பதவி நோக்கத்தில் யாருமே கட்சியை அடகு வைத்து பிழைப்பதற்கு இனிமேலும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்: மு.கா தலைவர் ஹக்கீம்

0
182

(விஷேட நிருபர்)

Rauf Hakeem in KKYஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையை பணயக்கைதியாக வைத்து இனிமேலும் அரசியல் செய்ய இடமளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இப்தார் வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் றஊப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் அவரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்;ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானாவின் அனுசரணையில் நடைபெற்ற இவ் இப்தார் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய றஊப் ஹக்கீம்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை அவமானப்படுத்துவதற்கும் மானபங்கப்படுத்துவதற்கும் கடந்த காலங்களில் அதை அடிப்படையாக வைத்து தங்களுடைய பதவிகளுக்காக பேரம் பேசியவர்கள் இனிமேலும் இந்தக் கட்சியின் தலைமையை பணயக் கைதியாக வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்பதை மிகவும் தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

யாரையும் இந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கம் கட்சிக்கு கிடையாது.

எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த தீர்மானங்கள் எதுவும் கட்சியினுடைய அரசியல் யாப்பின் படி எங்களுடைய பேராளர் மாநாட்டிலேதான் மாற்றப்பட முடியும்.

அதை தவிரவும் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்பதை மிகத்தெளிவாக நான் சொல்லியாக வேண்டும்.

அதே நேரம் கட்சி தலைமை இந்த விடயங்களிலே உறுதியாக இருக்கின்றது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

கட்சிக்குள் இருந்து எந்தப் போராட்டதையும் செய்யுங்கள், ஆனாலும் கட்சி எடுத்த தீர்மானங்கள் என்பது உரிய முறைப்படிதான் மாற்றப்பட முடியுமோ தவிர, அது நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட தீர்;மானங்கள் எதுவுமே மாற்றப்பட முடியாது.

பதவி நோக்கத்திலே யாருமே இந்தக்கட்சியை அடகு வைத்து பிழைப்பதற்கு இனிமேலும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்பதை உறுதியாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இன்று இந்த நாட்டு அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னணியில் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் தலைமைகளில் மூன்று பிரிவினராக இருக்கின்ற தமிழ் மக்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், முஸ்லிம்களுடைய அரசியல் தலைமைகள் என்றவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸாகிய நாங்களும், அதே போன்று மலையக தலைமைகளும், ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற காலகட்டத்தில் இருக்கின்றோம்.

அக்கிரமமான ஒரு ஆட்சிக்காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்த நாட்டை சுபீட்சத்துக்கு கொண்டு வந்தது மாத்திரமல்ல, இனங்களுக்கிடையிலே நல்லிணக்கத்தை இதயபூர்வமாக ஏற்படுத்துகின்ற நல்ல முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் ஆளுக்கு ஆள் தர்க்கித்துக் கொள்கின்ற ஒரு சூழலை எங்களுக்குள்ளே உருவாக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும்.

நல்லெண்ண முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் பின்னணியில் இன்னும் குழப்ப சூழலை உருவாக்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளாமல் விதம் விதமான போர்வைகளிலே குழப்ப சூழலை ஏற்படுத்த முற்படுகின்றனர்.

சில நல்லெண்ண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் நல்ல ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுக்கான அறிவிப்புக்கள் அடுத்தவாரம் வரவிருகின்றது’ என இவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்;ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY