20 வருடகாலமாக ஆங்கில ஆசிரியரின்றி இயங்கும் பாடசாலை

0
163

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

teaching englishமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்திலுள்ள ஹிஸ்புல்லாஹ் நகர் அஷ்ரப் கனிஷ்ட வித்தியாலயம் கடந்த 20 வருடகாலமாக ஆங்கில ஆசிரியர் இன்றி பெருஞ் சிரமத்தின் மத்தியில் இயங்கி வருவதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் பாடசாலை நிருவாகமும் தெரிவிக்கின்றது.

ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 5 வரையுள்ள இந்தப் பாடசாலை கடந்த 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உட்பட தற்போது இந்தப் பாடசாலையின் 5 வகுப்புக்களிலும் 115 மாணவர்களுக்கு ஐந்து ஆசிரியர்கள் கற்பித்துக் கொடுக்கின்றனர் என்று பாடசாலையின் அதிபர் ஏ.பி. அப்துல் றவூப் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தப் பாடசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான ஆளணி வெற்றிடம் கடந்த 20 வருடகாலமாக இருந்து வருகின்ற போதிலும் இதுவரை ஒரு ஆசிரியர் தானும் நியமிக்கப்படவில்லை. இதனால் தற்போதைய சர்வதேச நவீன தொடர்பாடல் யுகத்தில் மாணவர்களால் ஆங்கில மொழியறிவுக்கு ஈடுகொடுக்க முடியாமற் திண்டாட வேண்டியுள்ளது என்று பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இதுவிடயமாக வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி நிருவாகிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தாங்கள் பலமுறை எடுத்துக் கூறியிருந்த போதிலும் மாணவர்களின் நலன் கருத்திற் கொள்ளப்படவில்லை என்று பெற்றோரும் மாணவர்களும் பாடசாலை நிருவாகத்தினரும் கவலை வெளியிட்டுள்ளளனர்.

LEAVE A REPLY