துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு பின்னரான ‘களையெடுப்பு’ தீவிரம்

0
182

turkey insதுருக்கியில் தோல்வி அடைந்த இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் நாட்டில் களையெடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதோடு மேலும் ஆயிரக்கணக்கான படையினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சதிப்புரட்சியின் பின்னணியில் இருந்ததாக குற்றம்சாட்டப்படும் மதகுருவை கையளிக்காவிட்டால் அமெரிக்காவுடனான உறவையும் மீள் பரிசீலனை செய்யப்போவதாக துருக்கி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் விலியுறுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு முறியடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் இதுவரையும் பொலிஸ், சிவில் சேவை, நீதித்துறை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டோ அல்லது கைது செய்யப்பட்டோ உள்ளனர். இதில் கிளர்ச்சிப் படையினர் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியின்போது 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

பரந்த அளவிலான பதில் நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் முயற்சி தொடர்பில் மேற்குலக கூட்டணி அதிருப்தி வெளியிட்டிருப்பதோடு, துருக்கி, நாட்டில் சட்ட ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளது. நேட்டோ உறுப்பு நாடான துருக்கி இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான யுத்த நடவடிக்கையில் அமெரிக்காவின் முக்கிய கூட்டணி நாடாகும்.

எனினும் அரசின் பதில் நடவடிக்கை மீது அதிருப்தி வெளியிடுபவர்கள் அரசை கவிழ்க்க ஆதரவு கொண்டவர்கள் என்று துருக்கி வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

சதிப்புரட்சி முயற்சியில் பங்கேற்ற சந்தேகத்தில் தலைநகர் அங்காரா மற்றும் பெரிய நகரான இஸ்தன்பூல் உட்பட மொத்தம் 8,000 பொலிஸ் அதிகாரிகள் அவர்களது பதவிகளில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று சுமார் 1500 நிதி அமைச்சு அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சி.என்.என் துருக் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி 30 ஆளுநர்கள் மற்றும் 50க்கும் அதிகமான உயர்மட்ட சிவில் சேவை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 மில்லியனுக்கும் அதிகமான சிவில் சேவகர்களின் விடுமுறை இடைநிறுத்தப்பட்டிருப்பதோடு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நீதிபதிகள் மற்றும் அரச வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 3,000ஐ நெருங்கியுள்ளது.

6,038 படையினர் உட்பட 7,543 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் பினாலி யில்திரிம் குறிப்பிட்டுள்ளார். இதில் சிலர் ஆடை களையப்பட்டு உள்ளாடையுடன் கையில் விலங்கிட்டு விளையாட்டு அரங்குகளில் நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 26 இராணுவ ஜெனரல்கள் மற்றும் கடற்படை தளபதிகளை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் விமானப்படை தளபதி அகின் ஒஸ்டுர்க் இந்த சதிப்புரட்சியின் இணைத்தலைவராக இருந்ததை ஒப்புக்கொண்டதாக துருக்கி அரச செய்தி நிறுவனமான அனடொலு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தனியார் தொலைக்காட்சியான ஹாபர்துர்க் இதற்கு முரணாக, தான் சதிப்புரட்சியை தடுக்க முயன்றதாக குறிப்பிட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பல காயங்களோடு காணப்பட்ட தளபதி, இந்த எழுச்சியில் தனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லை என்று மறுத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இராணுவ சதிப்புரட்சிக்கு மூளையாக செயற்பட்டவர் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மத குரு பதுல்லாஹ் குலன் என்று துருக்கி அரசு குற்றம் சுமத்துகிறது. எனினும் அவர் அதனை மறுத்து வருகிறார்.

குலனை நாடுகடத்த அமெரிக்காவை கோரும் ஆவணம் இந்த வாரம் பூர்த்தி செய்யப்படும் என்று எர்துவான் சி.என்.என் தொலைக்காட்சியிடம் குறிப்பிட்டுள்ளார். அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை முன்வைத்தாலேயே நாடுகடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அழிக்க முன்னின்றவர் பற்றி எமது நண்பர்கள் (அமெரிக்கா) ஆதாரம் கேட்பது அதிருப்தி அடையச் செய்கிறது. இந்த தருணத்தில் அவர்கள் எமது நண்பர்களா என்ற கேள்வியும் எழுகிறது” என்று பிரதமர் யில்திரிம் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வன்முறையில் 232 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் 208 பேர் அரச ஆதரவு சிவிலியன்கள், பொலிஸார் மற்றும் படையினர் என்றும் மேலும் 24 பேர் சதிகாரர்கள் என்றும் யில்திரிம் குறிப்பிட்டார். இந்த வன்முறைகளில் மொத்தம் 290 பேர் கொல்லப்பட்டதாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்போது கிளர்ச்சி படையினர் டாங்கிகள், தாக்குதல் ஹெலி கொப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் கொண்டு ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாராளுமன்றம், உளவுப் பிரிவு தலைமையகங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதோடு இஸ்தான்புலின் பிரதான விமான நிலையம் மற்றும் பாலங்களை கைப்பற்ற முயன்றனர். இந்த வன்முறைகளில் மேலும் 1,400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

மரண தண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய ஆதரவாளர்களின் கோரிக்கைகளை பாராளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எர்துவான் சி.என்.என் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், மரண தண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான துருக்கியின் பேராவல் நிறைவேறாமல் போகும் என்று பல ஐரோப்பியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் முயற்சியாகவே 2004இல் மரண தண்டனையை நீக்கியது.

இராணுவ சதிப்புரட்சி நிகழும்போது மார்மரிஸ் கடற்கரை சுற்றுலா தலத்தில் குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்த எர்துவான், தொலைக்காட்சி ஊடே மக்களை வீதிக்கு இறங்க அழைப்பு விடுத்தார். எர்துவானால் சனிக்கிழமை அதிகாலையில் விமானத்தின் ஊடே இஸ்தான்பூல் திரும்ப முடிந்தது. அப்போது அவர் வரும் விமானம் கிளர்ச்சிப்படை போர் விமானிகளுக்கு தெரிந்த போதும் அதனை சுட்டு வீழ்த்த தயக்கம் காட்டியுள்ளனர்.

மார்மரிஸில் இருந்து சற்று தாமதித்து சென்றிருந்தாலும் தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எர்துவான் திங்களன்று குறிப்பிட்டார். “எனது இரு உதவியாளர்கள் கொல்லப்பட்டார்கள், உயிர்த்தியாகம் செய்தனர்” என்று சி.என்.என்னுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். “நான் இன்னும் 10 அல்லது 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் கொல்லப்பட்டு அல்லது பிடிபட்டிருப்பேன்” என்றும் கூறினார்.

இந்த இராணுவ சதிப்புரட்சியில் ஈடுபட்ட மேலும் சில படையினரை துருக்கி பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இவர்கள் பல நகரங்களிலும் கிராமப்பகுதிகளிலும் சல்லடையிட்டு தேடப்பட்டு வருகின்றனர். எனினும் தற்போது ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தல்கள் இல்லை என்று சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ சதிப்புரட்சிக்கு முயற்சித்த சில உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த இராணுவ சதிப்புரட்சி முறியடிக்கப்பட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக கடந்த திங்கள் இரவிலும் துருக்கியின் மூன்று மிகப்பெரிய நகர சதுக்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அரசுக்கு ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

#Thinakaran

LEAVE A REPLY