எந்தவொரு அரசியல் தலைவரினதும் எவ்வித இரகசியங்களின் தடயங்களும் என் வசமில்லை என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்- முன்னாள் அமைச்சர் பசீர் அறிக்கை

0
234

(விசேட நிருபர்)

096ea61b-0c23-43f4-89a0-5ba773394048எந்தவொரு அரசியல் தலைவரினதும் எவ்வித இரகசியங்களின் தடயங்களும் என் வசமில்லை என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் ஷேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று (30.6.2016) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது கடந்த கால அரசியல் வாழ்வில் பல தனிப்பட்ட நிகழ்வுகளின் இரகசியங்கள் புதைந்து கிடப்பதாகவும், நான் பிரநிதித்துவ அரசியலிருந்து விலகிய பின் புலத்தில் அவை வெளிவரும் வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைத்தளங்களிலும் வேறு சிலஊடக கட்டுரைகளிலும் எழுதப்பட்டு வருகின்றன.

தற்போது மட்டுமல்ல கடந்த சில காலமாகவே முஸ்லிம் அரசியலில் தனிப்பட்ட கிசுகிசு பற்றி நான் அறிவேன் என்றும் அவை விரைவில் வெளிவரக்கூடும் என்றும் அரசியல் பரப்பில் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சில அரசியல் வாதிகளால் இதே கருத்து தெரிவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

தனித்திரு, பசித்திரு, விழித்திரு எனப்படுகின்ற நோன்பின் இஸ்லாமிய உபவாசத் தத்துவம் பேசப்படுகின்ற இக்கால கட்டத்தில், கடந்த 27ஆந் திகதி காத்தான்குடியில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில், “தனதுதலைமையைபணயக் கைதியாக வைத்து இனிமேல் அரசியல் செய்ய இடமளிக்கப் போவதுமில்லை, பதவி நோக்கத்திலே யாரும் இந்தக் கட்சியை அடகுவைத்து பிழைப்பதற்கு இனிமேலும் நாங்கள் இடம் கொடுக்கவும்மாட்டோம்”என்ற ஆரோக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தலைமையையும் கட்சியையும் அவர் அகப்பட்டுக் கொண்ட எவ்விதமான விடயங்களில், எந்தத் தருணங்களில், எவரெவர் பணயக் கைதியாக வைத்திருந்தனர் என்பதையும் அவரது 16 வருட தலைமைத்துவக் காலத்துள் இவ்வாறான பணய நாடகங்கள் எவ்வளவு காலம் நீடித்தது என்பதையும் மக்கள் புரியும்படி தெளிவாக வெளிக்கொணர்வது தலைவரின் கடமையாகும்.

இனி மேலும் இவ்வாறான விடயத்திற்கு இடமில்லை என்றுஅவர் கூறியிருப்பதானது இதற்கு முன் நிச்சயமாக நடந்த விடயங்களுடன் துல்லியமாக உடன்படும் கருத்தேயாகும். இவ்விடயம் பற்றி தலைமை முழுமையாகப் பகிரங்கப்படுத்தும் போது கடந்த 16 வருடங்களாக அவரது தலைமை நிமிர்ந்து நின்று நிலைத்த வரலாற்றையா அல்லது சரணடைந்து சரிந்தவரலாற்றையா வெளிப்படுத்துகிறது என்பது மக்களுக்குத் தெளிவாகும். ஆகையால் இவ்விவரணம் கட்சியைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஒருமைல் கல்லாக அமையும்.

இதே வேளை எந்தவொரு அரசியல் தலைவரினதும் கண்ணுக்குப் புலப்படாத தனிப்பட்டவாழ்க்கை தொடர்பில் எவ்வித இரகசியங்களின் தடயங்களும் என் வசமில்லை என்பதை பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களின் அந்தரங்கங்களை வெளிப்படுத்துவதாகக் கூறி மிரட்டல் விடுத்து எனது அரசியலைச் செய்து வருகிறேன் என்று ஒருசாரார் குடுகுடுப்பைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தனிப்பட்ட அரசியல் வாதிகளின் சபலங்கள் முஸ்லிம் அடையாள அரசியலைப் பலி கொண்டு விடக்கூடாது என்பதில் கடந்த பதினைந்து வருடங்களாக மிக்க கரிசனையுடன் இயங்கி வந்துள்ளேன்.

அஷ்ரஃபின் காலம் தொடங்கி தனி அரசியல் தலைவர்களை அழித்து விட்டால் முஸ்லிம் தேசிய இனத்துவ அரசியலை அழிக்க முடியும் என்று நம்பி அரசியல் வாதிகளில் சிலர் செயல் பட்டுவந்தனர். இந்த நம்பிக்கை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை நான் ஊகித்து அறிந்த காரணத்தினால் இக்கோட்பாட்டுக்கு எதிராக 2000ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தீவிரமாகச் செயற்பட்டிருந்தேன். எனது அந்தக் கால கட்ட அர்ப்பணிப்பு என்பது 2005ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையுள்ள 11 ஆண்டுகளாக முஸ்லிம் காங்கிரஸை வீழ்ந்து விடாது வைத்திருக்கும் காரணிகளில் ஒன்றாகும்.

மற்றும்,அடுத்தவரின் அந்தரங்கங்களை மூலதனமாக்கி சொந்த அரசியலை கட்டமைக்கும் மூன்றாந்தரச் செயலை எனது வரலாற்றில் என்றுமே நான் செய்ததில்லை. முஸ்லிம்களின் தனித்துவ அரசியலில் தனி நபரைக் காப்பாற்றுவதன் மூலம்தான் கட்சியையும் காப்பாற்ற முடியும் என்ற ஒரு கால கட்டத்தைக் கடந்து தனி நபர்களிடமிருந்து கட்சியைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நிலை இன்று தோன்றியுள்ளது.

இருந்த போதிலும் தனியொரு அரசியல் தலைவரின் நன்னடத்தையைக் கேள்விக்குட்படுத்தி அவரை சமுதாயத்தின் முன் தலை குனியச் செய்துவிட்டால் அவர் தலைமை தாங்கும் சமூகத்தின் அரசியலை வீழ்ச்சியடையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கைக்கு எதிராகத்தீவிரமாகச் செயற்பட்ட நான், இன்று எதனடிப்படையில் ஒரு தலைமையின் தனிப்பட்ட வாழ்வின் பலவீனங்களைப் பற்றி பறைசாற்ற முடியும்?

தலைவர் அஷ்ரஃபுக்குப் பிந்தியசவால் மிகுந்த முஸ்லிம் தேசிய இனத்துவ அரசியலில் முஸ்லிம் காங்கிரஸைத் தக்கவைப்பதில் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்துள்ளேன். பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விடுப்பட்டுள்ள இன்றைய சூழலில் இந்தத் திருப்தி எனக்குப் போதுமானதாகும்.

எனது பொதுவாழ்வில் நிகழ்ந்தேறிய ஆவணப்படுத்தத் தகுதி பெற்றஅரசியல் வரலாற்றுத் தடயங்களைத் தவிர ஏனைய அனைத்து கசப்பான சம்பவங்களையும் எனது நினைவுக்கிடங்கிலிருந்து அப்புறப்படுத்தி நீண்டகாலமாகிவிட்டது. பொய்மைகளை உண்மைகளால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையுள்ள ஒருவர் அந்தரங்கவிடயங்களைப் பாவித்து அரசியல் செய்ய மாட்டார் என்பதை புரிந்துகொள்ளுமாறு இவ்விடத்தில் வேண்டி நிற்கிறேன்.

சமூக விடுதலை என்பது சாகசங்களினாலோ,வெற்றுக் கோசங்களினாலோ அன்றி சாதுரியங்களினாலும், தியாகங்களினாலும் மாத்திரமே சாத்தியமாகும் என்பதை பிரதிநித்துவ அரசியல் செய்யும் தலைவர்கள் கருத்திலே கொள்வது அவசியமாகும்.

இறுதியாக முஸ்லிம் மக்களின் தனித்துவ அரசியலைக் காப்பாற்றுவதற்கு நெருக்கடிகள் மிகுந்த அன்றைய கால கட்டத்தில் பெரும் பங்களிப்பை நல்கிய இலத்திரனியல்,அச்சு ஊடகங்களை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்ற அதேவேளை கட்சியைத் தூய்மைப்படுத்தும் எனது போராட்டத்தை மழுங்கடிக்கும் பிரச்சாரங்களை பொருட்படுத்தாது இப்போராட்டத்தில் மக்கள் கைகோர்த்து நிற்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY