இனப்பிரச்சினையை இதய சுத்தியோடு தீர்க்க உதவுங்கள் அமெரிக்க உதவிச் செயலாளர்களிடம் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

0
24

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

imageஇலங்கை இனப்பிரச்சினையை இதய சுத்தியோடு தீர்க்க உதவுங்கள் என திருகோணமலைக்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர்களிடம் கிழக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரை முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொம் மலினோவ்ஸ்கி ஆகியோர் சந்தித்தனர்.

அமெரிக்க அதிகாரிகளிடம் கிழக்கு மாகாணத்தினதும் நாட்டினதும் நடப்பு விவகாரங்கள் பற்றி எடுத்துக் கூறிய முதலமைச்சர், இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியிலும், பிரதம மந்திரியிலும் தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் முழு நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டு தொடராக இழப்புக்களைச் சந்தித்தவர்கள் என்ற வகையில் அந்த மக்களின் அமைதி வாழ்வுக்கான நம்பிக்கை வீண்போகாத வண்ணம் சமாதான முன்னெடுப்புக்களை நோக்கி நகரும் இலங்கை அரசுக்கு பொருளாதார ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் அமெரிக்கா பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதையே கிழக்கு மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

இனவாதிகளை ஒடுக்குவதற்கும் நாட்டில் சமாதானத்தின் கரம் ஓங்கச் செய்வதற்கும் இதுவே தக்க தருணம். அதேவேளை, இதய சுத்தியற்ற தேசிய மற்றும் சர்வதேச சமாதான முன்னெடுப்புக்களால் இந்த நாட்டு மக்கள் இனியும் இழப்புக்களைச் சந்திக்க இடமளிக்கக் கூடாது.

இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இனப்பிரச்சினையின் காரணமாக இடம்பெயரச் செய்யப்பட்டு அகதிகளான மக்களின் மீள் குடியேற்றத்தில் இன்னமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், சுனாமியாலும் மற்றும் பெருவெள்ளம் வறட்சி போன்ற இயற்கை இடர்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முறையான வாழ்வாதாரத் திட்டங்கள் வெற்றியளிக்காத நிலை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் குறைந்தபட்சம் அவர்கள் நிம்மதியாக கால் நீட்டித் தூங்க ஒரு வீட்டைக் கொண்டிருப்பது அவசியம், எனவே அதற்குத் தோதான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமெரிக்காவிடம் இருந்து கிழக்கு மாகாண சபை உதவிகளை எதிர்பார்க்கிறது.”

மேலும், இனப்பிரச்சனைத் தீர்வின் ஒரு அங்கமாக அரசியல் திருத்தத்தின் மூலம் அதிகாரப் பகிர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு இன்னமும் கிடைக்காதிருப்பது பலவழிகளில் அபிவிருத்திக்குத் தடையாக இருக்கின்றது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY