கல்குடா கல்வி வலயத்தில் உடனடியாக 150 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: சீனித்தம்பி யோகேஸ்வரன்

0
355

78407c41-6d5e-4d4c-8364-e985591aef41(வாழைச்சேனை நிருபர்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் கல்குடா கல்வி வலயத்தில் உடனடியாக 150 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய தொழில் நுட்ப ஆய்வு கூடம் நேற்று (15.07.2016) திறந்து வைக்கப்பட்ட அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.போல், பிரதேச பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

கடந்த அரசாங்கத்தினால் ஆயிரம் பாடசாலை திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடமானது மத்திய அரசாங்கத்தின் நிதியினால் அமைக்கப்பட்ட கட்டடமாகும். இக்கட்டடத்தை எப்பாடசாலைக்கு அமைக்க வேண்டுமென கல்வி வலயங்களினூடாக விபரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, எங்களினூடான சிபார்சில் இக்கட்டடங்கள் அமைக்கப்பட்டது.

ஆனால் இது மாகாண சபைக்குத்தான் அதிகாரம் உள்ளது என கருதி மாகாண சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டினார்கள். அதில் எங்களை அனுமதிக்கவில்லை. இது மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கட்டடம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனை முன்னாள் முதலமைச்சர் தான் இக்கட்டடத்தை கொண்டு வந்தார் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் தான் இதனை கட்டுவதற்கு சிபார்சுகளை மேற்கொண்டோம் என்பதை நீங்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.

இப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரவியத்தையும் இந்நிகழ்வுக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவரை அழைக்கவில்லை. ஒரு தவறு நடைபெற்றுள்ளது.

இப்பகுதி கல்வியின் முன்னேற்றமடைந்து தற்போது பலர் அதிபர்களாக, ஆசிரியர்களாக, கல்வி மான்களாக வந்துள்ளார். ஆனால் போதிய வளம், வசதிகள் இங்கு இல்லை. இவை நிறைவேற்றப்படுமானால் இப்பாடசாலை இன்னும் முன்னேற்றமடையும். இதற்கு கல்வி அமைச்சர் கூடிய அக்கறை காட்ட வேண்டும்.

சில அமைச்சர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு வேலை வழங்;குகின்றார்கள். ஆனால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் அவருடைய உறவினருக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. ஏனெனில் அனைவருக்கும் சமனாக கொடுக்க வேண்டும் என்பதில் உள்ளார்.

கல்குடா கல்வி வலயத்தில் கிட்டத்தட்ட 240 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இதற்குரிய ஆசிரியர்கள்; இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு எதிராக பல பாடசாலைகளினால் ஆர்பாட்டங்கள் நடாத்தப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சரை காப்பாற்ற நாங்கள் ஆர்ப்பாட்டத்தை தடுத்து வருகின்றோம். மிக விரைவில் கல்குடா வலயத்தில் 150 ஆசிரியர்களையாவது நியமித்து தரவேண்டும்.

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தால் கிழக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெறும் வலயமாக கல்குடா கல்வி வலயத்தை எங்களின் துணையோடு மாற்றமுடியும்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பாடசாலையில் பல வருடங்களாக உள்ள ஆசிரியர்களை இணங்கண்டு மற்றையவர்களுக்கும் இடம்கொடுத்து சமத்துவமாக இடமாற்றுங்கள். அவ்வாறு இடம்பெற்றால் ஆசிரியர் பற்றாக்குறை இடம்பெறாமல், மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்த முடியும்.

அறுநூறு பாடசாலைகளின் தெரிவில் வாகரைக் கோட்டத்தில் எந்தவொரு பாடசாலையும் தெரிவு செய்யப்படவில்லை. அந்தவகையில் வம்மிவட்டவான் பாடசாலையை தெரிவு செய்யுமாறு கோரி மகஜர் அனுப்பியுள்ளேன் என்றார்.

LEAVE A REPLY