இனி வரும் சந்ததிகள் இன மத பேதமின்றி வாழ வழிசமைத்துக் கொடுப்பதற்கு அனைவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்: மட்டக்களப்பில் ஜனாதிபதி

0
280

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Maithiri in Battiஇனி வரும் சந்ததிகள் இன மத பேதமின்றி இந்த வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுக்க அனைவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

நேற்று (10) மாலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெபர் மைதானம் சுமார் 201 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இந்த நாட்டில் தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற இலட்சக் கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு நாம் நாட்டில் இன ஐக்கியத்துடன் வாழ்வது பற்றி நடைமுறையில் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடப் போகின்றவர்கள் சிங்களவரா தமிழரா அல்லது முஸ்லிமா என்ற பேதங்கள் இருக்க முடியாது.

மட்டக்களப்பைப் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியும் ஏன் எனில் 1971 காலப்பகுதியில் நான் ஒன்றரை வருடங்கள் மட்டகக்ளப்பு சிறையில் கழித்திருக்கின்றேன்.

நாட்டிலுள்ள 24 மாவட்டங்களும் 9 மாகாணங்களும் அந்த மாகாணங்களில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சம கண்ணோட்டத்தில் நோக்கப்பட்டு அபிவிருத்திகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

இந்த நாட்டிலே வாழ்கின்ற சிங்கள பௌத்தர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், பறஹ்கியர்களுக்கும் சிறப்பான சரித்திரமும் கலாச்சாரமும் உண்டு.

இதனை யாரும் கொச்சைப்படுத்திவிட முடியாது. நாட்டிலே சட்டப்புத்தகத்தில் இருக்கின்ற விடயங்களை விட இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் கண்ணியமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும்.

மாறாக, இனவாதிகளும், கடுங்கோட்பாட்டாளர்களும் கோலோச்சுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த நாடு இனவாதிகளுக்கும் கடுங்கோட்பாட்டாளர்களுக்கும் உரியதல்ல அது அமைதியை விரும்பும் அனைத்து இன மக்களுக்கும் உரியது என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும்.

கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் சகவாழ்வுப் பட்டியலில் தூரத்திலே பட்டியலிடப்பட்ட எமது நாடு இப்பொழுது சமாதானத்தை நோக்கிச் செல்லும் நாடு என்ற வகையில் உலகிலுள்ள 163 நாடுகளில் 3வது இடத்திற்கு வந்துள்ளது.

இது நடைமுறையில் நாம் எதையோ சாதிக்கின்றோம் என்பதை குறிப்புணர்த்தி நிற்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே வாழ்கின்ற மக்கள் கடந்த காலத்தில் அதிகளவு இழப்புக்களைச் சந்தித்ததோடு அபிவிருத்தி குன்றி அழிவுகளை மாத்திரம் கண்டு கொண்டவர்கள் என்பதால் தற்போது எமது நாட்டுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை வடக்கு கிழக்குக்கே அபிவிருத்தி செய்ய அனுப்புகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் மாகாண முதலமைச்சர் கரசனையுடன் உள்ளார்.

வேலையில்லாப் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் உள்ளது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதேவேளையில் நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை மற்றும் பொருளாதாரப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் மோசமான காலநிலையும் இந்த மாகாணங்கள் அபிவிருத்தியில் பின்னடைந்திருப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்குமா என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்’ என்றார்.

வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY