ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கம்

0
146

201607190517428689_World-badminton-federation-clears-Ratchanok-in-dop_SECVPFஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கத்தை உலக பேட்மிண்டன் சம்மேளனம் ரத்து செய்துள்ளது. இதனால் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்.

தாய்லாந்தை சேர்ந்த முன் னணி பேட்மிண்டன் வீராங் கனையான ராட்சானோக் இன்டானோன் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக பெண்கள் ஒற்றையர் தர வரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

கடந்த மே மாதத்தில் சீனாவில் நடந்த உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்ட ராட்சானோக்கிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜூலை 13-ந் தேதி ராட்சானோக்கை இடைநீக்கம் செய்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது. இந்த பிரச்சினை குறித்து உலக பேட்மிண்டன் சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. வீடியோகான்பரன்ஸ் மூலம் ராட்சானோக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணை முடிவில் ராட்சானோக் ஊக்க மருந்து விதிமுறையை மீறி தவறாக செயல்படவில்லை என்பது தெரியவந்ததால் அவர் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்து உலக பேட்மிண்டன் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தகவல் உலக பேட்மிண்டன் சம்மேளன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு ராட்சனோக் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது போடப்பட்ட வலி மருந்தால் தான் அவர் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கியதாக தெரிகிறது.

இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ராட்சானோக் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கலாம். உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் முடிவால் ராட்சானோக் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

தன் மீதான தடை ரத்து செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து 21 வயதான ராட்சானோக் பாங்காக்கில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனந்த கண்ணீர் மல்க அவர் கூறுகையில், ‘நான் குற்றமற்றவள் என்று நிரூபணமாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்தவித தவறும் செய்யவில்லை. உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் முடிவு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனக்கு நீதி கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. தாய்லாந்து மக்களுக்கு வெற்றியை அளிப்பதற்காக எனது பயிற்சியில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது கனவாகும். அந்த கனவு நனவாக உதவிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

LEAVE A REPLY