கஷ்டப் பிரதேச பாடசாலைகளின் அனைத்துப் பிரச்சினைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வது சவாலான விடயம்: மாகாணக் கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி

0
131

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

4d4c7fc9-8acb-4f1e-8156-4ec8d716f4f5கஷ்டப் பிரதேச பாடசாலைகளின் அனைத்துப் பிரச்சினைகளையும் தேவைகளையும் ஒரே தடவையில் பூர்த்தி செய்வது என்பது ஒரு சவால் நிறைந்த அதேவேளை முடியாத ஒரு காரியம் என கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தெரிவித்தார்.

ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (ஜுலை 11, 2016) பிற்பகல் இடம்பெற்ற விஞ்ஞான தொழினுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழாவின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் எஸ்;. தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாகாண அமைச்சர் தண்டாயுதபாணி, ஆசிரியர்கள் தேவை, மற்றும் பௌதீக வளத் தேவைகளை பாடசாலை நிருவாகம் கேட்கும்போது அதனை நிவர்த்தி செய்து கொடுக்கத்தான் நாங்களும் ஆர்வமுறுகின்றோம்.

ஆனால், நடைமுறையில் அது முடியாமற் போகும் அளவுக்கு எம்மிடம் நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. ஆயினும், ஏதோவொரு ஒழுங்குகளைச் செய்து பாடசாலைகளின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நிறைவு செய்து கொண்டுதானிருக்கின்றோம்.

பாடசாலைகளிலுள்ள பிரச்சினைகளை மாத்திரம் முன்னுரிமைப்படுத்திக் கொண்டு பாடசாலை நிருவாகத்தை முடங்கச் செய்ய முடியாது. ஒரு பாடசாலையின் அதிபர் ஒரு முகாமையாளராகக் கருதப்படுகின்றார்.

ஆகவே பாடசாலை அதிபரும் முகாமையாளருமான அவர் அந்தப் பாடசாலையிலே உள்ள வளங்களை உச்ச அளவிலே பாவித்து அதன் பயனை மாணவர்கள் அனுபவிக்கும் வகையில் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறான சிறந்த முகாமையாளராக செயற்பட எல்லா அதிபர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இளம்சந்ததியினருக்கு கல்விக்கான வாய்ப்புக்களைத் திறந்து கொடுப்பது படித்த படிக்காத அனைவர் மீதும் கடமையாகும். கல்வி வாய்ப்புக்களைப் பயன்படுத்தும் பிள்ளைகள் எதிர்காலத்தில் வளம்பெறுவார்கள். ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களிலே நிவர்த்திக்கப்படும். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் போதிக்கக் கூடிய 1134 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாக் கல்வி வலயம் ஆசிரியர் பற்றாக்குறையினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மத்திய கல்வியமைச்சிலிருந்து மாகாணக் கல்வி அமைச்சுக்குக் கிடைக்கக் கூடிய மூலதனச் செலவினங்களைக் கொண்டுதான் சில முன்னுரிமைப்படுத்த வேண்டிய பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றுக்கான கட்டிடங்கள் உட்பட சில வசதிவாய்ப்புக்களை நாங்கள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதேவேளை, தொழினுட்பவியல் ஆய்வுகூடம் போன்ற கல்விக்கான இன்னும் சில வேறுவகையான வசதிவாய்ப்புக்கள் மாகாணப் பாடசாலைகளுக்கு மத்திய அரசிடமிருந்து நேரடியாகக் கிடைத்து விடுகின்றன. அந்த வரப்பிரசாதங்களை மாணவர்களும் ஆசிரியர்களும் சரியான முறையில் முழுமையாகப் பயன்படுத்திப் பயனடைய வேண்டும்;.” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், பாடசாலை பிரதி அதிபர் என்;. இராஜதுரை உட்பட வேறு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY