சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிரிவு மக்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்கிறது: மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா

0
135

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

276a7273-cf73-40d2-96ae-6e420463681eவடக்கு கிழக்கில் சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிரிவு மக்களுக்கு அளப்பரிய சீர்திருத்தங்களைச் செய்து கொண்டிருப்பதாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிராந்திய காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு விமோச்சனா இல்லம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “மதுவை ஒழித்து வாழ்க்கையை வெற்றி கொள்வோம்” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு மட்டக்களப்பு, கல்லடி விமோச்சனா இல்லத்தில் அதன் பணிப்பாளர் தேவதர்மினி செல்விகா சகாதேவன் தலைமையில் சனிக்கிழமை (ஜுலை 16, 2016) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய நீதிபதி கணேசராஜா,
சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணி மட்டக்களப்பு மாவட்டத்திலும் வெகு சிறப்பாக இடம்பெறுகிறது.
மதுவுக்கு அடிமையாகி, குடும்பத்தில் முரண்பட்டு, வாழ்க்கையைச் சீரழித்து நிதிமன்ற வழக்குகளுக்கு முகங்கொடுத்து வருபவர்களை நாம் இந்த விமோச்சனா இல்லத்துக்கு சீர்திருத்தத்திற்காக அனுப்பி வைக்கின்றோம். அதன் பயனாக அவர்கள் மதுவுக்கு அடிமையாவதிலிருந்தும் பிறழ்வான நடத்தைகளிலிருந்தும் விலகி குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பிரயோசனமுள்ள பிரஜைகளாக மாறிவருகிறார்கள்.

இவ்விதம் பலர் இத்தகைய சீர்திருத்தப் பணிகள் மூலம் பயன்பெற்றுள்ளார்கள். நீதிமன்றத்தின் பணி எப்பொழுதும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே இடம்பெறுகின்றது. சிறுகுற்றவாளிகளை சிறையிலிடும்போது சில சமயங்களில் அங்குள்ள பெரும் குற்றவாளிகளுடன் அவர்கள் பரஸ்பரம் பழகி பெருங்குற்றமிழைக்கவும் வழியேற்படும் என்பதால் சிறுகுற்றவாளிகளை நாம் முதலில் சீர்திருத்தம் செய்யுமிடங்களுக்கு அனுப்புகின்றோம்.

இதனால் இவ்வாறான சீர்திருத்த சேவை மக்களுக்கு மிகப் பயனுள்ளதாய் அமைந்துள்ளது” என்றார். இந்நிகழ்வில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யூ.எச். அக்பர், மட்டக்களப்பு, கல்லடி விமோச்சனா இல்லப் பணிப்பாளர் தேவதர்மினி செல்விகா சகாதேவன் மற்றும் சீர்திருத்தத்திற்குட்பட்ட பயனாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY