துருக்கியில் ராணுவ புரட்சியில் 60 பேர் பலி

0
125

201607161151315956_60-Killed-In-Turkey-Coup-Bid_SECVPFஆசியா, ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையில் உள்ள துருக்கி நாட்டில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது.

நேற்று அவர் விடுமுறையை கழிப்பதற்காக துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலா தலமான மர்மாரிஸ் எனும் பகுதிக்கு சென்றிருந்தார்.

தலைநகர் அங்காராவில் ஜனாதிபதி எர்டோகன் இல்லாத சூழ்நிலையில் துருக்கியில் நேற்று மாலை திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. தலைநகரில் உள்ள முக்கிய அலுவலகங்கள், விமான நிலையங்களை ராணுவம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து துருக்கி முழுவதும் ராணுவ சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக ராணுவம் அறிவித்தது.

இந்த திடீர் ராணுவ புரட்சியால் துருக்கி நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்காரா, இஸ்தான்புல் உள்பட பல பகுதிகளில் ஜனாதிபதி எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களில் திரண்டு ராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை பீரங்கி உள்ளிட்ட கனரக வாகனங்களில் வந்த ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர்.

சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதனால் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ராணுவ ஹெலிகாப்டர்களில் பறந்து வந்தும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

ராணுவத்தின் இந்த தாக்குதலில் 60 பேர் பலியானார்கள். அவர்களில் 17 பேர் போலீஸ்காரர்கள் ஆவார்கள். மக்களிடம் இருந்து மேலும் எதிர்ப்பு வருவதைத் தடுக்க போக்குவரத்து முடக்கப்பட்டது.

அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். எர்டோகன் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதற்காக அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் ராணுவத்தினர் குண்டுகளை வெடிக்க செய்தனர். முக்கிய சாலைகளில் ராணுவ டாங்கிகள் அணி வகுத்து சென்றன.

இதற்கிடையே துருக்கி பாராளுமன்றம் மீது ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. விமான நிலையங்கள் மூடப்பட்டதால் துருக்கியில் இருந்து எந்த விமானமும் புறப்பட்டு செல்லவில்லை. வெளிநாடுகளில் இருந்தும் எந்த விமானமும் துருக்கிக்கு செல்லவில்லை.

இதற்கிடையே ராணுவ நடவடிக்கைகள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் ராணுவத்தினர் முடக்கினார்கள். டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற இணைய தளங்கள் மூலம் எந்த தகவலும் பெற இயலவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி எர்டோகன் இன்று அதிகாலை விமானம் மூலம் இஸ்தான்புல் திரும்பினார். அவர் ஸ்கைப், பேஸ்டைம் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். துருக்கி பிரதமர் பினாலியும் ஸ்கைப் மூலம் மக்களை தொடர்பு கொண்டு பேசினார்.

ஜனாதிபதியும் பிரதமரும் மக்களிடம் பேசுகையில், ‘‘நாங்கள் ஆட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறோம். மக்கள் பயப்பட வேண்டாம். ராணுவத்தில் ஒரு பிரிவினர் மட்டும் இந்த துரோக செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை பிடிக்க நினைக்கும் அவர்களது முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால் பொது மக்கள் தெருக்களில் நடமாட கூடாது என்றும் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் துருக்கியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி எர்டோகன் தற்போது துருக்கியில் ரகசிய இடத்தில் இருந்தபடி செல்போனில் உரையாடி வருகிறார். ராணுவ புரட்சி தோற்கடிக்கப்படும் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். அவருக்கு துருக்கி போலீசார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆதரவாக உள்ளனர்.

துருக்கியின் பல பகுதிகளில் அவர்கள் ராணுவ எச்சரிக்கையை மீறி தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அமெரிக்க ஆதரவு பெற்ற மதகுரு பெதுல்லா குலன் தூண்டுதலின் பேரில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்கள்-ராணுவத்தினர் இரு தரப்பினரும் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துருக்கி அரசியலில் எத்தகைய முடிவு ஏற்படும் என்ற நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.

ராணுவ புரட்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி எர்டோகனும் பிரதமர் பினாலியும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று காலை புதிய ராணுவ தளபதியை நியமனம் செய்து அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக ராணுவ புரட்சிக்கு உதவி செய்ததாக 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே துருக்கியில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சிக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. துருக்கியின் பக்கத்து நாடான ஈரான் தன் எல்லைகளை இழுத்து மூடி விட்டது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் தெரசா ஆகியோர் துருக்கி ராணுவ புரட்சி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அமெரிக்க வெளியுறவு மந்திரி துருக்கி ஜனாதிபதியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்தியாவும், துருக்கி ராணுவ புரட்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் துருக்கி சென்றுள்ள தமிழக விளையாட்டு வீரர்கள் 11 பேர் திடீர் ராணுவ புரட்சியால் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். துருக்கியின் வடகிழக்கில் உள்ள நகரமான டிராப்சோனில் பள்ளிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து சுமார் 200 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 11-ந்தேதி தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டி வரும் 18-ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. திடீர் ராணுவ புரட்சி காரணமாக இந்த சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY