கிழக்கு மாகாணத்தில் 1100 மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான வேலைகள் நடைபெறுகிறது: சி.தண்டாயுதபாணி

0
204

(வாழைச்சேனை நிருபர்)

7ff9e18b-bcd5-4fa7-bfce-1da5bd0db766கிழக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடத்திற்கு 1100 மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய தொழில் நுட்ப ஆய்வு கூடம் நேற்று (15.07.2016) திறந்து வைக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.போல், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.

கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பாடசாலை திட்டத்தில் 103 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் பாடசாலைக்கு தொழில் நுட்ப ஆய்வு கூடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நல்ல முறையில் மாணவர்களை பயன்படுத்தி கல்வி அறிவை ஊட்ட வேண்டும். அத்தோடு கணித மற்றும் விஞ்ஞான ஆய்வு கூட உபகரணங்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்து வரவேண்டும். சில பாடசாலைக்கு இன்னும் வந்து சேராமல்; உள்ளது. இதனை மாகாண கல்வி அமைச்சு வழங்குவதில்லை. இது மத்திய அரசாங்கத்திற்குரிய திட்டம் என்பதால் அங்கிருந்து தான் தர வேண்டும்.

ஆனால் இது மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள பாடசாலையல்ல. மத்திய அராசங்கமும் மாகாண பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்க முடியும். இலங்கையில் 325 தேசிய பாடசாலை தான் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளது. மிகுதியாகவுள்ள பத்தாயிரம் பாடசாலை மாகாண சபையின் கீழ் உள்ளது.

கிராமிய மாணவர்களின் கணனி அறிவை ஊட்டுவதற்கு தற்போது உங்களுக்கு கணனி வசதிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.

கல்குடா கல்வி வலயத்தில் பத்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்கள் மாத்திரமே இடமாற்றங்களின் பிரகாரம் இடம்மாற்றம் பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு பதிலாக மட்டக்களப்பில் இருந்து இடமாற்றம் செய்தோம் அது பூரணமாக வெற்றியளிக்கவில்லை.

தாங்கள் கஷ்ரப் பிரதேசங்களில் கடமையாற்றினோம் என்று மேல் முறையீடு செய்தவர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கினோம். மற்றையவர்களை உடனடியாக செல்ல வேண்டுமென தெரிவித்தோம். அவர்களின் சிலர் வந்துள்ளனர். இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பில் இருந்து 28 பேர் இடமாற்றம் செய்தோம், அவர்களுக்கும் மேல் முறையீடு செய்துள்ளார்கள்.

கல்குடா கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் இடமாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சும், மக்கள் பிரதிநிதிகளும் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார்கள். மாணவர்களை வீதிக்கு இறக்காமல் வகுப்பறையில் வைத்து கல்வியை போதிக்க வேண்டும்.

நான் சரியாக கடமையாற்றவில்லை என்று நினைத்தால் எனது கொடும்பாவியை கட்டி எரிங்கள். நான் செய்யும் வேலையை செய்து கொண்டுதான் போவேன். கல்குடா வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம், மூதூர் வலயம் மூன்றும் ஆசிரியர் பற்றாக்குறையால் கஷ்ரப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடம் உள்ளது. இதில் 1100 மேற்பட்ட கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவை கிடைக்கும் பட்சத்தில் இப்பாடத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்.

கல்விக் கல்லூரியில் இருந்து வருகை தரும் ஆசிரியர்களையும் பிரதானமாக இவ் மூன்று வலயங்களுக்கும் நியமனம் செய்வதற்கு காத்திருக்கின்றோம். கல்குடா வலயத்தில் நூறு வீதம் கிடைக்காவிடினும் நூறு ஆசிரியர்களையாவது வந்து சேர்வதற்கான ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.

LEAVE A REPLY