க. பொ. த. (சா/த), உயர்தர சான்றிதழுக்கு சமமாக தொழில் த​கைமை (NVQ) சான்றிதழ்

0
272

Mahinda Samarasinge NVQ க. பொ. த. சாதாரண மற்றும் உயர்தரச் சான்றிதழ்களுக்குச் சமமானதாக என். வி. கியூ. 3 மற்றும் 4 தரச் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த திறன்விருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்தச் சான்றிதழ்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில் வாய்ப்புகளுக்கு பயன்படுத்தக்கூடிய விதத்தில் அமைச்சரவையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தொழிற் கற்கைகளை வழங்கும் இலங்கை – ஜெர்மன் பயிற்சி நிலையத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்படவிருப்பதாகவும் இதன் மூலம் வடக்கு கிழக்கு பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளி்க்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

திறன் விருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சு அதன் உத்தியோகபூர்வ இணைப்பு பத்திரிகையான தொழில் திறன் பத்திரிகையை லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து மும்மொழிகளிலும் வெளியிடத் தொடங்கியுள்ளது. இதன் உத்தியோகபூர்வ வெளியீட்டு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை லேக்ஹவுஸ் நிறுவனத்தில் அதன் தலைவர் காவன் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற போதே அமைச்சர் மகிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது,

sec_nvqஇன்றைய நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க 2014 இல் உலக இளைஞர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சர்வதேச தினமாக இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் இலங்கை பெருமையடைகின்றது.

இதேபோன்று தான் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக இருந்த போது வெசாக் தினத்தை ஐ. நா. மூலம் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்துமாறு கோரிய போது ஐ. நா. எதுவித தயக்கமும் காட்டாமல் பிரகடனப்படுத்தியது. இவற்றின் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கை உயர்ந்து காணப்பட்டது.

பாடசாலைக் கல்வியின் மூலம் க. பொ. த. சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகளின் சான்றிதழ்களுக்குச் சமமானதாக தொழிற் கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை எமது அமைச்சு மேற்கொண்டு அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டோம் இந்த என். வி. கியூ. 3, என். வி. கியூ. 4 இரண்டு சான்றிதழ்களும் க. பொ. த. சாதாரண மற்றும் உயர்தர சான்றிதழ்களுக்கு சமமானவையாகும். இவற்றின் மூலம் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் நல்ல தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இச்சான்றிதழ் வைத்திருப்போர் அரச தொழில் வாய்ப்புகளை மட்டும் நம்பி இருக்கத் தேவையில்லை. வெளிநாடுகளில் நல்ல தொழில் வாய்ப்புகளைத் தேடிக்கொள்ள முடியும்.

அத்துடன் வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தொழில் கல்வியை பெற்றுக்கொடுக்கும் இலங்கை ஜெர்மன் பயிற்சி நிலையத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சியில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் திறந்து வைப்பார்.

வடக்கு கிழக்குக்கு முன்னுரிமை வழங்கினாலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் இளைஞர் யுவதிகளும் இதன் மூலம் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும், மாத்தறையிலிருந்து கூட விண்ணப்பங்கள் இதற்குக் கிடைத்துள்ளன. 2012 ல் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் வடக்கு கிழக்கை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்றோ பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மத ரீதியிலோ நாம் பிளவுபட்டுச் செயற்பட முடியாது. எல்லோரும் இலங்கையர்கள் என்ற மனநிலை எம்மில் ஏற்பட வேண்டும். சிங்கள நாடென்றோ, பௌத்த நாடென்றோ நாம் சிந்திக்க முடியாது. இனம், மதம், மொழி கடந்து இலங்கை என்ற மனோநிலை ஒவ்வொருவரிடத்திலும் உருவாக வேண்டும். அனைவரும் சமமானவர்களாகவே மதிக்கப்பட வேண்டும்.

முன்னர் லேக்ஹவுஸ் பத்திரிகைகள் மீது அரசு கைப்பாவை என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது. இன்று அந்த நிலை முற்றுமுழுதாக மாற்றப்பட்டுள்ளது. எதிர்க் கட்சிகளின் செய்திகளைக் கூட லேக்ஹவுஸ் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. லேக்ஹவுஸ் இன்று அரசு இயந்திரமாக செயற்படவில்லை.

இன்று எவராலும் படிக்கக் கூடியதாக லேக்ஹவுஸ் பத்திரிகைகள் காணப்படுகின்றன. முடிந்தளவுக்கு உண்மையைச் சொல்லக்கூடியதாக லேக்ஹவுஸ் நிறுவன பத்திரிகைகள் செயற்பட்டு வருகின்றன.

வர்த்தக நோக்கத்துக்காக கண்மூடிக்கொண்டு கண்டதையெல்லாம் எழுதுவது பத்திரிகா தர்மமாகாது. நேர்மை, நியாயம், சமாந்திரப் போக்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இந்த போக்கை இன்று நாம் லேக் ஹவுஸ் பத்திரிகைகளில் காண்கின்றோம். எதிர்க் கட்சியினரால் கூட விரும்பிப் படிக்கக்கூடிய விதத்தில் இந்தப் பத்திரிகைகள் இருக்கின்றன.

இந்த லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து மக்கள் சேவையாற்றுவதற்கு எமக்கு கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பம் பாரிய அதிர்ஷ்டமாகக் கருதுகின்றேன்.

இந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க நான் தீர்மானித்திருக்கின்றேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வைபவத்தில் லேக்ஹவுஸ் பொதுமுகாமையாளர் அபே அமரதாஸ, அமைச்சின் செயலாளர் பீ. ரணேபுர ஆகியோரும் உரையாற்றினர்.

தொழில் திறன் பத்திரிகையின் முதற் பிரதியை நிறுவனத் தலைவர் காவன் ரத்நாயக்க அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் கையளித்தார்.

#Thinakaran

LEAVE A REPLY