பிரான்ஸ்: பயங்கரவாதத் தாக்குதலில் 84 பேர் பலி

0
69

blast1பிரான்ஸின் நைஸ் நகரில் மக்கள் மீது லாரியை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 84 பேர் பலியாகினர். இது, பயங்கரவாதத் தாக்குதல் என்று அந்நாட்டு அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி, நைஸ் நகரில் வியாழக்கிழமை நள்ளிரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை காண்பதற்காக வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். அப்போது, லாரியை ஓட்டி வந்த மர்ம நபர், மக்கள் கூட்டத்துக்குள் அதனை அதிவேகமாக செலுத்தினார். சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அவர் லாரியை கண்மூடித்தனமாக ஓட்டினார்.

இதில், லாரியின் சக்கரங்களில் சிக்கி உடல் நசுங்கியும், தூக்கி வீசப்பட்டும் பலர் உயிரிழந்தனர். அந்த பகுதியே பிணக் குவியலாக மாறியது. இதனிடையே, தாறுமாறாக லாரியை ஓட்டிய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

84 பேர் பலி: பிரான்ஸ் மட்டுமின்றி உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலில், 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு தெரிவித்தார். காயமடைந்தோரில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பயங்கரவாதத் தாக்குதல்: நைஸ் நகர தாக்குதல் குறித்து, தொலைகாட்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு அதிபர் பிராங்சுவா ஹொலாந்த், “இது, பயங்கரவாதத் தாக்குதல் என்பதை மறுப்பதற்கில்லை’ என்றார்.

தற்போதைய தாக்குதல் எதிரொலியாக நாட்டில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்படும் என்றும், சிரியா-இராக்கில் ஜிகாதிகளுக்கு எதிரான பிரான்ஸ் அரசின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும் ஹொலாந்த் தெரிவித்தார்.

துனீசியாவைச் சேர்ந்தவர்: லாரியை ஓட்டி வந்த நபர், பிரான்ஸ் குடியுரிமை பெற்ற துனீசிய நாட்டு இளைஞர் (31) என்பதும், அந்த லாரியில் துப்பாக்கிகள், பெரிய ஆயுதங்கள் இருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், “அந்த நபர், நைஸ் நகரில் தான் வசித்து வந்துள்ளார். அவருக்கு எதிராக சிறிய அளவிலான குற்ற வழக்குகள் இருக்கின்றன’ என்றனர். எனினும், அந்த இளைஞரின் பெயர் விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை.

LEAVE A REPLY