ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து மீண்ட பெரேராவிற்கு 5 லட்சம் பவுண்டு இழப்பீடு வழங்க ஐ.சி.சி. முடிவு

0
91

imageஊக்கமருந்து உட்கொண்டதாக  குசால் பெரேராவிற்கு ஐ.சி.சி. தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார். அப்போது ஊக்கமருந்து உட்கொள்ளவில்லை எனத் தெரியவந்தது. இதனால் அவருக்கு இழப்பீடு வழங்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னணி பேட்ஸ்மேனுமான குசால் பெரேரா ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி தடை பெற்றிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் இலங்கை அணி நியூசிலாந்து சென்றிருக்கும்போது, குசால் பெரேரா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஐ.சி.சி. அவருக்கு தடை விதித்தது.

இந்த முடிவை எதிர்த்து பெரேரா முறையீடு செய்தார். இதை விசாரித்த ஐ.சி.சி. குழு அவர் மீதான தடையை நீக்கியது. இதனால் கடந்த மே மாதம் 11-ந்தேதி முதல் சர்வதேச போட்டியில் விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எந்த தவறும் செய்யாமல் சுமார் ஐந்து மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரேரா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது தவறான முடிவு எடுக்கப்பட்டதற்காக உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்ஸி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யை வலியுறுத்தியது.

இந்நிலையில் தற்போது எடின்பர்க்கில் ஐ.சி.சி.யின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது குசால் பெரேரா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குசால் பெரேரா இந்த வழக்கு தொடர்பாக சுமார் 5 லட்சம் பவுண்டுகள் செலவழிக்க நேரிட்டிருக்கும். இந்த பணம் நஷ்டஈடாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் அங்கீகாரம் பெற்ற கத்தார் ஆய்வகம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY