(Interview) கணக்கீட்டு முறையில் நோன்புப் பெருநாள் இன்றாகும்: ஏ.எம்.எஸ்.ஹமீட் தெரிவிப்பு

0
32

Nintaur Kanippu Perunaal 3“கணக்கீட்டு முறையில் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் இன்றாகும் அதனால் நாங்கள் நோன்புப் பெருநாளை இன்று (05) செவ்வாய்க்கிழமை கொண்டாடினோம்” என ஹிஜ்ரி கமிட்டியின் நிந்தவூர் கிளையின் உறுப்பினர் ஏ.எம்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

அவரை தொலைபேசியில் பேட்டி கண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

கேள்வி: ஹிஜ்ரி கமிட்டி என்றால் என்ன?

பதில்: ஹிஜ்ரி மாதத்தினை சரியாக கணக்கீடு செய்து அதனை ஒரு கலண்டராக நாம் வெளியிட்டுள்ளோம். அந்த கலண்டர் படியே எல்லாம் நடந்து வருகின்றது.

பிறையின் சகல விவகாரங்களையும் அதில் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

இந்த கலண்டரில் றமழான் நோன்பு எந்த திகதியில் ஆரம்பமாகும், எந்த திகதியில் ஷவ்வால் மாதம் தலைப்பிறை பெருநாள் தினம் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று திங்கட்கிழமை மாலை ஷவ்வால் மாதம் தலைப் பிறையாகும். அதனால் நாங்கள் இன்று பெருநாள் தொழுகையில் ஈடுபட்டோம்.

கேள்வி: சர்வதேச பிறையை பின்பற்றுகின்றவர்களுக்கும் மற்றும் உள் நாட்டு பிறையை பின் பற்றுகின்றவர்களுக்குமிடையில் பிறை விடயத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்று வரும் இன்றைய கால கட்டத்தில் நீங்கள் இவ்வாறு கணக்கீட்டு முறைதான் சரியென கூறுவது நியாயமா?

பதில்: சர்வதேச பிறையை பின்பற்றுகின்றவர்களும் உள் நாட்டு பிறையை பின் பற்றுகின்றவர்களும் சரி, தவறாக விளங்கி வைத்துள்ளார்கள். கணக்கீட்டு முறைதான் சரியானதாகும். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் எங்களிடமுண்டு. சர்வதேச பிறையை பின்பற்றுகின்றவர்களும் அதே போன்று உள் நாட்டு பிறையை பின் பற்றுகின்றவர்களும் கூறும் விளக்கங்கள் பிழையானதாகும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

கேள்வி: ஒரு நாட்டின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு அந்த நாட்டு உலமாக்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் நோன்பு மற்றும் பெருநாள் தீர்மானிக்கப்படுகின்றது. இதனை உள் நாட்டுப் பிறை அடிப்படையிலேயே தீர்மானிக்கின்றார்கள். இதனை அதிகமான மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். நீங்கள் இதனை எப்படி பார்க்கின்றீர்கள்.

பதில்: தலைமைத்துவம் பிழையாக வழிகாட்டும் போது அந்த தலைமைத்துவத்தை நாங்கள் பின் பற்ற முடியாது.

கேள்வி: தௌஹீத் என்றும், தரீக்கா என்றும், தப்லீக் ஜமாஅத் என்றும் இன்று மார்க்கப்பிரச்சார அமைப்புக்கள் மார்க்கப்பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் நீங்கள் எதை பின்பற்றுகின்றீர்கள்?

பதில்: அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றி மார்க்கப்பிரச்சாரம் செய்கின்றோம். வேறு எதையும் பின்பற்றுவது கிடையாது.

கேள்வி: இந்த கணக்கீட்டு முறையை பின்பற்றி உலகில் எத்தனை பேர் பெருநாள் தொழுதுள்ளார்கள்.?

இலங்கையில் நாங்கள் நிந்தவூரில் தொழுதோம். அதே போன்று மாத்தளையில் சிலர் பெருநாள் தொழுதுள்ளனர். இந்தியாவில் 51 இடங்களில் இன்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

கேள்வி: ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று செவ்வாய்க்கிழமை மாலை இலங்கையில் பார்க்கப்படும் நிலையில் வெளிநாடுகளில் நாளை புதன்கிழமை பெருநாள் கொண்டாடவுள்ள சந்தாப்பத்தில் நீங்கள் இன்று பெருநாள் கொண்டாடியது சரியானதா?

பதில்: நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதம் தலைப்பிறையின் முதல் நாளே பெருநாள் கொண்டாடினார்கள், கொண்டாடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். ஷவ்வால் மாதத்தின் இரண்டாம் நாள் பெருநாள் தொழுகையில் ஈடுபட முடியாது.

இலங்கையில் ஷவ்வால் மாதத்தின் இரண்டாம் மூன்றாம் நாட்களிலேயே பெருநாள் கொண்டாடுவார்கள்.

நாங்கள் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளன்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளோம்.

கேள்வி: உங்கள் இந்த நடவடிக்கை சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்பட்டதாக நீங்கள் கருதவில்லையா?

பதில்: நாங்கள் நபி காட்டிய வழயில் பெருநாளை கொண்டாடியுள்ளோம். இது சமூக ஒற்றுமைக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாது.

கேள்வி: நீங்கள் மிக சொற்பமானவர்கள் நிந்தவூர் கடற்கரையில் பெருநாள் தொழுகையில் ஈடுபடும் போது நிந்தவூரிலுள்ள பொதுமக்கள் எவ்வாறு உங்களை பார்த்தார்கள்.

பதில்: பொதுமக்கள் சிலர் வேடிக்கையாக பார்த்துக் கொண்டு நின்றனர். வேறு எந்வொரு பிரச்சினையையும் எற்படுத்தவில்லை.

கேள்வி: உங்கள் பெருநாள் தொழுகையில் எத்தனை பேர் தொழுதார்கள்.

பதில்: சுமார் 70 ஆண்களும் ஐம்பது பெண்களும் கலந்து கொண்டனர். பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.ஜெஸீர் அலி நிறைவேற்றினார்.

கேள்வி: நாளை புதன்கிழமை உலகிலுள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஒரே நாளில் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையிலும் இலங்கையில் நாளை புதன்கிழமை பெருநாள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலும் நீங்கள் தனியாக இன்று பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதானது சமூகத்தின் ஒற்றுமையை குழப்பும் வேலை என பேசுகின்றனரே இதைப்பற்றி என்ன கூறுகின்றீர்கள்.?

பதில்: நாங்கள் செய்தது மார்க்கமாகும். ஹிஜ்ரிப்படியே அனைத்தும் நடைபெறுகின்றது.

பேட்டி கண்டவர் எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்.

LEAVE A REPLY