங்கும் ஓடி அவர் எதையோ தேடுவதைப் பார்த்த போலீஸாரும், வீட்டின் பின்பக்கக் ஓலைக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அதற்குள் அங்கு கிடந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்து ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிப்பதை போலீஸார் பார்த்தனர். பாய்ந்து சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். கழுத்திலும், அவர் அணிந்திருந்த லுங்கியிலும் ரத்தம் வழிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரிடம் இருந்த பிளேடை பறித்தனர்.

இதில், தென்காசி போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலமுருகன் காயமடைந்தார். பிடிபட்ட ராம்குமாருக்கு, தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 1.40 மணிக்கு அவர் அனுமதிக்கப் பட்டார்.

போலீஸார் ஏற்கெனவே மருத்துவ மனைக்கு தகவல் தெரிவித்து இருந்த தால், அங்கு மருத்துவர்கள் தயாராக இருந்தனர். 10 நிமிடங்களுக்குள் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, 1.50 மணிக்கு அறுவை சிகிச்சை அரங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டார். காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ராம்குமாரின் கழுத்தில், மொத்தம் 14 தையல்கள் போடப்பட்டன. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

நேற்று காலையில் ராம்குமாருக்கு நினைவு திரும்பியது. காலை 7 மணி அளவில் அவர் ஆண்கள் பொது வார்டுக்கு கொண்டுவரப்பட்டார். அந்த வார்டு முழுக்க போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தவிர வேறு யாரும் வார்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, சென்னையிலிருந்து உதவி ஆணையர் தேவராஜன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று மதியம் திருநெல்வேலிக்கு வந்தனர். மருத்துவமனையில் இருந்த ராம்குமாரை பார்வையிட்டனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி அத்தி முனவரா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்கிரமன் ஆகியோ ருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ராம்குமாரிடம் தற்போதைக்கு எவ்வித விசாரணையும் போலீஸார் மேற்கொள்ள வில்லை. 24 மணி நேரத்துக்குப் பின் ராம்குமார் உடல்நிலையின் முன்னேற்றத்தைப் பொருத்து, அவரிடம் விசாரணை நடக்க இருக்கிறது. உடல்நிலை சீரானதும், அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

தற்கொலைக்கு முயன்றதாக ராம்குமார் கைது

சுவாதி கொலை வழக்கில் பிடிபட்ட ராம்குமார் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று அதிகாலையில் ராம்குமாரை போலீஸார் பிடிக்க முயற்சித்தபோது, தற்கொலைக்கு முயன்ற அவர் கழுத்தில் காயமடைந்து, பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு முயன்றதாக ராம்குமார் மீது, செங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ராம்குமார் உயிருக்கு ஆபத்து இல்லை

ராம்குமார் உயிருக்கு ஆபத்து இல்லை என திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி அத்தியமுனவரா தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ராம்குமாரின் கழுத்தில் இடதுபுறத்தில் 7 செ.மீ. நீளத்துக்கும், வலதுபுறத்தில் 3 செ.மீ. ஆழத்துக்கும் காயம் இருந்தது. ஏற்கெனவே இங்கு தயார் நிலையில் இருந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்களும், மயக்கவியல் மருத்துவர்களும் அவருக்கு உடனே அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

கழுத்தில் இருந்த ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டு தையல் போடப் பட்டது. 24 மணி நேரத்துக்குப் பிறகு படிப்படியாக அவரது நிலை சீரடையும். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. காயங்கள் குணமாக 7 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம் என்றார்.

கொலை செய்த அன்றே ஊருக்கு சென்ற ராம்குமார்

சுவாதியை கடந்த மாதம் 24-ம் தேதி காலை 6.40 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்த ராம்குமார் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே தான் தங்கி இருந்த விடுதிக்கு திரும்பிச் சென்றுள்ளார். அங்கு மதியம் வரை இருந்த ராம்குமார், தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மதியத்துக்கு மேல், தங்கும் விடுதியை விட்டு வெளியேறி உள்ளார்.

தங்கும் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ராம்குமார் மதியம் சுமார் 2 மணியளவில் வெளியேறுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளதாக காவல்துறையினர் கூறினர். எழும்பூர் செல்வதற்காக மீண்டும் நுங்கம்பாக்கத்துக்கு வந்த ராம்குமார், அங்கு இருந்து எழும்பூருக்கு சென்று முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் ஏறி சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

ராம்குமார் வீட்டில் குவிந்து கிடந்த செய்தித்தாள்கள்

செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த ஒரு வாரமாக இருந்த ராம்குமார், கொலை நடைபெற்ற அடுத்த நாளில் இருந்து தினமும் செய்தித் தாள்களை வாங்கி வீட்டில் வைத்து படித்து வந்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் வெளியான காலை மற்றும் மாலை செய்தித்தாள்களை அவரது வீட்டில் இருந்து போலீஸார் கைப்பற்றி உள்ளனர். சுவாதி கொலை குறித்து இந்த செய்தித்தாள்களில் வந்த தகவல்களை அவர் படித்து தெரிந்துகொண்டு, எவ்வாறு தப்பிப்பது என்ற சிந்தனையில் இருந்துள்ளார். தென்காசி இன்ஸ் பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் நேற்று காலையில் ராம்குமார் வீட்டுக்குள் சென்று, இந்த செய்தித்தாள்கள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

முகநூலில் இருந்து பெயர் நீக்கம்

சுவாதி தன்னுடன் நட்பாக பேசிப் பழகியதைத் தொடர்ந்து அவருக்கு ராம்குமார் முகநூல் மூலம் பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருக்கிறார். அதை சுவாதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். பின்னர் ராம்குமாரின் நடவடிக்கைகள் அவருக்கு பிடிக்காமல் போகவே, தனது நண்பர்கள் பட்டியலில் இருந்து அவரை சுவாதி நீக்கியிருக்கிறார்.

தங்கும் விடுதியில் முகாமிட்ட போலீஸார்

எம்.மணிகண்டன்

சுவாதியை கொலை செய்த ராம்குமார், சென்னை சூளைமேட்டில் உள்ள ஏ.எஸ்.தங்கும் விடுதியில் 3 மாதங் களாக தங்கியிருந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் காவல்துறை இணை ஆணையர் மனோகரன், துணை ஆணையர் பெருமாள் ஆகியோர் நேற்று காலை தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

சுவாதியை கொலை செய்த குற்றவாளி, அவரது செல்போனை எடுத்துச் வந்தார். அந்த எண்ணுக்கு சைபர் கிரைம் போலீஸார் 24-ம் தேதி காலை 8.30 மணி அளவில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினர். பின்னர் அந்த போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், சுவாதியின் போனுக்கு கடைசியாக சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 5-வது தெரு அருகே உள்ள டவரில் இருந்து சிக்னல் கிடைத்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு முதல் சவுராஷ்டிரா நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் போலீஸார் தீவிரமாக சோதனையிட்டனர். அங்கு 8-வது தெருவில் உள்ள ஏ.எஸ்.மேன்சனிலும் கொலை நடந்த 24-ம் தேதியே சோதனை செய்துள்ளனர். மறுநாள் நள்ளிரவில் 2 போலீஸார் அந்த விடுதிக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது குற்றவாளியின் புதிய படத்தை பார்த்த விடுதி காவலாளி கோபால், அதில் உள்ளவர் போன்ற ஒருவர் விடுதியில் தங்கியிருந்ததாக கூறியுள்ளார்.

கொலை நடந்த அன்று மதியம், விடுதியில் இருந்து வெளியேறிய ராம்குமார், தன்னை யாராவது பார்க்கிறார்களா என்ற பதற்றத்துடன் திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றதாக காவலாளி கோபால் கூறினார். அவர், அறைக்கு திரும்பி வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் போலீஸார் மஃப்டியில் சில தினங்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர். ஆனால், அவர் திரும்பி வரவில்லை.

பிரியாணி கடையில் பாக்கி

ராம்குமார் தங்கியிருந்த விடுதிக்கு எதிரே உள்ள பிரியாணி கடையில் பணியாற்றும் வி.மகேஷ் என்னும் ஊழியர்‘தி இந்து’விடம் கூறும்போது,

“ஏ.எஸ். மேன்ஷன் தங்கும் விடுதியில் உள்ளவர்கள் பலர் எங்கள் கடையில் கணக்கு வைத்து சாப்பிட்டு வருகின்றனர். சுவாதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் கடந்த ஜுன் 22-ம் தேதி (சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு 2 தினங்கள் முன்பு) இரவு எங்கள் கடையில் பிரியாணி சாப்பிட்டார். ரூ.120-க்கு சாப்பிட்ட அவர், ரூ.20தான் கொடுத்தார். மீதிப்பணத்தை கேட்டபோது, தான் எதிரே உள்ள தங்கும் விடுதியில் வசிப்பதாகவும், பணத்தை பிறகு தருவதாகவும் கூறிச் சென்றார். அன்றைய தினம் அவர் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து எங்கள் கடைக்கு வந்தார்” என்றார்.

சுவாதி மிகவும் நல்ல பெண்’

சுவாதியின் நெருங்கிய நண்பர்கள் 10 பேரிடம் போலீஸார் ஒரு வாரம் விசாரணை நடத்தினர்.

சுவாதியை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க, சுவாதியின் நண்பர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை பற்றி சுவாதியின் நண்பர் முகமது பிலால் என்பவரிடம் கேட்ட போது, “சுவாதி மிகவும் நல்ல பெண். குற்றவாளியை பிடிப்பதற்காக சுவாதியின் நெருங்கிய நண்பர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். என்னையும் சேர்த்து சுமார் 10 நண்பர்களிடம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸார் ஒரு வாரம் விசாரணை நடத்தினர். எங்களுக்கு தெரிந்த தகவலை போலீஸாரிடம் தெரிவித்தோம். போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். குற்றவாளியை கைது செய்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY