படகு தள்ளும் மீனவத் தொழிலாளி கடலுக்குள் விழுந்து மரணம்

0
39

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC06268கடலுக்குள் படகைத் தள்ளி விடும் மீனவத் தொழிலாளியொருவர் படகு தள்ளும் போது ஏறாவூர்- சவுக்கடி கடலுக்குள் விழுந்து மரணமாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (02) சனிக்கிழமை இரவு நடந்துள்ள இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வழமையாக கடலுக்குள் படகுகளைத் தள்ளிவிடும் ஏறாவூர் – தளவாய், சின்னத்தம்பி வீதியைச் சேர்ந்த கிட்ணப்பிள்ளை கண்ணன் (வயது 35) நேற்று இரவும் தளவாய் கடற்கரைக்குச் சென்று படகுகளை கடலுக்குள் தள்ளிவிடும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார்.

மாலை ஏழு மணியளவில் இவரும் மற்றொருவருமாகச் சேர்ந்து படகொன்றை கடலுக்குள் தள்ளிவிடும் போது மற்றையவர் கரையேற இவர் விழுந்து விட்டார்.

மற்றையவர் கூப்பிட்டுத் தேடியும் கடலலை இழுத்துச் சென்று விட்டதால் கடலுக்குள் விழுந்தவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இன்று காலையிலேயே மீனவர்கள் சடலத்தைத் தேடிக் கண்டுபிடித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டது. இறப்பு விசாரணைகளை பிரதேசத்துக்குப் பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தவர் சம்பவ தினத்தன்று சற்று அதிகமாக மது அருந்தியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இறந்தவரின் மனைவி மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

DSC06272 DSC06277

LEAVE A REPLY