சாய்ந்தமருது நகர சபை இழுத்தடிப்பு; ACMC முக்கியஸ்தர்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்திக்க ஏற்பாடு!

0
186
சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை ஏற்படுத்துவது தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது மத்திய குழு முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என அக்கட்சியின் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
றமழான் நோன்பு நிறைவுக்குள் சாய்ந்தமருது நகர சபை ஏற்படுத்தப்படா விடடால் சத்தியாக்கிரக போராடடம் நடத்தப்படும் என அவரினால் ஏற்கனவே வெளியிடபட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
“சாய்ந்தமருத்துக்கு தனியான நகர சபையை பிரகடனம் செய்யும் விவகாரம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருவதானது எமது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாய்ந்தமருது நகர சபை தொடர்பாக எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனும் நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவை ஏற்கனவே இரண்டு தடவைகள் சந்தித்து பேசியுள்ளோம்.
மக்களின் வாக்குகளை சுருட்டிக் கொள்வதற்காக  இதனைப் பொறுப்பேற்ற அரசியல் தலைமைகளே இப்போது இதற்கு முட்டுக்கட்டைகளை போட்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான் மக்களை அணி திரட்டி சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு யோசனையை எமது மத்திய குழுவிடம் நான் முன்வைத்திருந்தேன். அதில் நான் உறுதியாகவும் இருக்கின்றேன். எனினும் அதற்கு முன்னதாக இறுதியாக ஒரு தடவை அரச உயர் மட்டத்தினரை நேரடியாக சந்தித்து இக்கோரிக்கை தொடர்பில் பேசுவதே நல்லது என ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே சத்தியாக்கிரகப் போராட்டம் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அடுத்த வாரமளவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது மத்திய குழு முக்கியஸ்தர்கள், அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து பேசுவதற்கு நான் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளேன். அதனைத் தொடர்ந்து தேவையேற்படின் அரச உயர்மடடத்தினரை சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
அதன் பின்னர் ஏற்படுகின்ற சூழ்நிலைகளை ஆராய்ந்து, சாதகமான முடிவுகள் கிடைக்கா விடடால் நிச்சயம் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படும். அதற்கான ஒழுங்குகள் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினால் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. எமது கட்சிப் போராளிகள் அதற்கு தயார் நிலையில் இருக்கின்றனர். பொது மக்களும் எம்முடன் அணி திரள்வார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.
அத்துடன் சாய்ந்தமருது நகர சபையை ஏற்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே நான் கிழக்கு மாகாண சபையில் கவனஈர்ப்பு பிரேரணை ஒன்றை கொண்டு சென்று நிறைவேற்றியது போன்று நாடாளுமன்றத்திலும் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஊடாக ஒரு கவனஈர்ப்பு பிரேணையை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை கல்முனை மாநகர சபை கலைக்கப்படட இறுதி நாளில் இடம்பெற்ற சபைக்கூடடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் சிலர், சாய்ந்தமருத்துக்கு நகர சபை ஏற்படுத்தப்பட வேண்டும் என தமது கட்சியிடம் கோரிக்கை விடுத்து உரையாற்றியமை நகைப்புக்கிடமான விடயமாகும். மக்களை முட்டால்கள் என்று நினைத்துக் கொன்டே அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விடயத்தை பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் கடந்து நிலையில் மு.கா. தலைமை அதனை நிறைவேற்றிக் கொடுக்காமல் திட்டமிட்டு, காலத்தை இழுத்தடித்து வருகின்றமையை நான் முன்னரும் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன். சாய்ந்தமருதை சேர்ந்த மு.கா. முக்கியஸ்தர்கள் அதனை இப்போது ஒத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்து கொண்டு கட்சியிடம் புதிதாக கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம் அதனை நிரூபித்துள்ளனர்.
நான் மு.கா.வின் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது கடந்த வருடம் மே மாதம் 15ஆம் திகதி கட்சியின் தடையையும் மீறி, பல நெருக்கடிகள், சவால்களுக்கு மத்தியில் சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை கொண்டு சென்று மு.கா. உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மாற்று காட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் அப்பிரேரணையை நிறைவேற்றி உள்ளூராட்சி அமைச்சினால் கோரப்பட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் ஒப்புதல் கடிதத்தை பெற்றுக் கொடுத்திருந்தேன்.
அவ்வாறான ஒரு பிரேரணையை கல்முனை மாநகர சபையில் கொண்டு சென்று நிறைவேற்ற துணிச்சல் இல்லாத இவர்கள் தமது பதவியின் அந்திம காலத்தில் தாமும் சாய்ந்தமருது நகர சபைக்கு ஆதரவானவர்கள்தான் என்று மக்களுக்கு காட்டுவதற்காக சபையில் நீலிக்கண்ணீர் வடித்திருப்பது குறித்து அந்த மக்கள் புரிந்து கொள்ளாமலில்லை. அவர்களது ஏமாற்று வித்தைகளுக்கு மக்கள் பாடம் புகட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிடடார்.

LEAVE A REPLY