(Article) முஸ்லிம் காங்கிரசும் கலகங்களும்…

1
203

bcd6c117-5cfe-49ee-b9bd-a913ac07236dகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்கள்.சில கலகங்களின் போது நியாயம் பிறப்பிதில்லை. அத்தகைய கலகங்களின் போது நியாயம் பிறக்காமைக்கான காரணம் கலகத்திற்கு தலைமை வழங்குபவர்கள் நியாயவாதிகளாக இருப்பதில்லை.

மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு பதிலாக தலைவர்கள் கலகங்களை முன்னிருத்தி தமக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்கின்றனர்.ஈற்றில் மக்கள் மடையர்களாகவதுடன் தான் மடையர்களாக்கப்பட்டதையும் உணராத மக்களின் அப்பாவித்தனம் தொடர்ந்து மானங்கெட்ட தலைவர்களை வாழவைப்பதுதான் முஸ்லிம் அரசியலின் சோகம் நிறைந்த பக்கங்கள்.

மேற் சொன்ன சித்து விளையாட்டில் நமது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிக்கி திணறுவது சிந்திக்க வேண்டிய வரலாறாக பரிணமித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரசிற்குள் காலத்திற்கு காலம் காட்சிகள் அரங்கேரும். கதாநயகர்களாக பலர் அறிமுகமாகுவர் வில்லனாக தொடர்ந்து ஹக்கீமே காட்டப்படுவார். கலகக்காரர்கள் மக்களை ஈர்க்கும் கருத்துக்களை அறிக்கையாக வெளியிடுவர்.கட்சி சீர்திருத்தம் என்பர், நடைபவனி பாத யாத்திரை மேற்கொள்வர் சமூகமே பொது இலக்கு கட்சியை காப்பாற்றுவோம் என அறை கூவல் விடுவர். கடைசியில் காட்சி அமைச்சரவை அந்தஸ்துள்ளவராக புதி கட்சி தலைவராக கலகத்தலைவர் காட்டப்பட இனிதே வணக்கத்துடன் நாடகம் முடிவுறும்.நம்மாளும் சந்தியில் நின்று புழுகித்தள்ள புதிய அரசியல்வாதிகள், அமைப்பாளர் ஊருக்குள் தோற்றமெடுப்பர்.

2000 ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணம் முதல் இன்று வரை முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு கலகங்களை சந்தித்தள்ளது. இக்கலகங்களின் பின்னால் பல்வேறு தனிப்பட்ட நலன்கள் மறைந்து காணப்பட்டன.

வெளிப்பார்வையில் கலகங்களின் கோஷமாக கட்சி சீர்திருத்தம் மற்றும் சமுதாயம் சார் கோரிக்கைகள் மக்களுக்கு காட்டப்பட்டன ஆனால் கலகங்களின் முடிவுகள் கடைசியில் கலகக்காரர்களை அமைச்சர்களாக மாற்றியது மட்டுமே உண்மை.

2002 ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காலத்தின் போது பெருந்தலைவர் அஷ்ரப் விமான விபத்தில் கொல்லப்பட்டவுடன் முஸ்லிம் அரசியலில் ஏற்பட்ட வெறுமை பெரும் பேசு பொருளாக மாறியது. தலைமைத்துவப் போட்டி உக்கிரமடைந்தது.கட்சி இரண்டு அணிகளாக பிளவுபட்டது.தற்போதைய தலைவர் ஹக்கீமை முன்னிறுத்தி ஒர் அணியும் மறைந்த தலைவர் அஷ்ரபின் மனைவி பேரியல் அம்மையார் இத்தா இருந்த நிலையில் அவரை முன்னிருத்தி மற்றொரு அணியும் செயல்பட்டது. பின்னர் இணைத்தலைவர்களாக இருவரையும் கட்சி நியமித்தது.

அப்போதைய பாராளுமன்ற தேர்தலில் பதினொரு ஆசனங்களை கட்சி பெற்றுக் கொண்ட போது ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் ஆட்சி அமைக்க ஆதரவினை கோரிய போது ஹக்கீம் கரையோர மாவட்டம், முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி, மௌலவி ஆசிரியர் நியமனம், சில பிரதேசங்களுக்கான நிர்வாக செயலகங்கள் மற்றும் சபைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரிக்கா அம்மையாருக்கு முன்வைத்து அக்கோரிக்கைகள் நூறு நாட்களுக்குள் நிறை வேற்றப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்வைத்திருந்தார்.

ஹக்கீம் அணியை கையாள்வதில் சமுதாயஞ்சார் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் விரும்பம் அற்றிருந்த ஜனாதிபதி சந்திரிக்கா ஹக்கீமை கைவிட்டு விட்டு பேரியல் அம்மையாரை அனுகிய போது அவர் நிபந்தனையற்ற ஆதரவினை சந்திரிக்கா அம்மையாருக்கு இத்தா கடமையில் இருந்தவாறே அறிவித்தார். பின்னர் தலைமைத்துவத்தை கைப்பற்ற பேரியல் அம்மையார் கட்சிக்குள் கலகத்தை முடுக்கி விட்டார்.

இறுதியில் பல்வேறு சமரச முயற்சியின் பின்னர் சிரேஷ்ட கட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா முன்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீமும் தேசிய ஐக்கிய முன்னனி(நுஆ) தலைவியாக அம்மையாரும் நியமிக்கப்பட்டனர். தலைவர் அஷ்ரபின் பின் கட்சிக்குள் ஏற்பட்ட முதல் உடைவை கனகட்சிதமாக செய்து முடித்தவர் சந்திரிக்கா அம்மையாரே.

இச்சதிக்கு துணை போனதால் முஸ்லிம் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சந்திரிக்கா அம்மையார் கவனமாக தவிர்ந்து கொண்டதுடன் கட்சியை உடைத்து முஸ்லிம் அரசியலையும் சிதைத்தார். இதற்கு சன்மானமாக பின்னர் பேரியல் அம்மையார் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக முடி சூட்டிக் கொண்டார்.

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் சமூக நல்லிணக்கம் மற்றும் இனங்களின் கூட்டுச்செயல்பாட்டின் மூலமாக தேசிய ஒற்றுமையை அடி நாதமாக கொண்ட மறைந்த தலைவரால் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட நுஆ கட்சியை பேரியல் அம்மையார் கலைத்து சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் சங்கமமாகியதுடன் மடடுமில்லாமல் இன்று உணர்ச்சி வசப்படுத்தும் பேச்சின் மூலம் மாத்திரம் அரசியல் செய்யும் ஆசாத்திடம் நுஆ மாட்டிக் கொண்டு திணறுவதும் கவனிக்கத்தக்கதாகும்.

பின்னர் ஒரு கலகம் கட்சிக்குள் மூண்டது. அக்கலகத்திற்கு தலைமை; தாங்கியவர் பின்னாலின் குதிரைப்படைத் தலைவராக தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்ட அக்கரைப்பற்றின் குட்டி ராசா.
2002ல் உச்சபீட உறுப்பினர்கள் 10 பேரின் துணையுடன் தன்னை கட்சியின்; தலைவராகப் பிரகடப்படுத்தினார்.பின்னர் கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தார்.

இக்கலகத்தின் போது தன்னை சமூகத்தை மீட்க வந்த மானுட புருசனாக காட்டிக் கொண்டார். பல்வேறு கோரி;க்கைகளை முன்வைத்து புல்மோட்டையில் இருந்து பொத்துவில் வரை பாதையாத்திரை சென்றார்.இப்பாதையாத்திரை முழுவதும் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாற்றுகளையும் தலைவர் ஹக்கீமுக்கு எதிராக முன்வைத்தார். இப்பாதையாத்திரை மக்களை பெரிதும் கவர்ந்தது மக்கள் வெள்ளம் போல் அப்பாதையாத்திரையின் பின்னால் திரண்டனர்.ஈற்றில் மக்கள் மடையார்களாக்கப்பட்டனர். இறுதியில் அவர் குதிரை கட்சி தலைவனாகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் முடி சூட்டிக் கொண்டார்.

தலைவர் ஹக்கீம் தலைமைத்தவத்தின் கீழ் அவருக்கெதிராக கலகம் செய்து கட்சியை சீர்திருத்துவதாக நாடகம் ஆடிய இரண்டாவது சந்தர்ப்பமும் மீண்டும் கட்சி பெருந்தேசிய வாதத்தால் மற்றொரு தடவை உடைவுக்குள்ளாக்கப்பட்ட சந்தர்ப்பமாகும் என்பது இங்கு கவனிக்க தக்கதாகும்.

அக்கரைப்பற்று குறுநில மன்னரின் கலகத்தின் பின்னால் அவர் விருப்பம் கொண்டிருந்த கிழக்கு அபிவிருத்தி அமைச்சு அவருக்கு கிடைக்காமையே முக்கிய காரணமாகும். இவ் அமைச்சினை தலைவர் ஹக்கீம் அவருக்கு பெற்றுக் கொடுத்து இருந்தால் இந்த உடைவை சில வேளை தவிர்த்து இருக்கலாம்.

அக்கரைப்பற்று புயல் ஓய்வதற்கு முன்னே மீண்டும் ஒரு புயல் 2004ல் சூறாவளியாய் சுழன்று அடித்தது. அப்புயலினை மும்மூர்த்திகள் மூவர் வளிமண்டலத்தில் ஒளித்துக் கொண்டு வழி நடாத்தினர்.அப்புயலுக்கு ‘குமாரி’ என்றும் பெயரிட்டனர்.

ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட கலக நாடகங்களில் இருந்து மிக கேவலமானதாகவும் மட்டகரமானதாகவும் இக்கலகம் காணப்பட்டது. முந்தைய காலங்களில் சொந்த நிகழ்ச்சி நிரல் உள்ளுக்குள் மறைந்திருந்தாலும் தமது வெளிக் கோசமாக கட்சி சீர்திருத்தங்களையே முன் மொழிந்தனர்.

ஆனால் 2004ல் அரங்கேரிய கலக நாடகம் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கைவைத்து ஆடிய நாடகமாக அமைந்தது. முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டால் மாத்திரமே வெல்ல முடியும் என்ற அப்போதைய அரசியல் களச்சூழலை நன்றாக பயன்படுத்தி கட்சியில் இணைவதற்காக சம்மேளனங்களையும் உலமாக்களையும் பயன்படுத்தி கட்சிக்குள் டிக்கட்டை கஷ்டப்பட்டு பெற்று தேர்தலில் போட்டியிட்டு வென்ற மூவரில் இருவர் ஏற்கனவே நீலக்கட்சியின் விசுவாசிகள் மற்றவர் அரசியலுக்கு அப்போது புதுமுகம் தான் முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகி வேறு அரசியல் செய்வது தன் தாயோடு விபச்சாரம் செய்வதற்கு சமன் என்று அப்போது அவர் போட்டியிட்ட மாவட்ட தேர்தல் மேடைகளில் முழங்கியவர். இவ்மும்மூர்த்திகளே இக்கலகத்திற்கு தலைமைத்துவம் கொடுத்தனர்.

அக்கலகத்தின் நோக்கம் அப்பட்டமான தமது கட்சி விசுவாசத்தை சந்திரிக்கா அம்மையாருக்கு காண்பிப்பதுடன் தமது அமைச்சுப் பதவி ஆசையை அடைந்து கொள்வதுமாகும். தமக்கு முகவரி தந்த முஸ்லிம் காங்கிரசுக்கு துரோகம் செய்து அக்கட்சியை காட்டிக் கொடுத்து பதவிகளை பெற்றுக் கொள்ளும் சுயநல நோக்கமாகவே இருந்தது.

இக்கலகத்தின் போது தலைவர் ஹக்கீமின் அடிவயிற்றில் கைவைக்கப்பட்டது. இக்கலகக்காரர்களுடன் பைலா ஆடிய கதகளி நடனம் மிக மோசமான நம்பிக்கை துரோகமாக அமைந்தது.

தற்பொது கட்சிக்குள் ஏற்பட்டடிருக்கும் கலகமும் சொந்த லாபங்களை அடிப்படையாக கொண்டதே. தமக்கான தேசியல் பட்டியல் கிடைக்காமையும் தங்களுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காமையுமே இக்கலகம் தோற்றம் பெற பிரதான காரணங்களாகும்.

இக்கலகத்திற்கு தலைமை தாங்குகின்றவர்கள் கட்சியின் தலைமையோடு வலதும் இடதுமாக இருந்தவர்கள்.கடந்த காலங்களில் கட்சியின் தேசியல் பட்டியலை முழுமையாக அனுபவித்தவர்கள்.அத்தோடு கட்சிக்கு வரப்பிரசாதங்கள் கிடைத்து இருந்தால் அதன் நன்மைகள் இவர்களையும் நிச்சயமாக சென்றடைந்திருக்கும். இந்த இரண்டு கலகத் தலைவர்களும் கட்சியின்

வளர்ச்சியில் பங்களிப்பை வழங்கியவர்கள் என்பதும் இங்கு கவனிக்க தக்கது. இங்கு இயல்பாக சில கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.தமக்கான தேசியப்பட்டியல் நியமனம் ஆரம்பத்திலேயே கிடைத்து இருந்தால் தற்போது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பேசியிருப்பார்களா…? கட்சிக்குள் உட்கட்சி ஜனனாயகம் இல்லையென்று சொல்லும் இவர்கள் கடந்த காலங்களில் கட்சியின் தலைமை தமக்கான அதிகாரங்களை படிப்படியாக கூட்டிக் கொண்டதாக சொல்கின்றனர். அப்படியாயின் இத்தகைய தலைவரின் செயற்பாட்டை ஏன் மௌனமாக அங்கீகரித்தனர்…?

தற்போது இவர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகளை ஏன் முன்பே தட்டிக்கேட்கவில்லை…? திருகோணமலை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டதின் பின் இக்கலகம் வெடித்தது ஏன்…? அதற்கு முன் தலைவர் குற்றவாளி இல்லையா…? தற்போது தலைவர் பிழையானவர் என்றால் அவருடன் வலதும் இடதுமாக இருந்து அவரை வழிநடாத்திய இவர்களும் பிழையானவர்களே. எல்லோரும் ஒன்றாக இருந்து பிழைகளை செய்து விட்டு தலைவரை மாத்திரம் குற்றவாளி கூண்டில் ஏற்றுவதில் இருக்கின்ற நியாயம்தான்; என்ன…?

அதே நேரத்தில் செயலாளர் நாயகத்தின் அதிகார குறைப்பு விடயத்தில் செயலாளர் நாயகத்தடன் கலந்துரையாடாமல் நிறைவேற்றியமை தொடர்பில் உள்ள நியாயமான விமர்சனத்தையும் தலைவர் கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்சியின் கடந்த கால பிழைகள் தொடர்பிலும் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய சீரமைப்புகள் தொடர்பிலும் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் விடுகின்ற பிழைகள் இன்று மாற்று அரசியல் சிந்தனையை நோக்கி முஸ்லிம் வாக்காளர்கள் நகர்த்தப்படுகின்றமை தொடர்பிலும் தொடராக எம் போன்றவர்கள் (கட்டுரையாளர்) உள்ளிட்ட ஒரு குழு கட்சிக்குள் தைரியமாக பேசிவந்துள்ளமையையும் வருகின்றமையையும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

தற்போதைய கலகத்தின் ஒரு நல்ல விளைவொன்றையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது கட்சியை இதய சுத்தியுடன் சீர்தூக்கி பார்க்கும,; நடுநிலமை விமர்சனம் செய்யும் ஆரோக்கியமான கலந்தரையாடல் ஒன்று முடுக்கி விடப்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கதும் அவசியமான ஒன்றுமாகும்.

தலைவர் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் பின்னரான கட்சி வழிநடத்தலில் தலைவருடன் தவிசாளரின் பங்கேற்பு செயலாளர் நாயகத்தின் பங்கேற்போடு ஒப்பிடும் போது அதிகமானது. ஆக குற்றச்சாட்டுகளின் அளவுத் தொப்பி பங்;களிப்புக்கு ஏற்ப அவரவர் தலைக்கு அளவாக இருக்கும்.

முடிவாக இன்று கட்சிக்குள் தேவைப்படுவது ஒற்றுமையே பிரச்சினைகளை உள்ளுக்குள் பேசுவோம். ஓன்று பட்டு உரிமையை அடைய எல்லோரும் முயற்சிப்போம். வல்லவன் அல்லாஹ் துணை செய்வானாக…. ஆமீன்.

1 COMMENT

LEAVE A REPLY