நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் சமயத் தலைவர்கள் சிறந்த பங்காற்ற முடியும்: தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்ட அதிகாரி எஸ். கிருபாகரன்

0
32

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

f4c39fcb-0a82-4ac0-a1b6-2f9c6c6e8fd4நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் சமயத் தலைவர்கள் சிறந்த பங்காற்ற முடியும் என தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்ட அதிகாரி எஸ். கிருபாகரன் தெரிவித்தார். சமயங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயுமான வேறுபாடுகளைக் களைவதற்கான நல்லிக்கத்தைக் காணுதல் எனும் தொனிப் பொருளில் சனிக்கிழமை (ஜுலை 02, 2016) மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் நிகழ்வு இடம்பெற்றது.

ஒருங்கிணைப்பாளர் ராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன, செயற்திட்ட உதவி முகாமையாளர் ரசிகா செனவிரத்ன, மற்றும் ஒருங்கிணைப்பு உதவியாளர் நந்தகுமார் நான்சி நிராலினி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மதத் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் என சுமார் 35 பேர் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிருபாகரன், மத மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதில் சமயத் தலைவர்களின் பங்கும் பணியும் இன்றியமையாததாக இருப்பதால் நல்லாட்சி அரசும் அதற்கு அதிக முக்கியத்துவமளிக்கின்றது.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிளவுபட்டுப் போன சமுதாயத்தை மீண்டும் ஒருங்கிணைத்து ஐக்கியத்தை வலுப்படுத்தும் கடமைக்கு சமயத் தலைவர்கள் கைகொடுக்க வேண்டும்.
எனவே, அதற்கான பொறிமுறையொன்றை நாட்டின் பலபாகங்களிலும் உருவாக்கி செயற்பட வேண்டிய தேவை உள்ளது.

மக்களுக்கும் சமாதான வழிமுறைகளுக்கும் ஏற்றதொரு சிறந்த களமாக சர்வமத மற்றும் சர்வ இனப்பேரவை இருக்கும் என்று நம்புகின்றோம்.

நிலைமாற்று நீதி சம்பந்தமான தெளிவான விடயத்தையும் தற்போதைய நல்லாட்சிக் காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்.

தேசிய சமாதானத்திற்காக சமாதானம் மற்றும் சர்வ இன நல்லிணக்கத்திற்கான சர்வமத சமூகங்களிடையே ஒருமைப்பாட்டை வலுவூட்ட வேண்டும். சகோதரத்துவ மத போதனைகள் மூலம் சமூக இணக்கப்பாட்டிற்குப் பாரிய பங்களிப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

சமூகங்களுக்கிடையில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் பாரிய அளவிலான இன மத மோதல்களுக்கு வித்திடுகின்றன. மாவட்ட மட்டத்தில் உருவாக்கப்படும் இன மற்றும் மத ஐக்கிய பேரவை உள்ளுரில் ஏற்படும் இன மத முரண்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து அவற்றைப் புரிந்துணர்வுடன் அணுகுவதற்கு வழி செய்யமுடியும்.

அதனடிப்படையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய முரண்பாடுகளை நீக்கவும் புரிந்துணர்வை உருவாக்கவும் மாவட்ட அடிப்படையில் மதங்களுக்கிடையிலான சர்வமதப் பேரவையின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய சமாதானப் பேரவை கருதுகிறது என்றார்.

LEAVE A REPLY