தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுள்ள பலவீனமான அம்சங்கள்

0
376

RTI colr-t-i-தகவலறியும் உரிமைச் சட்டமானது (RTI) கடந்த மாதம் 24 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமானது கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்தது. அரசின் தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்ட அடுக்குகளோடு அரசசார்பற்ற நிறுவனங்களையும் இணைத்து இறுதி வடிவம் பெற்றிருப்பதானது மகிழ்ச்சி தருகின்றது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் தோற்றம்:

1990 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஆசிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆசிய பொருளாதார நாடுகள் பலவற்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நிதிப் பொறுப்புச் கூறல் சட்டம் என்பன தோற்றம் பெற்றன. புதிதாக கைத்தொழில் மயமான நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து போன்ற (அடம் ஸ்மித் கூறுவது போல மிலேச்சத்தனமான போக்கினை கொண்ட நாடுகள்) நாடுகளை கீழ்ப்படியச் செய்வதற்காக இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. உலகெங்கிலும் தகவல் அறியும் உரிமை (RTI) அல்லது தகவல் அறியும் சுதந்திரம் (FOI) என்பன பல நாடுகளில் பாவனையாளர் பாதுகாப்பு உரிமைச் சட்டங்களின் இயற்கையான பின்விளைவுகளாகவுள்ளன.

1990 களின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்த ஆசிய நிதி நெருக்கடியானது, குறிப்பாக நிதிநெருக்கடியால் பாதிக்கப்பட்ட அநேக நாடுகளின் நிதிச்சந்தைகள் பற்றிய போதிய தகவல்கள் இன்மையாலேயே நிகழ்ந்ததென்பதனை நிரூபிப்பதற்கு தக்க சான்றுகள் உள்ளன.

இலங்கையிலும் கூட பாரிய பொருளாதார தாராளமயமாக்கலின் இரண்டாவது அலை 1990 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களான ரெலிகொம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மற்றும் சிலோன் காஸ் என்பன 1990 களின் பின்னரைப் பகுதிகளில் பகுதியாக தனியார் மயமாக்கப்பட்டன.

தனியார் மயமாக்கல் செயற்பாடுகளின் போது அரச நிறுவனங்களின் சொத்துகள் குறை மதிப்பிடப்படல் மற்றும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்பன முன்வைக்கப்பட்டன. மேலும் சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை முதல் தடவையாக 2001 ஆம் ஆண்டில் அரசின் அதிகரித்த செலவினம் காரணமாக எதிர்மறை (-1.5%), வளர்ச்சியினை எதிர்கொண்டது. (2000 ஆம் ஆண்டளவில் ஆனையிறவின் விழ்ச்சிக்குப் பின்னர் உக்கிரமடைந்த உள்நாட்டுப்போர் அச் செலவின அதிரிப்புக்கான தேவையை பகுதியளவில் ஏற்படுத்தியிருந்தது.)

2001 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின் போதான பாரிய ஊழல்கள் மற்றும் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக நிதி பொறுப்புக் கூறல் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பனவற்றுக்கான பிரேரணைகளை அப்போதைய எதிர்க் கட்சியாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்தது.

2001 ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற பாாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசானது நிதி (முகாமைத்துவ) பொறுப்புச் கூறல் சட்டத்தினை 2003 ஆம் ஆண்டில் இயற்றியது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முதல் வரைவானது 2003 ஆம் ஆண்டில் இவ்வரசினால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமானது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தல்களில் அரசு தோல்வியைத் தழுவியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படைக் குறைபாடுகள்:

இலங்கையில் நல்லெண்ணம் கொண்டு இயற்றப்படும் ஏனைய அநேக சட்டங்களைப் போல நிதி (முகாமைத்துவ) பொறுப்புக் கூறல் சட்டமானது இன்று வரை முற்றுமுழுதாக அமுல் செய்யப்படவில்லை. உதாரணத்துக்கு நிதி (முகாமைத்துவ) பொறுப்புக் கூறல் சட்டமானது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை அரசு 2006 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5% வரை குறைக்க வேண்டும் என நிர்ணயித்திருந்தது.

இது முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கங்களாலோ ((2004_ -2014) தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசினாலோ இற்றை வரை எய்தப்பட்டிருக்கவில்லை. மேலதிகமாக இவ்விலக்கானது எதிர்காலத்தில் அடையப்படும் என்பதற்கான எந்தவொரு உறுதிப்பாடும் அறிகுறியும் கூடத் தென்படவில்லை.

1987 ஆம் ஆண்டின் அரச கரும மொழிகள் சட்டமானது அரசியல் விருப்பங்கள், அக்கறையின்மை மற்றும் பொதுச்சேவையில் உள்ள அதிகாரிகளின் அர்ப்பணிப்பின்மை போன்ற காரணங்களால் இன்னமும் முற்றுமுழுதாக அமுல் செய்யப்படவில்லை (30 வருடங்களாக அமுலில் இருந்தும்) என்பது மிகவும் மோசமான உண்மையாகவுள்ளது.

அதனைப் போலவே 2003 ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியில் இருந்த அரசானது பாவனையாளர் விவகார அதிகாரச் சட்டத்தினை (CAA) செயற்படுத்தியது. இச்சட்டமானது இற்றைவரை பாவனையாளர் பாதுகாப்பில் மிகக் குறைந்த தாக்கத்தினையே செலுத்தி வருகின்றது.

நீதித்துறையைப் பொறுத்த வரை தாமதிக்கப்படும் நீதியானது எப்போதும் மறுக்கப்படும் நீதியாகவே கருதப்படுகின்றது. எனவே நாட்டின் ஆளுகையில் சாதகமான மாற்றத்தினை உண்டு பண்ண வேண்டுமனால் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ள அபராதமானது துரிதமாக வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் தகவல் அறியும் உரிமை மீறப்படுமிடத்தில், நீதிமன்றின் உதவி பெறப்படாமலேயே அபராதம் விதிக்கும் அதிகாரம் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

பொருளாதார தகவல்களுக்கான விலக்களிப்பு ஒரு பாரிய குறைபாடாகும்:

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் 5 ஆவது சரத்து, தகவல் பெறும் உரிமைகளுக்கான விலக்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுகின்றது. இச்சரத்தானது எந்தவொரு தனிநபர், தேசிய பாதுகாப்பு, இலங்கையின் சர்வதேச விவகாரங்களுக்கு ‘தீவிரமாக கேடு விளைவிக்கக் கூடிய’ தகவல்கள், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய குந்தகத்தினை ஏற்படுத்தக் கூடிய தகவல்கள் புலமைச் சொத்து பாதுகாப்பு, பிரத்தியேக மருத்துவ தரவுகள், மற்றும் ஏனையவற்றுடன் தொடர்புடையதாக அமைகின்றது. மேற்கூறப்பட்ட அனேக விலக்களிப்புகள் செல்லுபடியானவையாக இருந்த போதும் இவ் விலக்களிப்புகள் நெருடலுக்குரியனவாகக் காணப்படுகின்றன.

நிர்வாகம், விலை, நாணயமாற்று வீதம், அல்லது வட்டி வீதம் அல்லது சீராக்கல்கள், மாற்றங்கள், என்பன பற்றிய உரியகாலத்துக்கு முன்னரான வெளிப்படுத்தல்கள் சந்தையில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனையும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் கட்டுரையாளர் ஏற்றுக்கொண்டாலும், வங்கிக் கட்டுப்பாடுகள், வரிவிதிப்பு, கடல்கடந்த வர்த்தக ஒப்பந்தங்கள், பற்றிய தகவல்கள் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.

இங்கு “உரியகாலத்துக்கு முன்னர்” எனும் பதமானது, தெளிவற்ற தற்சார்நத ஒரு பதமாகவுள்ளது. இது பொது மக்கள் முக்கிய பொருளாதார மற்றும் நிதிசார் தகவல்களை அறிந்து கொள்வதைத் தடுக்கும் எதேச்சாதிகாரத் தனம் மிக்கதாகவே காணப்படுகின்றது. இதன் மூலம் பொருளாதாரத்தின் மீதான பிடி இறுகுவதோடு, மக்களின் நலனிலும் பாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு மேற்கூறப்பட்ட விலக்களிப்புகள், அரச பத்திரங்கள் மற்றும் அரச முறிகள் என்பனவற்றின் உள் வர்த்தக நடவடிக்கைளை ஊக்குவிப்பதாகவே அமையும். அவ்வாறான உள் வர்த்தக நடடிவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டுமுதல் இடம்பெற்று வருவதான குற்றச்சாட்டுகள் 2015 ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்படுகின்றன.

விலக்களிப்புகள் பொருளாதாரச் சரிவு அல்லது வீழ்ச்சி தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து மறைப்பதற்கும் பயன்படுத்தப்படலாம். 1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடிக்கான முக்கிய காரணமாகவிருந்தது, அநேக ஆசிய அரசாங்கங்கள் பொருளாதாரம் மற்றும் நிதித்துறை தொடர்பான தகவல்களை மக்களிடையே வெளிப்படுத்தாமையேயாகும்.

#Thinakaran

LEAVE A REPLY