அத்தியாவசிய 15 பொருட்களுக்கான உயர் விலை நிர்ணயம்!

0
192

9d2cd46ee3edfed65525633459e1a1e8_Lமக்களுக்கு தேவையான 15 அத்தியாவசிய பொருட்களுக்கு ஸ்திரமான விலையினை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

சீனி, மைசூர் பருப்பு, கிழங்கு, வெங்காயம், மிளகாய், ரின்மீன், பயறு, கௌப்பி, உழுந்து, மல்லி, கடலை, சோயா, கருவாடு, நெத்தலிக் கருவாடு உள்ளிட்ட பதினைந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட அதி கூடிய விலையில் விற்பனை செய்கின்ற விற்பனையாளர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் வகையில் எமது அமைச்சின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வகையில் பாவனையாளர் அதிகார சபைக்கு இன்னும் 200 அதிகாரிகள் வரையில் உடனடியாக நியமனம் வழங்கப்படுவதுடன் தேவையான அதிகாரிகளை உள்ளீர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இன்று முதல் அனைத்து பிரதேசங்களிலும் விலை கட்டுப்பாடு தொடர்பில் 3000, 4000 கடைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. வற்வரி அதிகரிப்புடன் இணைந்ததாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களை தடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மொத்த வியாபாரிகள் குறிப்பிட்ட 15 பொருட்களுக்குமான விலைகளை நாளாந்தம் வழங்குவார்கள். அவை ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப்படும். அதுமட்டுமன்றி இவ் பதினைந்து பொருட்களுக்குமான மொத்த விலை, சில்லறை விலைகளை நிர்ணயித்து அவற்றினை வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானித்துள்ளோம்.

எனவே சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்களின் பணியை தாம் வேண்டி நிற்கின்றோம். தற்போது மூன்று பொருட்களின் விலைகளில் மாற்றம் இருக்கின்றது. சீனி, நெத்தலிக் கருவாடு, கடலை போன்ற விலைகளிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் இவ்விலைகளை குறைக்கும் நோக்கில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.

எனவே இவையனைத்தும் தீர்மானிக்கப்பட்ட பின்னர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களின் பின்னர் சிறந்த முறையை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். அத்துடன் ஜனாதிபதி பிரதமர் தலைமையில் நடைபெறுகின்ற மாதாந்த கூட்டத்தொடரிலும், மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு கூட்டத்தொடரிலும் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து சிறந்த முறையில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் அனைத்துப் பொருட்களுக்கும் அதியுச்ச சில்லறை விலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று இங்கும் அனைத்து பொருட்களுக்கும் அதியுச்ச சில்லறை விலை பொறிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இங்கு கருத்து தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மொத்த, சில்லறை விற்பனையாளர்களுடன் நாங்கள் இது தொடர்பில் கலந்துரையாடினோம். அதன்போது மூன்று பொருட்களுக்கான விலையிலேயே மாற்றம் ஏற்பட்டது. ஆயினும் சந்தையில் நுகர்வுக்கு வரும் போது அனைத்து அத்தியாவசிய பொருட்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்த வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் சில்லறை வியாபாரிகளுக்கு அதன் பின்னர் நுகர்வோருக்கும் சென்றடையும் போது பாரியளவிலான விலை மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு விலை விதிக்கப்படுகின்றது. இதனை முற்றாக இல்லாமல் செய்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் அனைத்து பொருட்களையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் ஆகியோரும் இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY