பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களின் மத. கலாச்சார உரிமைகள் உறுதிப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

0
174

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

SAMSUNG CAMERA PICTURES

பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களின் மத. கலாச்சார உரிமைகள் உறுதிப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல உறுதியளித்துள்ளார்

பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சந்திப்பொன்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஐந்து வேளை தொழுகையில் ஈடுபட பிரத்தியேக தொழுகை அறை வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும், வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகையில் ஈடுபடுவதற்காக நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை பரீட்சைகள் மற்றும் பாட நெறிகள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் ஆகிய வேண்டுகோள்கள் மாணவ பிரதிநிதிகளினால் முன் வைக்கப்பட்ட போது இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் சுற்றறிக்கை அனுப்பி வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது

களனி மற்றும் ஸ்ரீஜயவர்த்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டு விரிவுரை தனிச் சிங்களத்தில் நடைபெறுவதால் தமிழ் – முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் மொழி ரீதியான பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் மாணவ பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டபோது மொழி பெயர்ப்பு வசதியளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட முஸ்லிம் மாணவிகள் கலாச்சார ரீதியான ஆடை அணிதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக சுகாதார அமைச்சருடன் பேசி தீர்வைப் பெறுவதற்கும் இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த சந்திப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, வர்த்தக கைத் தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் மூலம் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இணக்கப்பபாடுகளும் அமுலுக்குக் கொண்டுவரப்படுமாயின் அது ஆக்கபூர்வமானதாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கும் என சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY