தமிழ் – சிங்கள மாணவர் மோதல்: ஜனாதிபதி கவலை

0
95

college_sirisena_Jaffnaயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் – சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

ஜெர்மன் அரசின் நிதி உதவியுடன் கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயற்சி நிலைய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.

அங்கு உரையாற்றிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டார்.

நாளைய தலைவர்களாகிய இளைஞர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டி இருக்கின்றது.

பல்கலைக்கழகங்களையும், தொழிற் பயற்சிக் கல்லூரிகளையும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குகின்ற மையங்களாகச் செற்படுத்த வேண்டும் என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுவது இலகு. ஆனால், அதனை நடைமுறைபடுத்துவது என்பது சவால் மிக்க செயற்பாடாகும்.

இருப்பினும் அதனைச் செயற்படுத்தாமல் விட முடியாது என்றார் அவர்.

இந்தக் கைங்கரியத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென கேட்டுக்கொண்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின் நிற்கப் போவதில்லை. வடபகுதி மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைத் தென்பகுதி மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்கள பௌத்த மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயற்பட வெண்டும் என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இந்த நிகழ்வில் ஜெர்மன், சுவிட்சர்லாந்து நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், யாழ்ப்பணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதர் மகாலிங்கம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சித்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

#BBC

LEAVE A REPLY