ஒரு தொகை உடுதுணிகளுடன் இந்தியப் புடவை வியாபாரிகள் இருவர் ஏறாவூரில் கைது

0
142

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

3b5b4943-063f-41d4-bbdb-9e3120c94ddcஇந்திய புடவை வியாபாரிகள் இருவர் செவ்வாய்க்கிழமை 12.07.2016 இரவு 8 மணியளவில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்து நீண்டகாலமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற விவரம் விசாரணையின்போது தெரியவந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

2003ஆம் ஆண்டிலிருந்து தான் இலங்கைக்கு வரத்தொடங்கி புடவை வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் உள்ளுர் கிராமத்தவர்கள் தனக்கு சுமார் 5 இலட்ச ரூபாய் அளவில் ஆடைகள் கொள்வனவு செய்த பணம் தரவேண்டியிருப்பதாகவும் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவர் கூறினார்.

முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கிராமப் புறங்களில் வீடுவீடாகச் சென்று சாறி, சல்வார் மற்றும் இன்னோரன்ன ஆடைகளை விற்பனை செய்து கொண்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து இந்தக் கைது இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

தென்னிந்தியா, தமிழ்நாடு, மதுரை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரையா அங்குறாஸ் (வயது 31), மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரன் சுப்ரன் (வயது 53) ஆகியோரே இலங்கையில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்து உடுதுணிகள் விற்பனையில் ஈடுபட்டபோது பிடிபட்டவர்களாகும்.

இவர்களிடமிருந்து இந்தியத் தயாரிப்பு சல்வார்கள் 72, சட்டைகள் 17 உட்பட சுமார் இரண்டு இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY