தொற்றா நோய்களை கட்டுப்படுத்த சீனி, உப்பு, ‘சீஸ்’ வரிகள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் ராஜித

0
81

1397292443rajithதொற்றாநோய்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக சீனி, உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளுக்கான வரிகளை அதிகரிப்பதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இனிப்பு பானங்களின் வகைகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட ஒழுங்கு விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி உணவிலுள்ள சீனியின் அளவை மக்கள் அறிந்து கொள்வதற்காக வர்ண அடையாளங்கள் அதில் குறிப்பிடப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

10 கிராமிலும் கூடுதல் சீனி பயன்படுத்தப்படுமாயின் சிவப்பு நிறமும் 10 முதல் 02 கிராமுக்கு இடைப்பட்ட அளவு சீனி பயன்படுத்தப்படுமாயின் மஞ்சள் நிறமும் 02 கிராமிலும் குறைவான சீனி பயன்படுத்தப்பட்டிருப்பின் பச்சை நிறமும் காட்சிப்படுத்தப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

புகையிலை, சீனி, உப்பு மற்றும் இவை அடங்கிய பண்டங்களுக்கான வரியை மேலும் அதிகரிக்க வேண்டுமென தான் கடந்த வருடம் கூறிய போதும் பலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாகவும் ஆனால் தற்போது இதனை இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் 68 சதவீதமானோர் தொற்றா நோய்கள் காரணமாகவே உயிரிழந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனைக் கடடுப்படுத்த விரைவில் தீர்க்கமான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பாடசாலை மாணவர்களின் போஷாக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய கல்வி அமைச்சுடன் இணைந்து 06 முதல் -20 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு போஷனை குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக உணவுகளின் போஷனை குறித்த தகவல்கள் அடங்கிய 10 இலட்சம் புத்தகங்கள் அச்சிடப்படவுள்ளன.

அத்துடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் தெரிவு செய்யப்பட்ட உணவுகளை மாத்திரமே தற்போது மாணவர்களுக்காக விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Thinakaran

LEAVE A REPLY