ஜாகிர் நாயக்கின் தொலைக்காட்சி சேனலுக்கு வங்கதேச அரசு தடை

0
194

zakir naikசர்ச்சைக்குரிய இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி ஒளிபரப்புக்கு வங்க தேச அரசு தடை விதித்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 1-ம் தேதி காபி விடுதியொன்றில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட தீவிரவாதிகள், மும்பையைச் சேர்ந்த பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகளில் ஈர்க்கப்பட்டு தீவிரவாத பாதையைத் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவரது பீஸ் டிவி ஒளிபரப்புக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளது. தொழிற் துறை அமைச்சர் ஆமிர் ஹுசைன் அமு தலைமையிலான சட்டம் ஒழுங்கு தொடர்பான கேபினட் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆமிர் ஹுசைன் அமு கூறும்போது, “தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிரசங்கங்கள் ஒளிபரப்பப்படுவதால் ஜாகிர் நாயக்கின் டிவிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையின்போது வழங்கப்படும் சமய சொற்பொழிவுகளில், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றனவா என கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உண்மையான இஸ்லாத்தின் கொள்கைகள் என்ன என்பதையும், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரசங்கங்களை மேற்கொள்ளும்படியும் இமாம்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஜாகிர் நாயக் குறித்து வங்கதேச புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கான நிதியாதாரங்கள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது என உள் துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY