மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் வீதம் குறைவு: பிரபாகரன்

0
196

(விசேட நிருபர்)

imageமட்டக்களப்பு சிறைச்சாiயில் முன்பெல்லாம் நாளார்ந்தம் 500க்கும் 600க்கு மிடையில் கைதிகள் காணப்பட்ட போதிலும் தற்போது அது குறைவடைந்து சுமாராக 350 கைதிகளே காணப்படுகின்றனர் என மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

மதுவை வெற்றி கொள்வோம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தில் 16.7.2016 சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகமும் மட்டக்களப்பு கல்லடி விமோச்சனா இல்லமும் இணைந்து நடாத்திய இந்த கலந்துரையாடலில் தொடர்ந்துரையாற்றிய அவர் சிறைச்சாலைக்குள் வரும் கைதிகள் விடுதலையாகி செல்லும் வரை கைதிகளின் பாதுகாப்பு அவர்களின் புனர்வாழ்வு என்பற்றை கவனத்திற் கொண்டு எமது சிறைச்சாலை திணைக்களம் செயலாற்றி வருகின்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையைப் பொறுத்த வரைக்கும் முன்பெல்லாம் நாளார்ந்தம் 500க்கும் 600க்கு மிடையில் கைதிகள் காணப்பட்ட போதிலும் தற்போது அது குறைவடைந்து சுமாராக 350 கைதிகளே காணப்படுகின்றனர்.

இதற்கு காரணம் சமுதாயஞ்சார் சீர் திருத்த உத்தியோகத்தர்களின் வழிப்புனர்வு நடவடிக்கை அல்லது பல் வேறு விழிப்புனர்வு நடவடிக்கையாக இருக்க கூடும்.

சிறைச்சாலைக்குள் வரும் கைதிகளை பாதுகாப்பதுடன் அவர்களுக்குரிய புனர்வாழ்வு வழங்குவதுடன் அவர்களுக்கான தொழில் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

சிறைச்சாலைகளில் இட நெருக்கடி காணப்படுவதால் சிறு குற்றத்திற்காக சிறைச்சாலைகளுக்குள் வரும் கைதிகளும் பெரும் குற்றம் செய்து கைதிகளாக சிறைக்குள் இருப்பவர்களுடன் போட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனால் பெரும் குற்றம் செய்தவர்களுடன் சிறு குற்றம் செய்தவர்கள் ஒன்றாக இருப்பதால் அவர்கள் பெரும் குற்றம் செய்தவர்களுடன் பழகும் நேரத்தில் சிறு குற்றம் செய்தவர்கள் விடுதலையாகி வெளியில் வந்தவுடன் அவர்கள் பெரும் குற்றம் செய்யவும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை.

சிறு குற்றம் செய்தவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரிவிடம் நீதிமன்றத்தினால் ஒப்படைக்கப்படுகின்றனர். அதன் மூலம் அவர்கள் சமுதாயஞ்சார் சீர் திருத்த உத்தியோகத்தர்களின் கண் கானிப்பில் அவர்கள் புனர்வாழ்வு பெற்று அவர்கள் விடுதலையாகி செல்கின்றனர்.

இது சிறைச்சாலையில் இட நெருக்கடியை குறைக்கவும் சிறைச்சாலையின் செலவுகளை கட்டுப்படுத்தவும் பெரும் உதவியாக அமைகின்றது.

சிறைச்சாலைக்குள் இருக்கும் சிறைக்கைதிகளுக்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் கைதிகளுக்கு புனர்வாழ்வு திட்டத்தினையே பிரதானமாக மேற் கொண்டுவருகின்றது.

சிறையில் இருக்கும் கைதிகளை நற்பிரஜைகளாக உருவாக்க சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பாடுபடுவதுடன் வருடத்தில் ஒருநாள் கைதிகளை அவர்களின் குடும்பங்களோடு இணைத்து அவர்களுக்கான ஒன்று கூடலையும் நடாத்துகின்றோம்.

அதே போன்று வெளியில் இருக்கும் கைதிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கைதிகளின் நலனில் சிறைச்சாலை திணைக்களம் சிறைச்சாலை நிருவாகம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அக்கறையுடன் செயலாற்றி வருகின்றனர்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் அதே போன்று சமுதாயஞ்சார் சீர் திருத்த உத்தியோகத்தர்களுக்குமிடையில் இன்று சிறந்த உறவு காணப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY