கடந்த இரண்டு வருடகாலமாக மட்டு மாவட்டத்தில் 80க்கு மேற்பட்ட கிராமசேவகர் வெற்றிடங்கள்

0
352

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ். ஞானசிறி

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

S. Gnanasriமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடகாலமாக சுமார் 80 இற்கு மேற்பட்ட கிராமசேவகர் வெற்றிடங்கள் உள்ளதாக ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ். ஞானசிறி தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (18) திங்கட்கிழமை கருத்துத் தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 385 கிராம சேவகர் கடமைப் பிரிவுகள் உள்ளன.

ஆயினும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 80 இற்கு மேற்பட்ட கிராம சேவகர் வெற்றிடங்கள் காணப்படுகின்றபோதும் பதில் கடமை மூலமே அந்தக் கிராமப் பிரிவுகளுக்கான கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன.

பதில் கடமைக்குரிய வேதனம் மேலதிகமாக வழங்கப்படுகின்ற போதும் அது போதாது என்கின்ற விடயத்தை கிராம சேவகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விடயத்தை நாம் அதிகார உயர் மட்டத்திற்குத் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

ஒரு தொகுதியாக ஏக காலத்தில் கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவதும் அதேபோல ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் செல்வதுமே இத்தகைய அதிகளவான வெற்றிடங்கள் ஒரு மாவட்டத்தில் நிலவுவதற்குக் காரணமாகும்.

வருடாவருடம் நியமனங்கள் இடம்பெறுமாயின் இந்த வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவ வாய்ப்பில்லை. ஒரு தொகுதியினர் ஓய்வு பெற இன்னொரு தொகுதியினர் கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியவாறு கிராம சேவகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இலங்கை நிருவாகச் சக்கரத்திலே இருக்கின்ற அடிப்படையான அதேவேளை முக்கியமான நிருவாகிகள் கிராம சேவகர்கள்.

எனவே, அவர்கள் வேலைப்பளுவின்றி கடமையாற்றுவதற்கு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

LEAVE A REPLY