குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் மக்களின் சாட்சியங்கள் நிறைவு

0
180

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

c051967f-b9d4-4581-89be-7087cc081d22அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இரு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் கிராம மக்களின் சாட்சியங்கள் முடிவடைந்துள்ளன.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் மற்றும் நேரில் கண்டவர்கள் என அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 40- பேர் 12 நாட்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளித்துள்ளனர்.

இறுதியாக சாட்சியமளித்த 33 வயதான அருணாசலம் பிரபுராணி (சம்பவம் இடம்பெற்ற போது இவருக்கு 13 வயது) தமது சகோதரர்கள் முன்னிலையில் தனது தாயார் இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்ந சம்பவத்தை விவரித்துள்ளார். அதேவேளை, எதிரிகளில் ஒருவரையும் அவர் அடையாளம் காட்டினார்.

பொது மக்களின் சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பொலிஸ் மற்றும் பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள் சாட்சிகளாக அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணியான கே. எஸ். ரத்தினவேல் கூறினார்.

அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை ஜுன் 27ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

20 வருடங்களுக்கு முன்பு யுத்த காலத்தில் 1991 பெப்ரவரி 11-ம் தேதி இரவு இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 தமிழர்கள் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர்.

இந்த படுகொலை வழக்கில் தெஹியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்கள் எதிரிகளாக அடையாளம் காணப்பட்டு மூதூர் போலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1996ம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. யுத்த சூழ்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி எதிரிகள் இந்த வழக்கை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

மேல் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரிலே இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை ஏனைய ஆறு பேருக்கு எதிராகவே நடைபெற்று வருகின்றது.

ஏற்கெனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 6 இராணுவ வீரர்களும் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY