கல்முனை மாநகர சபையின் 10 அபிவிருத்தி திட்டங்களுக்கு 20 கோடி ரூபா ஒதுக்கீடு

0
197

(அஸ்லம் எஸ்.மௌலானா)

a0cf132f-0678-41b4-aa6d-42409bc982a3கல்முனை மாநகர சபையினால், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சுக்கு முன்மொழியப்படட பத்து அபிவிருத்தி திட்ட்ங்களுக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் சுமார் இருபது கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் இறுதி மாதாந்த சபை அமர்வில் விசேட அறிவித்தலை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிடடார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நகர அபிவிருத்தி அமைச்சு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, எமது கல்முனை நகரம் அத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த அமைச்சை எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பொறுப்புபேற்றதன் பயனாக அந்த நூறு நகரங்களின் அபிவிருத்தி திட்டத்தில் கல்முனை நகரம் சேர்க்கப்பட்டு, இந்நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சுக்கு திறைசேரியினால் ஒதுக்கப்பட்டுள்ள 250 கோடி ரூபா நிதியில் எமது வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகர சபையின் பத்து பாரிய அபிவிருத்தி திட்ட்ங்களுக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுமார் இருபது கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்திருப்பதானது பெரும் வரப்பிரசாதமாகும். அதற்காக எமது மாநகர சபையின் சார்பிலும் மக்கள் சார்பிலும் அவருக்கு மிகுந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கின்றேன்.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது தோணா நவீனமயமாக்கல் திடடத்திற்கு பத்து கோடி ரூபாவும் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்திக்கு இரண்டு கோடி அறுபது இலட்சம் ரூபாவும் கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலக அபிவிருத்திக்கு இரண்டு கோடி 25 இலட்சம் ரூபாவும் கல்முனை சந்தாங்க்கேணி விளையாட்டு மாகாணத்தின் பார்வையாளர் அரங்கின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிக்கு ஒரு கோடி எழுபது இலட்சம் ரூபாவும் மருதமுனையில் மாநாட்டு மண்டபம் ஒன்றை அமைப்பதற்காக ஐந்து கோடி 90 இலட்சம் ரூபாவும் நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒரு கோடி ரூபாவும் சேனைக்குடியிருப்பு மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக வைத்திய நிலையங்கள் அமைப்பதற்கு தலா 45 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் கல்முனை மாநகர பிராந்தியத்தின் வெள்ள அபாய பாதுகாப்பு திட்டத்திற்கு ஒரு தொகை நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிதியொதுக்கீட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றிய நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.முஹைனுதீன், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோருக்கும் இத்திட்ட்ங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை துரிதமாக தயாரித்து வழங்கிய எமது மாநகர சபையின் பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் உரையாற்றியதுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட்து.

LEAVE A REPLY