10 அத்தியாவசிய பொருட்களுக்கு மேலும் சலுகை; விலை அதிகரிப்பை ஆராய அமைச்சரவை குழு

0
167
  • வாராந்தம் வெளியிட அரசு முடிவு

Emblem_of_Sri_Lanka logo government.svgஇந்த வருட இறுதிக்குள் மக்களுக்குப் பெரும் நிவாரணம் வழங்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர்களான அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் தெரிவித்தனர்.

10 அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலும் விலைக்குறைப்பை மேற்கொள்ளவும் அது தொடர்பில் நான்கு நாட்களில் வர்த்தமானியில் அறிவிப்புச் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அமைச்சர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் விசேட கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்து முடிவுகள் எட்டப்பட்டன. அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் நோக்கும் போது உதாரணமாக நெத்தலி ஒரு கிலோ கடந்த மாதம் 550 ரூபாவாக இருந்த போதும் தற்போது அது 790 ரூபாவாக விலை அதிகரித்துக் காணப்படுகிறது. புடலங்காய் கடந்த மார்ச்சில் 119 ரூபாவாக இருந்துள்ளது. அது தற்போது 182 ரூபாவாக அதிகரித்துள்ளது. போஞ்சி, கரட், லீக்ஸ்உ ட்பட மரக்கறிகளின் விலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவற்றுக்கு ‘வற்’ வரி விதிக்கப்படாத போதும் அநீதியான முறையில் இவற்றுக்கு விலை அதிகரித்துள்ளமை ஆச்சரியமாகவுள்ளது.

இவ்வாறு முறையற்ற விதத்தில் நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பிரதமரும், ஜனாதிபதியும் உள்ளிட்ட அமைச்சரவை விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பங்கேற்புடன் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இக்குழுவில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, உட்பட அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், மலிக் சமரவிக்ரம, மஹிந்த சமரவீர உட்பட மேலும் தேவையான அமைச்சர்கள் இதில் இணைந்து கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உடனடியாக இந்தக் குழுவை நியமிப்பதற்கான அங்கீகாரத்தை நேற்று அமைச்சரவை வழங்கியுள்ளது.

இந்தக் குழு அடிக்கடி கூடி தேவையான தீர்மானங்களை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னோடியாக நேற்று முன்தினம் இக்குழு பிரதமர் தலைமையில் கூடி விசேட தீர்மானங்கள் சிலவற்றையும் எடுத்துள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானங்களை நான்கு நாட்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

15 அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பட்டு விலை தொடர்பில் தற்போது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன்.

அரிசி, எரிவாயு, சீமெந்து, கடலை, கோழி இறைச்சி, ரின் மீன், பால் மா, கோதுமை மா, வெள்ளைச் சீனி, செத்தல் மிளகாய், நெத்தலி, வெங்காயம் போன்றவை இதிலடங்குகின்றன.

இதில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான 10 பொருட்களுக்கு மேலும் மானியங்களை வழங்கவும் அதன் மூலம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அவற்றைக் கொள்வனவு செய்ய வழிவகை செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த 10 பொருட்கள் தெரிவு செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குள் அவற்றை வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு செயலணியொன்று ஏற்படுத்தப்படவுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் கீழ் இந்த செயலணி அமைவதுடன் பொலிஸ் பிரிவு மட்டத்தில் இதனைச் செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையில் தற்போது கடமையிலுள்ள முறைப்பாட்டு அதிகாரிகளுக்கு மேலதிகமாக மேலும் 100 அதிகாரிகள் இதற்கென நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த செயற்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்கு ஊடகங்களின் பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அத்துடன் அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பும் இதற்கு மிகவும் அவசியமாகிறது.

ஆளுங்கட்சி கூட்டத்திலும் இது தெரிவிக்கப்பட்டதுடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பிரதமர் இது தொடர்பில் விசேட அறிவிப்பையும் மேற்கொண்டார். இதற்கு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இனிமேல் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஊடகங்கள் மூலம் பிரசித்தப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டவும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊகங்கள் மூலமும் போஸ்டர்கள் மூலமும் கிராமங்கள் ரீதியாக ஊடகத்துறை அமைச்சின் பங்களிப்பில் இந்த தெளிவூட்டல் இடம்பெறும். ‘வற்’ சரி உட்பட்டவை, உட்படாதவை தொடர்பில் இதன் மூலம் தெளிவுபடுத்தப்படும்.

‘வற்’ வரியை சாதகமாக்கிக் கொண்டு அரசியல் நடத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இந்த நடைமுறைகளை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக புதிய இலக்கங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது ‘வற்’ வரிக்கு எதிரான குழுக்கள் அரசியல் இலாபம் பெறும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன் ‘வற்’ வரி அமுலுக்கு வருவதற்கு முன்பே அது பற்றி தவறான பிரசாரங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றன. அமைப்பு ரீதியாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொஸ்கம – சாலாவ விவகாரமும் இதுபோன்று அமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட்டமையும் இதில் குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி மூலம் எமக்குக் கிடைக்கும் 100 ற்கு 96 வீத வருமானம் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தவே பயன்படுகிறது.

இக்கடன்களுக்குப் பொறுப்பானவர்கள் அம்பாந்தோட்டை அபிவிருத்திக்கே செலவிட்டனர் மத்தள விமான நிலையத்திற்கு மட்டும் 26000 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

இத்தகைய சுமைகளையே அவர்கள் மக்கள் மீது சுமத்தி சென்றுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

#Thinakaran

LEAVE A REPLY