முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் 7 வயது சிறுவன் வபாத்; இன்னாலில்லா

0
85

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

accident0திருகோணமலை மாவட்டம் மூதூர் பொலிஸ் பிரிவு 3 ஆம் கட்டை மலையடியில் நேற்று (06) புதன்கிழமை மாலை முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஏழு வயதுச் சிறுவன் மரணமடைந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்)

பாலத்தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த பாலத்தோப்பூர் ஸாஹிறா வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த ஹாபிஸ் இஜாஸ் (வயது 7) என்ற சிறுவனே மரணமடைந்துள்ளான்.

மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற அதன் உரிமையாளரான பாலத்தோப்பூரைச் சேர்ந்த ஹனீபா அஷ்ரப் (வயது 42) என்பவர் படுகாயமடைந்த நிலையில் முன்னதாக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம்பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி முச்சக்கர வண்டிக்காரர் தனது சிறுவன் மற்றும் தனது மைத்துனரின் மூன்று சிறுவர்களையும் தனது முச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு பாலத்தோப்பூரிலிருந்து மூதூர் நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது 3 ஆம் கட்டை மலையடி வளைவில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விழுந்துள்ளது.

அந்நேரத்தில் முச்சக்கரவண்டியில் இருந்த சிறுவர்களும் வீதியில் அடிபட விழுந்துள்ளனர்.

எனினும், அதில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும் ஒரு சிறுவனுமே பாரதூரமான காயங்களுக்குள்ளாகிய நிலையில் வீதியில் சென்றோரால் மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பயனின்றி சிறுவன் அங்கு மரணித்துள்ளான். படுகாயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டிக்காரர் பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று இரவு தோப்பூர் மையவாடியில் இடம்பெற்றது.

நோன்புப் பெருநாளான புதன்கிழமையன்று சிறுவன் விபத்தில் மரணித்தது தோப்பூர் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY