10 நாட்களில் 152 மெ.தொன் மீன் ஏற்றுமதி: மூடப்பட்ட 36 மீன் பதப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் திறப்பு

0
345

sri lanka fishகடந்த ஜூலை 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்து 52 ஆயிரம் கிலோ மீனை, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வமைச்சு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில்,

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக விடுக்கப்பட்ட மீன் ஏற்றுமதி தடையை கடந்த ஜூன் 21 ஆம் திகதி, அவ்வமைப்பு நீக்கியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் எமது நாட்டின் மீன் வளத்திற்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த ஜூன் 22 – 29 வரையான ஒரு வாரத்தில், 58 தொன் மீன்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ததோடு, ஜூலை 01 – 10 வரை, 152 மெற்ரிக் தொன் (1 இலட்சத்து 52 ஆயிரம் கிலோ கிராம்) மீனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தடை காரணமாக செயற்பாடற்று இருந்த 36 மீன் பதப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, உற்பத்தி நடவடிக்கைகள் மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

அத்துடுன் தற்போது, இலங்கையில் மாசி கைத்தொழில் முன்னேற்றமடைந்து வருகின்றது. எனவே எதிர்வரும் 2 வருடங்களில் வெளிநாட்டிலிருந்து மாசி இறக்குமதி செய்வதை நிறுத்தக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

தற்போது, ஹம்பாந்தோட்டை பஹஜ்ஜாவ கிராமத்தில் மாசி உற்பத்தி வெற்றிகரமாக இடம்பெற்று வருவதோடு, நாளொன்றுக்கு குடும்பம் ஒன்று 1,000 கிலோ மாசியை உற்பத்தி செய்வதோடு, அதன் கிலோ ஒன்று ரூபா 900 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டமையினால் வருடமொன்றுக்கு ரூபா 18,000 மில்லியனை இழக்க நேரிட்டதோடு, எதிர்வரும் வருட இறுதியில் மீன் ஏற்றுமதியின் மூலம் ரூபா 20,000 மில்லியன் வருமானத்தை பெறும் இலக்குடன் செயற்படவுள்ளதாக அமைச்சு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

#Thinakaran

LEAVE A REPLY