கோழி இறைச்சிக் கடையில் பணம் திருடிய இருவர் கைது

0
190

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

arrested2மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி நகரப் பகுதியில் அமைந்திருக்கும் கோழி இறைச்சி விற்பனைக் கடையில் புகுந்து 15 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் இருவர் செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016) கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, செங்கலடியில் கோழி இறைச்சிக் கடை வைத்திருக்கும் மாரிமுத்து தங்கராஜா (வயது 58) என்பவர் திங்கட்கிழமை மாலை (ஜுன் 27, 2016) தனது கோழிக்கடையின் பின்புறமாக நின்று துப்புரவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது சடுதியாக கடைக்குள் நுழைந்த மூவர் கடைக்குள் பொலித்தீன் பையில் போடப்பட்டிருந்த தனது பணம் 15 ஆயிரம் ரூபாவை திருடிச் சென்றுள்ளனர்.

ஆட்களை துரத்திப் பிடிக்க முற்பட்டபோதும் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். எனினும், திருடர்களை அடையாளம் கண்டு கொண்டதால் அதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கமைய பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

மற்றைய நபர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் காளிகோயில் வீதி ஏறாவூர் 4 பகுதியைச் சேர்ந்த முறையே 22 மற்றும் 36 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜராக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY